அவசரமாக நிறுவப்பட வேண்டிய முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு

rauff hakeem athaullah risath hasan ali
‘ஒற்றுமை எனும் கயிற்றை இறுக்கப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று இஸ்லாமிய மார்க்கம் சொல்கின்றது. அந்த மார்க்கத்தை பின்பற்றுகின்ற இலங்கை முஸ்லிம்களே இன்று தமக்கிடையே ‘மதம்’ என்ற விடயம் தவிர வேறு எந்தவொரு அடிப்படையிலும் ஒற்றுமை அற்றவர்களாக இருக்கின்றனர். முஸ்லிம்களை சமூக சிந்தனையின் அடிப்படையிலோ, மதத்தை கடைப்பிடிக்கும் அடிப்படையிலோ அல்லது அரசியல் அடிப்படையிலோ ஒரு குடையின் கீழ் கொண்டு வருவது என்பது, நடைமுறைச் சாத்தியம் அற்றதாகவே ஆகிவிட்ட காலமொன்றில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 

 
முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் இரண்டு விஷயங்கள் மலிந்து கிடக்கின்றன. இதைச் சொல்வதற்காக யாரும் கோபித்துக் கொள்ளக்கூடாது. முதலாவது, முஸ்லிம்களிடையே உருவாகி இருக்கின்ற மார்க்க ரீதியான இயக்கங்களும் கொள்கைகளும் ஆகும். இரண்டாவது, முஸ்லிம்களிடையே உருவெடுத்திருக்கும் அரசியல் சார்ந்த பிளவுகளாகும். முன்னொரு காலத்தில் முஸ்லிம்களிடையே மார்க்க ரீதியான மாற்றுக் கருத்தியல்கள் இருந்ததில்லை என்பதால் இஸ்லாமிய இயக்கங்களும் பெரிதாக உருவாகி இருக்கவில்லை. ஆனால், அரசியலைப் பொறுத்தமட்டில் முஸ்லிம்கள் எக்காலத்திலும் ஒரு அரசியல் கொள்கையின் கீழ் அணிதிரண்டவர்கள் அல்லர். 

 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்று பல கட்சிகளுக்கு குடை பிடிப்பவர்களாகவே முஸ்லிம்கள் இருந்திருப்பதை வரலாற்றில் காண்கின்றோம். பிறகு முஸ்லிம்களுக்கு என்று தனித்த அடையாள அரசியல் உருவாகி விட்டது. இருப்பினும் இன்றும்கூட அரசியல் கட்சிகள் என்ற கோதாவில் இலங்கை முஸ்லிம்கள் பிரிந்து நிற்கின்றனர். இவர்கள் கொள்கைகள் அடிப்படையில் பிரிந்து செயற்பட்டால் கூட பரவாயில்லை. ஆனால் சுயலாப நிலைப்பாடுகளின் அடிப்படையில் துண்டங்களாக பிரிவுபட்டு சிதறுண்டுள்ளமை மிகவும் மனம் வருந்தத்தக்கது. 

cegu segu
அதிகப்படியான பிளவுகள்

 
மிகவும் இலகுவாக ஒன்றுதிரள கூடிய சமூகமாக முஸ்லிம்களே உள்ளனர். ஏனெனில் எல்லா முஸ்லிம்களினதும் அடிப்படை இறைவழிபாட்டு கோட்பாடு ஒன்றேயாகும். அத்துடன் ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழுகைக்காகவும், வாரத்தில் ஒரு தடவை குத்பா பிரசங்கத்திற்காகவும் அவர்கள் ஒன்று சேர்கின்றனர். எனவே முஸ்லிம்களை ஓரணியில் திரளவைப்பது ஒப்பீட்டளவில் இலகுவானது என்று ஒரு ஆய்வாளர் குறிப்பிட்டிருந்ததை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். ஆனால், முஸ்லிம்களே இன்று குறிப்பாக அரசியல் ரீதியான பிரிவுகளை அதிகமதிகம் சந்தித்திருக்கின்றனர். இது முஸ்லிம் அரசியல்வாதிகளின் பிரித்தாளும் தந்திரத்தின் பக்க விளைவு என்பதை மறுதலிக்க முடியாது. 

 
மக்களை எல்லா அடிப்படைகளிலும் பிரித்துப் பிரித்து அரசியல் செய்வதில் முஸ்லிம் அரசியல்வாதிகளும் கட்சித் தலைவர்களும் கில்லாடிகள். அரசியலைப் பொறுத்தமட்டில் காலத்திற்கு ஏற்றவாறு நிலைப்பாடுகள் மாறலாம், ஆனால் கொள்கைகள் மாறக் கூடாது. இருந்தாலும் அநேகமான முஸ்லிம் அரசியல்வாதிகளின் கொள்கை என்ன என்பது அவர்களுக்கே தெளிவில்லாத விடயமாக இருக்கின்றது. பதவியும் பணமும் கிடைத்தால் கொள்கைகளை மாற்றிக் கொள்கின்ற அரசியல்வாதிகளையே பெரும்பாலும் முஸ்லிம்கள் பிரசவித்திருக்கின்றார்கள். ஊர் வாரியாக, பிராந்திய ரீதியாக வியாபித்துச் செல்லும் அரசியலாலும் பிரித்தாளும் தந்திரத்தாலும் அரசியல்வாதிகளும் தலைவர்களும் வளர்கின்றார்களே அன்றி, மக்களுக்கு கிடைத்த உருப்படியான பயன் ஒன்றும் இல்லை.

 

 

‘தண்ணீருக்கு ஒன்றும் தவிட்டுக்கு ஒன்றும் இழுத்துக் கொண்டிருப்பதாலேயே’ முஸ்லிம் சமூகம் என்ற இந்த மாட்டுவண்டி குடைசாய்ந்து கிடக்கின்றது என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். இதன் காரணமாகவே, முஸ்லிம் அரசியல் கட்சிகளும் பிரதான கட்சிகளுடன் உள்ள அரசியல்வாதிகளும் இணைந்தியங்கும் ஒரு முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தேவைப்பாடு காலத்தால் உணரப்பட்டிருக்கின்றது. 
‘முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுபடுதல்’ என்ற கருத்திட்டம் மூன்று விதமாக நோக்கப்படாலாம். ஒன்று, தேர்தல்கால நலன்களை முன்னிறுத்தி முஸ்லிம் கட்சிகள் கைகோர்த்துக் கொள்வது.

 

இரண்டாவது, முஸ்லிம் கட்சிகள் மற்றும் எல்லாம் அரசியல் மற்றும் சமூக நலனை முன்னிறுத்தி ஒரு தேசிய கூட்டமைப்பாக தம்மை நிறுவிக் கொள்வது. மூன்றாவது, தனித்தனி கட்சிகளில் அரசியல் செய்தாலும் மக்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகின்ற போது எல்லோரும் பேதங்கள் மறந்து அதற்காக ஒருமித்து குரல் கொடுப்பது ஆகும். நம்முடைய அனுபவங்களின் படி, இதுவரை காலமும் இதிலுள்ள முதலாவது வகை ஒன்றுபடுத்தலே அத்திபூத்தாற்போல அவ்வப்போது சாத்தியமாகி இருக்கின்றது. ஆனாலும், அதையும் தாண்டி எப்பாடுபட்டாவது இரண்டாவது வகை ஒன்றுபட்ட இயக்கப்பாடான முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை நிறுவுவது அவசரமான ஒரு பொதுத் தேவைப்பாடாக இன்று காணப்படுகின்றது.

Basheer Sekudavuth_CI
அனுபவப் பாடம்

 

உலக நாடுகள் ஓன்றுபட்டதன் மூலம் நன்மைகளை அனுபவித்த பல சந்தர்ப்பங்களை நாம் வரலாற்றினூடு கண்டிருக்கின்றோம். இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்த பிறகு இன்னுமொரு உலக யுத்தம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய நாடுகளின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சார்க் அமைப்பு போன்ற சர்வதேச அமையங்கள் தமது இலக்குகளில் முன்னேறாமல் இல்லை. தலித் மக்களும் குரலற்ற சமூகங்களும் கூட தமது உரிமைகளுக்காக குரல்கொடுப்பதற்காக ஒன்றிணைய முன்வந்து கொண்டிருக்கின்ற ஒரு யுகத்தில், ஒரு சமூகம் பட்டுத் தேறுவதற்கு போதுமான அனைத்து வகையான அனுபவங்களையும் பெற்றுள்ள இலங்கைச் சோனகர்களின் பிள்ளைகள் இன்னும் தமக்குள் அரசியல் ரீதியாக ஒற்றுமைப்படாத இருப்பது மிகப் பெரிய கைசேதமன்றி வேறொன்றுமில்லை. 

 
முஸ்லிம்களாகிய நாம் சர்வதேச நாடுகளை முன்னுதாரணமாக எடுக்க வேண்டியதில்லை. நமக்கு முன்னே, நமது பக்கத்து வீட்டிலேயே நல்லதொரு உதாரணம் எழுந்து நிற்கின்றது. அதாவது, இலங்கை தமிழர்களும் அவர்களுடைய அரசியலும் ஆகும். தமிழ் கட்சிகள் பல இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதை நாமறிவோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதன் கலவை என்னவென்றும் நமக்கு தெரியும். மிகத் தொன்மையான தமிழரசுக் கட்சியுடன் புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற பல இயக்கங்கள் இணைந்தே இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள அநேக இயக்கங்கள் முன்னொரு காலத்தில் ஆயுதங்களின் துணைகொண்டு செயற்பட்ட எழுச்சி இயங்கங்களாகும். இவையெல்லாம் ஒன்றிணைந்து தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகின்றது என்பது, ஆயுதங்ளால் சாதிக்க முடியாத விடயங்களும் உள்ளன என்பதையும், ஒன்றுதிரண்ட பலத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. 

M.H.A.-Haleem-Minister-e1447495186102
வேற்றுமைகள் கடந்து
தமிழர்களுக்குள் மாற்றுக் கருத்துக்கள் அல்லது அரசியல் சார்ந்த இயக்க வேறுபாடுகள் இல்லையென்றா முஸ்லிம் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்? தமிழர்களுக்குள்ளும் ஏகப்பட்ட கருத்து முரண்கள் இருக்கின்றன. அழுத்தக் குழுக்கள் இருக்கின்றன. எல்லா தமிழ் கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் ஒரே விதமான கொள்கை கிடையாது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இயங்கும் தமிழர் அமைப்புக்கள் எல்லாம் ஒரே சித்தார்ந்தத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படுபவை அல்ல. ஆனால், தமிழர்களுக்கு ஏதாவது அநீதி இழைக்கப்படும் போது எல்லோரும் குரல் எழுப்புகின்றார்கள். தமிழர்களின் அபிலாஷைகளை கையாளும் பிரதான பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பாரம் கொடுத்திருக்கின்றார்கள் என்பதுதான் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை மற்றும் ஐக்கிய தமிழ் தேசிய முன்னணி போன்ற அமையங்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பால் நேரடியாக செய்ய முடியாத காரியங்களுக்கான வெளிப்புற அழுத்தத்தை பிரயோகிக்கும் அழுத்தக் குழுக்களாகவே இயங்கும் என்பதே விடயமறிந்த அநேகரின் அனுமானமாக இருக்கின்றது. 

 
இந்நிலைமை முஸ்லிம் சமூகத்தில் இல்லை. அளுத்கமவில் பற்றி எரிந்த போது இருந்த ஒற்றுமை, கிழக்கில் சுனாமி ஏற்பட்ட போது உருவான கைகொடுக்கும் தன்மை எல்லாம் அடுத்த வாரமே அடங்கிப் போனது. மக்களிடையே இவ்வாறான மனப்பாங்கு இருக்கின்றது என்றால், முஸ்லிம் கட்சிகளிடையேயான பிளவு இதை விட மோசமானதாகும்;. இதற்கு அடிப்படைக் காரணம் முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே காணப்படும் தேசியத் தலைமை என்ற மோகமும், பதவி பட்டங்கள் மீதான வேட்கையும் பணம் உழைக்கும் வியாபார புத்தியும் என்பதை அடித்துக் கூறலாம். யார் மக்களுக்கு சேவை செய்வது என்பதை விட, யார் மக்களிடம் பில்ட்அப் கொடுப்பது என்பதிலேயே போட்டி அரசியல் அகலக் காலூன்றியிருக்கின்றது எனலாம். 

 

kabir-hashim-720x480-450x300_Fotor
ஆயுத இயக்கங்களும் ஒரு அரசியல் கட்சிகளும் ஒன்றாக இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இயங்க முடியுமாக இருந்தால், அஷ்ரஃபின் முகாமில் அரசியல் பயின்று இன்று துருவங்களாகியுள்ள முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் ஏனைய அரசியல்வாதிகளாலும் ஏன் ஒன்றுபட்டு ஒரு முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை உருவாக்க முடியாது? மக்களுக்காக தமிழ் அரசியல்வாதிகளாலும் முன்னாள் போராளிகளாலும் ஓரணியில் திரள முடியும் என்றால், வெற்றுக் கோஷங்களால் மக்களை திருப்திப்படுத்த முனைகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் விடயத்தில் அது எங்ஙனம் சாத்தியமற்றுப் போகின்றது? தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படாமல் இருந்திருக்குமாயின், அவர்களது அரசியலின் நகர்வு இந்தளவுக்கு நேர்த்தியானதாக இருந்திருக்காது என்றே கூற வேண்டும். அதாவது ஒருமித்த நிலைப்பாடு ஒன்றுக்கு வரமுடியாமல் இலங்கைத் தமிழர்கள் இருந்திருக்க கூடும். 

 
ஆனால், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எத்தனையோ விடயங்களை சாதித்திருக்கின்றது. முஸ்லிம் அரசியல்வாதிகளைப் போல தமிழ் பிரதேசங்களில் கட்டிடங்கள் கட்டப்படாமல் இருக்கலாம். அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படாமல் இருக்கலாம். தமிழ் பிள்ளைகளுக்கு அரசியல் ஊடாக தொழில் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், உரிமை சார்ந்த விடயத்தில் தமிழர்கள் கடுமையாக முன்னோக்கி சென்றிருக்கின்றார்கள். இன்று உத்தேசிக்கப்பட்டிருக்கும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம், அரசியல் தீர்வுத்திட்டம் எல்லாம் முஸ்லிம்களின் உரிமைப் போராட்டத்திற்கு கிடைத்ததது என்று உரிமை கோர முடியாது. மாறாக, அதற்கு காரணம் தமிழர்களின் திடசங்கற்பம். பொது விடயங்களுக்காக ஒன்றுகூடும் பண்பு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒன்றிணைந்த அரசியல் என்பவையும் ஆகும். அதைவிடுத்து, விடுதலைப் போராட்டம் மட்டுமே இத்தனைக்கும் காரணமல்ல. 

 
வலுவடையும் உணர்வு
எனவே, முஸ்லிம்களும் இப்பாதையில் பயணிக்க முன்வருமாக இருந்தால் இன்னும் பல வருடங்களுக்குப் பின்னராவது முஸ்லிம்கள் தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அண்மைக்காலமாக, முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றி பேசப்பட்டாலும் அதை உருவாக்குவதற்கான பணிகள் விரைவாக இடம்பெறவில்லை. எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒரே காலத்தில் சமூகம் பற்றி சிந்தித்து தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டுமென எண்ணுவதில்லை. சிலருக்கு சமூகத்தில் பிரச்சினைகள் ஏற்படும் போதும், வேறுசிலருக்கு அரசியலில் பின்னடைவு ஏற்படும் போதுமே இதுபற்றிய சிந்தனை வருகின்றது. இது விடயத்தில் பூனைக்கு மணிகட்டுவது யாரென்ற கேள்வியும் இருக்கின்றது. 

ferial ashraff
ஆனால் முன்னரை விட இப்போது முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தேவைப்பாடு வெகுவாக உணரப்படுகின்றது என்பதை தடித்த எழுத்துக்களால் எழுத வேண்டியுள்ளது.

 

அதனடிப்படையில், மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீன், அமைச்சர் ஹலீம், முன்னாள் அமைச்சர்களான பசீர் சேகுதாவூத், எம்.ரி.ஹசன்அலி, எம்.எச்.சேகு இஸ்ஸதீன் போன்ற பெயர் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பலர் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பிற்கான தமது ஆதரவை பல மாதங்களுக்கு முன்னரே வெளியிட்டு விட்டனர். பிரதான முஸ்லிம் கட்சி மாத்திரம் இன்னும் இது பற்றிய நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. எல்லா முடிவுகளையும் கடைசிவினாடியில் எடுத்துப் பழகிய அக்கட்சி இப்போதே இதுபற்றிய நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கவும் முடியாது. 

 
எவ்வாறிருப்பினும், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை நிறுவுவதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருப்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இதை நிறுவ வேண்டும் என்று அரசியல்வாதிகள் உணர்ந்து, பகிரங்கமாக பேசியதே நல்ல சகுணம் என்றே சொல்லலாம். இக் கூட்டமைப்புக்கு சமூகத்திலும் அரசியல் களரியிலும் பரவலான ஆதரவுகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றன. ஆனால் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை உருவாக்குவது ஒரு வாரத்திற்குள் நடந்து முடியக்கூடிய காரியமல்ல. நீண்ட காலம் எடுக்கும். ஒவ்வொரு கட்சியும் பல விடயங்களை விட்டுக் கொடுக்க வேண்டும்.

 

இருப்பினும், மு.தே.கூட்டமைப்பை நிறுவுவதில் இருக்கின்ற முதலாவது கேள்வி, யார் தலைவர்? சின்னம் என்ன என்பதாகும். 
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இரா. சம்பந்தனை நியமித்தது போன்ற தனித்தலைமையாக தொடர்ச்சியாக நியமிக்கும் அளவுக்கு முஸ்லிம் அரசியலில் ஒரு ஆளுமையை தேர்ந்தெடுக் முடியாத நிலை உள்ளது. எனவே, சுழற்சி முறையான தலைமைத்துவத்தை நியமிக்கலாம். அதேபோல் ஏதேனும் ஒரு கட்சியின் சின்னத்தை பொதுவான சின்னமாக ஏற்றுக் கொள்வதில் சிக்கல் இருந்தால், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்து சின்னமொன்றை பெறலாம்.

 

இவ்வாறெல்லாம், முற்போக்கு சிந்தனையாளர்கள் கற்பனை செய்து கொண்டிருக்கின்ற நிலையில், இவ்வாறான ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டால் தமது தேசிய தலைமைகள் என்ற அந்தஸ்து இல்லாது போய்விடும் என்று சில அரசியல்வாதிகள் நினைப்பதாக தெரிகின்றது. இதனால் முஸ்லிம்களின் அரசியல் கட்சிகள் சிதைவடைந்து விடும் என்று சிலர் கருதுகின்றனர். பிரதான முஸ்லிம் கட்சியை அழிக்கும் வேலைத்திட்டம் என்று சிலர் கதை புனைகின்றனர். இதுவெல்லாம் அற்பத்தனமான, குறுகிய மனப்பாங்குடனான சிந்தனைகளாகும். 

hisbullah hizbullah 1
இலங்கையில் எத்தனையோ நோக்கங்களுக்காக எத்தனையோ கூட்டமைப்புக்கள் அல்லது முன்னணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதிலுள்ள பிரதான கட்சி சுதந்திரக் கட்சியாகும். இன்னும் பல உதிரிக் கட்சிகளையும் இது கொண்டிருக்கின்றது. இவ்வாறு கூட்டமைப்பாக செயற்பட்டதால் சுதந்திரக் கட்சி அழிவடைந்து விட்டதா? அதேபோல், ஐக்கிய தேசிய முன்னணி என்ற அடிப்படையில் ஒரு கூட்டு கடந்த தேர்தல்களில் களமிறங்கியது. இதில் பிரதான இடம்வகித்தது ஐக்கிய தேசியக் கட்சியாகும். ஒரு முன்னணியாக செயற்பட்டதால் ரணில் விக்கிரமசிங்க வீழ்ச்சியடைந்து விட்டாரா? அவ்வாறு நடக்கவில்லை. 

 
இவையிரண்டும் பெரும்பாலும் தேர்தலை மையமாகக் கொண்ட கூட்டணிகள் என்று விவாதிக்க முற்படுவோர், நாம் மேலே குறிப்பிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை எடுத்து ஆராய முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் பிரதான கட்சி தமிழரசுக் கட்சியாகும். இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு அரசியல் கட்சியான தமிழரசுக் கட்சியானது, இரு இயக்கங்களுடன் இணைந்து கொண்டமையால் தமிழரசுக் கட்சி அழிவடைந்து விட்டதா? அதன் தலைமைத்துவம் காணாமல் போய்விட்டதா? இல்லாவிட்டால் சில முஸ்லிம்கள் இன்று கவலைப்படுவது போல், இது பிரதான கட்சியை அழிப்பதற்கான திட்டம் என்றால், தமிழரசுக்கட்சியின் இடத்தை வேறெந்த கட்சியும் பிடித்து விட்டதா? இது எதுவும் நடக்கவில்லை. மாறாக, தமிழரசுக் கட்சியால் தனித்து நின்று செய்ய முடியாத பல அசுரகாரியங்களைச் செய்து காட்டியிருக்கின்றது. 

 
எனவே, கற்பனாவாதத்திற்கு இடம்கொடுக்காமல், கட்டுக் கதைகளை கூறிக் கொண்டிருக்காமல் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். கிழக்கிலுள்ள முஸ்லிம்களின் பிரச்சினையும் வடக்கு, கிழக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிம்களின் பிரச்சினையும் சற்றே மாறுபட்டன என்பதே யதார்த்தமாகும். என்றாலும், ஒற்றுமை பற்றி கோஷமெழுப்பி, தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒன்றை உருவாக்கி விட்டு அதில் வடக்கு, கிழக்கிற்கு வெளியிலுள்ள முஸ்லிம்களை புறக்கணிப்பது நல்லதல்ல. எனவே, அமைச்சர் ஹலீம் போன்று, இந்த கூட்டமைப்பிற்குள் அங்கம்பெற விரும்பும் ஏனைய பிரதேச அரசியல்வாதிகளையும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உள்வாங்கிக் கொள்ள வேண்டும். 

 
அந்தக் கூட்டமைப்பிற்குள் உள்வருவதற்காக விட்டுக் கொடுப்புக்களை செய்வதற்கு பல அரசியல்வாதிகள் முன்வந்திருக்கின்றமை பாராட்டத்தக்கது. இனிவரும் காலங்களில் புதிய தேர்தல் முறைமையின் கீழ் அவசியம் ஏற்படுமிடத்து, முஸ்லிம் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒரு சின்னத்திலோ அல்லது தனித்தனி சின்னங்களிலோ தொகுதிகளில் போட்டியிடலாம். அது வேறு விடயம். ஆனால், இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு ஏதாவது அநியாயம் நடக்கின்ற போது கூட்டமைப்பு முன்னிற்கும். 

 

 

முஸ்லிம்களின் அபிலாஷைகளை, பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான கூட்டு அழுத்தத்தை பிரயோகிக்கும். 
இவ்வாறு, ஒரு தேசிய கூட்டமைப்பு உருவாகிவிட்டால் சாரை சாரையாக முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டமைப்பிற்குள் வந்து இணைவார்கள். டக்ளஸ் தேவானந்தா போன்று, ஆனந்தசங்கரி போன்று தனித்து நின்று செயற்படுவதற்கு எந்தப் பெரிய முஸ்லிம் அரசியல்வாதியாலும் முடியாமல் போகும். அவ்வாறு, முஸ்லிம் தேசிய கூட்டமைப்பிற்கு வெளியில் இருந்து செயற்படும் அரசியல்வாதிகளும் கட்சியும் மக்களுக்கு அடையாளம் காட்டப்படுவதுடன், கால ஓட்டத்தில் காணாமல் போய்விடுதே யதார்த்தமாகவும் இருக்கும். 

 

– ஏ.எல்.நிப்றாஸ் (நன்றி: வீரகேசரி) 

nifras