வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழ் பெரும்பான்மை மாநில சுயாட்சித் தீர்வு அமைய வேண்டும் என கிழக்கு மாகாண சபையிலும் பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்தை அந்த மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் வன்மையாக கண்டித்துள்ளார்.
வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழ் பெரும்பான்மை மாநில சுயாட்சித் தீர்வு அமைய வேண்டும் என வடக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது போன்று கிழக்கு மாகாண சபையிலும் பிரேரணை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் சில தினங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பில் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
“வடக்கு- கிழக்கு இணைப்பு என்பது முஸ்லிம்களினால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பாரதூரமான விடயமாகும். இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லிம்களை கணக்கில் எடுக்காமல் ஒருதலைப்பட்சமாக அவ்விரு மாகானங்களும் இணைக்கப்பட்ட விடயமானது முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமைச்சாசனம் என்று எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பினால் வர்ணிக்கப்பட்டது.
அக்காலப் பகுதியில் நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கென்று ஒரு தனித்துவமான கட்சியோ பிரதிநிதிகளோ இருக்கவில்லை. முஸ்லிம்கள் மீதான தமிழ் ஆயுதக்குழுக்களின் இனச்சுத்திகரிப்பு, வடக்கு- கிழக்கு இணைப்பினால் முஸ்லிம்கள், தமிழ் பேரினவாதத்திற்கு அடிமைப்படுத்தப்பட்டது போன்ற சம்பவங்களே முஸ்லிம் காங்கிரஸ் எனும் தனித்துவ அரசியல் கட்சி உருவாக காரணமாக அமைந்திருந்ததை இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகமூட்ட விரும்புகின்றேன். சுமார் இரு தசாப்த காலம் இணைந்த வடக்கு- கிழக்கு நிர்வாகத்தில் அநியாயங்களையும் கசப்பான உணர்வுகளையும் முஸ்லிம்கள் எதிர்கொண்டிருந்ததை இலகுவில் மறந்து விட முடியாது.
வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழ் பெரும்பான்மை மாநில சுயாட்சித் தீர்வு அமைய வேண்டும் என வடக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டமையானது தென்னிலங்கையில் பாரிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கின்றது. சிலவேளை அது தீர்வு முயற்சிகளுக்கு பாரிய முட்டுக்கட்டையாக அமையலாம் என புத்திஜீவிகளினால் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களின் எவ்வித உடன்பாடுமில்லாமல் அதனை வடக்குடன் இணைக்க வேண்டும் என தமிழர் தரப்பு ஒற்றைக்காலில் நிற்பதானது எமக்கு பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. தமிழ்- முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் ஒற்றுமைப்படுவதன் மூலமே இரு சமூகங்களும் விடுதலைக்கான தீர்வைப் பெற முடியும் என தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் சுமந்திரன் போன்றவர்கள் ஊடகங்களில் வலியுறுத்தி வருகின்ற சூழ்நிலையில் அக்கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வடக்கு மாகாண சபை ஒருதலைபட்சமாக தீர்மானம் நிறைவேற்றி, முஸ்லிம்கள் தமிழினத்தின் அடிமைச் சமூகமே என்று நிரூபிக்க முற்பட்டிருப்பதன் மர்மம் என்ன?
தமிழ் கூட்டமைப்பின் தீர்வுத் திட்டம் என்ன என்பது இன்னும் வெளியிடப்படாதுள்ள சூழ்நிலையில் வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தை அக்கூட்டமைப்பின் மட்டு மாவட்ட எம்.பி.யோகேஸ்வரன் முற்றுமுழுதாக சரி கண்டிருப்பது மட்டுமல்லாமல் அது போன்று கிழக்கு மாகாண சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பது ஏன்? அவ்வாறாயின் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவர்களும் இத்தீர்மானத்திற்கு மறைமுகமாக அங்கீகாரம் வழங்கியுள்ளனரா?
முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாணத்தில் அதுவும் முஸ்லிம் முதலமைச்சர் பதவியில் இருக்கின்ற நிலையில் இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கும் அளவுக்கு தமிழ் எம்.பி.க்களுக்கு எங்கிருந்து துணிச்சல் வந்துள்ளது? இப்படி கோருவதற்கு அவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?
எவ்வாறாயினும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இதற்கு உடன்பட்டு, கிழக்கு முதலமைச்சருக்கு பணிப்புரை விடுத்தாலும் கூட அக்கட்சியிலுள்ள எந்தவொரு சமூகப் பற்றுள்ள மாகாண சபை உறுப்பினரும் அதற்கு துணைபோய் சமூகத்திற்கு துரோகமிழைக்க மாட்டார்கள் என நான் திடமாக நம்புகின்றேன்.
இன்று கிழக்கிலுள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் அவர்கள் சார்ந்த சிவில் சமூக அமைப்புகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளும் வடக்கு- கிழக்கு மீளவும் இணைக்கப்படக் கூடாது என ஒருமித்த நிலைப்பாட்டில் பகிரங்கமாக குரல் எழுப்பி வருகின்றபோது முஸ்லிம் காங்கிரஸ் மட்டும் இணைப்புக்கு பச்சைக்கொடி காட்டும் வகையில் செயற்பட்டு வருவதை எம்மால் காண முடிகிறது. இத்தகைய துரோகத்தனங்களை முஸ்லிம் சமூகம் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டாது. மு.கா.தலைமையை வளைத்துப்போட்டு கிழக்கு முஸ்லிம்களை அடிமைப்படுத்தலாம் என யோகேஸ்வரன் போன்ற தமிழ் எம்.பி.க்கள் நினைப்பார்களானால் அது பகற்கனவாகே இருக்கும்” என்று கலாநிதி ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.