சத்தார் எம் ஜாவித்
நாட்டிற்கும் நாட்டு மக்களும் உயிர் நாடியாக இருப்பவர்கள் தொழிலாளர்கள் என்றால் அது மிகையாகாது. அந்தளவிற்கு ஒவ்வொரு தொழிலாளர்களினதும் உழைப்பும், முயற்சியும் நாட்டையும், நாட்டு மக்களையும் உயிர்ச்சியடையச் செய்கின்றது. இதன் காரணமாகவே சர்வதேச ரீதியாக தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது.
இந்தவகையில் தொழிலாளர்கள் சமுகம் என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒரு குழுவினர் எனலாம். அவர்களின் மட்டில்லா அர்ப்பணிப்பு இல்லா விட்டால் நாடோ அல்லது அந்த நாட்டு மக்களோ முன்னேற்றம் அடைவது என்பது எட்டாக்கணியாகும். பொருளாதார அடிப்படையில் இவர்களின் பங்களிப்பு மிக மிக அவசியமானது என உணரப்பட்டுள்ளதை இங்கு குறிப்பிடலாம்.
உலக நாடுகளைப் பொருத்தவரை ஒவ்வொரு நாடுகளிலும் வருடா வருடம் விதவிதமான தொணிப் பொருள்களில் சர்வதேச தொழிலாளர் தினத்தினைக் கொண்டாடுகின்றனர். இவ்வாறு கொண்டாடப்படும் தொழிலாளர் தினம் மூலம் அவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் அல்லது அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றதா? என்பதனைப் பார்க்கும்போது அந்த விடயத்தில் பின்நோக்கிய செயற்பாடுகளையே கண்டு கொள்ளக் கூடியதாகவுள்ளது.
எந்தவொரு நாட்டிலும் எதிர்பார்த்த பலனை அல்லது முன்னேற்றத்தினை தொழிலாளர்கள் அடைந்து கொண்டதற்கான செயற்பாடுகள் குறைவாகவே காணப்படுகின்றன. மேதினம் மூலம் அப்பாவித் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடையும் நிலைமைகளே அதிகமாக காணப்படுகின்றன. காரணம் மேதினத்தின்போது அரசியல் தலைமைகளும், ஆட்சியாளர்களும் பல்வேறு விதமான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்குவார்களே தவிர அது மறுநாள் மறந்து ஆறிய கஞ்சி பலங்கஞ்சி என்ற நிலைக்கு வந்து விடுவதுடன் அதனைப்பற்றி யாரும் கதைக்கவும் முன்வருவதில்லை.
அதிகமாக வளர்முக நாடுகளில் உள்ள மக்களே தொழில் ரீதியான பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். காரணம் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் தொழில்களைப் பெறுவதில் கஷ்ட நிலைமைகளும், தொழிலுக்கான ஊதியங்களும் மிகக் குறைவாக உள்ளதால் அது வளர்முக நாடுகளின் நடுத்தர மற்றும் கீழ் மட்ட மக்களை வெகுவாகப் பாதிக்கின்றன என்ற விடயம் சர்வதேச அவதானிப்புக்கள் மூலம் புலப்படுகின்றதுடன் இது பாரிதொரு பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளதை அறிய முடிகின்றது.
இந்தவகையில் இலங்கையும் ஒரு வளர்முக நாடாக இருக்கின்ற அதேவேளை கடந்த மூன்று தஸாப்தகாலம் யுத்தம் என்ற அரக்கனுக்குள் தாண்டவமாடி குறிப்பாக வடகிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமது உயிர், உடமைகளுடன் தொழில்களையும் முற்றாக இழந்து அரசினதும், நலன் விரும்பிகளினதும் கரங்களை எதிர்பார்த்தவர்களாக இருந்து வந்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு யுத்த வெற்றிக்குப் பின்னர் ஓரளவு மீட்சி பெறத்துடித்த வேளையில் அது தொடர்ந்து கைகொடுக்க முடியாத நிலையில் காணப்பட்டனர்.
காரணம் அரசியல் வாதிகளினதும், ஆட்சியாளர்களினதும் ஏமாற்று வித்தைகளும் மக்களின் தொழில் துறைகளை சூறையாடிய விடயம் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் அதாளபதாளத்திற்கு இட்டுச் சென்று விட்டது. யுத்தத்திற்குப் பின்னர் கொண்டாடப்பட்ட மேதினக் கொண்டாட்டங்கள் எல்லாம் வடகிழக்கு தொழிலாளர்களுக்கு குறிப்பாக தொழில்களை இழந்தவர்களுக்கு எந்த விதத்திலும் வெற்றியைக் கொடுத்ததாக அமையவில்லை.
இலங்கையில் தொழில் ரீதியாக வடகிழக்கு மக்களும், மலையக மக்களும் பாரிய பாதிப்புக்களை எதிர் கொள்வதுடன் பின்னடைவுகளுக்கும் முகங்கொடுத்துக் கொண்டே வருகின்றனர். இவ்வாறான நிலையில் இந்த பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டிய பொறுப்பும், கடப்பாடும் புதிய தேசிய நல்லிணக்க அரசிக்கேயுள்ளது என வழியுறுத்தப்பட்டு வருகின்றது.
இந்தவகையில் இன்றைய மேதினத்திலாவது சிறுபான்மை மக்களின் தொழில் உரிமைகளும், சலுகைகளும் உறுதிப்படுத்தப்படுமா? என்ற ஆதங்கத்துடனேயே பெருந்திரலாக மக்கள் அரசின் மீது நம்பிக்கைவைத்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வடகிழக்கு மக்களைப் பொருத்தவரை அவர்களின் வாழ்வாதரப் பிரச்சினையில் முக்கிய பங்கு வகிப்பது தொழில் பிரச்சினையாகும். இது சரியான முறையில் கிட்டாத காரணத்தினால் தான் வடகிழக்கு மக்களில் அதிகமானவர்கள் அரசினதும், அரச சார்பற்ற நிறுவனங்களினதும் உதவிகளை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதேபோல் மலையக தோட்டத் தொழிலாளர்களை எடுத்துக் கொண்டால் இவர்கள் இந்த நாட்டின் உயிர் நாடியாக காணப்படுகின்றனர். ஆனால் இவர்களை ஆட்சியாளர்களோ அல்லது அரசியல் தலைமைகளோ கண்டு கொள்வதுமில்லை, அவர்களின் வாழ்வாதார விடயங்களில் கவனஞ் செலுத்துவதுமில்லை. இன்று வரை தோட்டத் தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு தமது உயிரைப் பனயம் வைத்து கொட்டும் மழையிலும், கடும் வெயிலிலும் தேயிலைக் கொழுந்துகளைப் பறித்து நாட்டிற்கு உதவும் மக்கள் மிகக் குறைந்த நாளாந்த ஊதியத்துடன் தமது சேவையை வழங்கி வருகின்றனர்.
இவ்வாறான மக்களின் அடிப்படைத் தேவைகளை இனங் கண்டு அதன் நிரந்தரத் தீர்விற்கான தூர நோக்குடனான திட்டங்களை செயற்படுத்தி பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் பட்சத்திலேயே நாட்டின் அபிவிருத்தியும், பொருளாதாரமும் முன்னேற்றமடையும்.
இதனையே ஒவ்வொரு வருடத்திலும் கொண்டாடப்படும் மேதினத்தில் தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தமது தொழிலுக்கான தீர்வினை ஆட்சியாளர்கள் சரியான முறையில் வழங்க வேண்டும் என்பதேயாகும். ஆனால் இந்த விடயத்தில் வெற்றி கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைமைகள் அதிகமான நாடுகளில் காணப்படுகின்றன.
போதியளவு வளங்கள் இருந்தும் அது மனித தேவைகளுக்கோ அல்லது நாட்டின் அபிவிருத்திக்கோ சரியான முறையில் பயன்படுத்தும் திட்டங்கள் இல்லாத காரணத்தாலும், போதியளவு மூலதனங்களும் இல்லாத காரணங்களும் ஒரு தடையாக இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. இவற்றினை நிவர்த்தி செய்யும் பொறுப்பும், கடமையும் அரசாங்கத்திற்கே உள்ளது என்ற விடயம் முக்கியமானதாகும் எனலாம்.
இந்த வகையில் இலங்கையிலும் தேவையானளவு வளங்கள் காணப்பட்ட போதிலும் அவை அரசாங்கங்களின் திறணற்ற தன்மைகளால் உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என பொருளாதார நிபுணர்கள் குறைகூறுகின்றனர். சுரியான முறையில் இலங்கையின் வளங்கள் பயன்படுத்தப்படும்போது தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கண்டு விடலாம்.
ஆனால் வளங்கள் இருந்தும் இந்த நாட்டில் தொழில் பிரச்சினை என்பது பூதாகாரமானதொன்றாக மக்கள் தொடர்ந்தும் வறுமை நிலைக்குச் செல்லும் நிலைமைகளே காணப்படுகின்றன. வளங்களை சரியான முறையில் பயன்படுத்தி பெருமளவான தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கி போதியளவு ஊதியங்களை வழங்கும்போது தெரிழலாளர்களின் பிரச்சினைகள் ஏற்படாதவாறு பாதுகாக்கலாம்.
இந்த தேசிய நல்லிணக்க அரசினால் இம்முறை நடாத்தப்படும் இன்றைய மேதினக் கொண்டாட்டம் இலங்கை வாழ் தொழிலாளர்களுக்கு அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கொடுக்கும் ஒரு மேதினமாக அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
இலங்கையைப் பொருத்தவரை குறிப்பாக வடகிழக்கு மற்றும் மலையக தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை முக்கியமாக காணப்படுகின்றது. இவர்களின் அதிகமானவர்கள் சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களாக காணப்படுவதால் இவர்களின் விடயங்களில் கடந்தகால ஆட்சியாளர்கள் பொடுபோக்காக இருந்து வந்துள்ளமை காரணமாக அவர்கள் பல பிரச்சினைகளுக்கு இன்றுவரை முகங்கொடுக்க வேண்டிய நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
இந்தவகையில் இதுவரை காலமும் பல்வேறுபட்ட விமச்சனங்களுக்கு உள்ளான சிறுபான்மை மக்களின் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு கான வேண்டிய பொறுப்பு தற்போதைய தேசிய நல்லிணக்க அரசுக்குரியதாக காணப்படுவதால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் அவர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சமுகங்கள் எதிர்பார்க்கின்றனர்.
எனவே இந்த அரசின் இன்றைய மேதினக் கொண்டாட்டம் மூலம் சிறுபான்மைத் தொழிலாளர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் ஒரு மேதினக் கொண்டாட்டமாக அமையும்போது அது இந்த நாட்டிற்கும், நாட்டு மக்களும் வெற்றியைக் கொடுக்கும் ஒன்றாக அமையும் என்பதில் ஐயமில்லை.