பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, உரிய காலத்தில் திருப்பி செலுத்தவில்லை.
வங்கிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எவ்வளவோ முயற்சி செய்தும் அவரிடம் இருந்து கடன் தொகையை திருப்பி பெற இயலவில்லை. இதைத் தொடர்ந்து வங்கிகள் ஒன்றிணைந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. விஜய் மல்லையாவை கைது செய்ய கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது. ஆனால் மார்ச் மாதம் 2–ந்தேதியே விஜய் மல்லையா வெளிநாட்டு தப்பி சென்றுவிட்டது பிறகு தான் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் விஜய் மல்லையா இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி சென்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக பண்ணை வீடு உள்ளது. தற்போது அவர் அங்குதான் உள்ளார்.
விஜய் மல்லையா கர்நாடகா மாநிலத்தில் இருந்து சுயேட்சை எம்.பி ஆக பாராளுமன்ற மேல்சபைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பி கொடுக்காததால் அவரது எம்.பி.பதவியை பறிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதை அறிந்த விஜய் மல்லையா தாமாகவே முன்வந்து மேல்சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து கடந்த மாதம் அவரது பாஸ்போர்ட்டை மத்திய அரசு ரத்து செய்தது.
இதற்கிடையே கடந்த மாதம் 29–ந் தேதி இங்கிலாந்து நாட்டுக்கு மத்திய அரசு, “விஜய் மல்லையாவை ஒப்படையுங்கள்” என்று முறைப்படி வேண்டுகோள் விடுத்தது. அது பற்றி இங்கிலாந்து அரசு ஆய்வு செய்து வந்தது.
இந்த விவகாரத்தில் முடிவு எடுத்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை இன்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், “விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “1971–ம் ஆண்டு சட்டப்படி இங்கிலாந்தில் இருக்கும் தனிநபர் ஒருவர் செல்லத்தக்க பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் இந்தியாவுக்கு மல்லையா மீதான குற்றச்சாட்டின் தீவிரத்தின் அடிப்படையில் உதவ இங்கிலாந்து அரசு தயாராக இருப்பதாகவும் அந்நாடு அறிவித்துள்ளது.
இந்தியா, பரஸ்பரம் சட்ட உதவி மூலமாகவோ அல்லது பிடித்து ஒப்படைக்கும் படி கேட்டுக் கொண்டால் அது பற்றி பரிசீலினை செய்யப்படும் என்று இங்கிலாந்து அறிவித்துள்ளது. இங்கிலாந்தின் அறிவிப்பு சற்று பின்னடைவாக கருதப்பட்டாலும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வந்துவிட முடியும் என்று கூறப்படுகிறது.
இந்தியா – இங்கிலாந்து நாடுகளிடையே பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் 1992–ம் ஆண்டு செய்யப்பட்டுள்ளது. அது போல குற்றச்செயல்களில் ஈடுபடும் இந்தியர்களை பிடித்து ஒப்படைப்பதற்கான சட்டத்தில் இங்கிலாந்தும் இந்தியாவும் 1993–ம் ஆண்டு கையெழுத்திட்டுள்ளன.
எனவே இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் விஜய் மல்லையாவை இங்கிலாந்து உதவியுடன் இந்தியா பிடித்து வரும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.