மு.கா.வின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் கேசரிக்கு வழங்கிய பேட்டி
நேர்காணல் : எம்.சி.நஜிமுதீன்
முஸ்லிம் காங்கிரஸிற்குள் முரண்பாடு எழுவது இது முதற் தடவையல்ல. பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் மரணித்த பின்னர் பல பிரச்சினைகள் எழுந்தன. அப்போதெல்லாம் நான் தலைவர் ரவூப் ஹக்கீமின் பக்கம் சார்ந்திருந்தேன். ஏனெனில் அவரின் பக்கம் நியாயம் இருந்தது.
முன்னைய முரண்பாடுகள், தலைவரிடம் பங்கு கேட்டு எழுந்தவைகளாகும். ஆனால் தற்போது தலைவரிடம் செயலாளர் நீதி கேட்பதனால் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இப்பிரச்சினையையும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்து கட்சியை பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ளது.
கேள்வி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் என்ற ரீதியில் கட்சியின் தற்போதைய இழுபறி நிலையானது கட்சி நடவடிக்கையில் எவ்வகையிலான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது?
பதில்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் விடயத்தில் தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு கட்சி. தற்போதைய புதிய சூழலில் முஸ்லிம்களின் அரசியல் நலன் தொடர்பில் ஒட்டுமொத்த ஒற்றுமை பேணப்பட வேண்டிய நிலை உள்ளது. எனினும் 2015ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நடைபெற்ற கட்சியின் கட்டாய உயர்பீடக் கூட்டத்திலும் பேராளர் மாநாட்டிலும் இடம்பெற்ற சில சம்பவங்களினால் கட்சிக்குள் சிறியளவிலான பூசல் ஏற்பட்டுள்ளது.
அதிலும் செயலாளர் நாயகத்தின் அதிகாரக் குறைப்பானது அப்பதவியினை வலுவிழக்கச் செய்துள்ளது. மேலும் அத்தீர்மானமானது கட்சியின் உயர்பீடத்தின் அங்கீகாரத்தைப் பெறாமல் மேற்கொள்ளப்பட்டதனால் கட்சிக்குள் ஆதங்கம் உள்ள குழுவொன்று உருவெடுத்துள்ளது. எனினும் அக்குழு கட்சிச் செயலாளரின் அதிகாரம் பற்றி கவனம் செலுத்துகிறதே தவிர வேறு எவரினதும் பதவிகள் பற்றியும் அதிகாரம் பற்றியும் விமர்சனம் செய்யவில்லை. இருந்தபோதிலும் பேச்சுவார்த்தையின் மூலம் அதனை முடிவுக்குக் கொண்டுவந்து கட்சி நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுக்க முடியும் என்கின்ற நம்பிக்கை எனக்குள்ளது.
கேள்வி: செயலாளர் நாயகத்தின் அதிகாரக் குறைப்பின் பின்னணி என்ன?
பதில்:செயலாளரின் அதிகாரக் குறைப்பானது, உயர்பீடத்திற்கு பகிரங்கமாக அறிவிக்காது மேற்கொள்ளப்பட்டிருப்பதனால் அதனை தெளிவாகக் கூற முடியாது. எனினும் அதிகாரக்குறைப்பின் பின்னணி ஒவ்வொருவருக்கும் வேறுபட்டதாக இருக்கலாம். அதனை தலைவர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் சுயவிசாரணை அடிப்படையில் பேசுகின்ற போதுதான் கண்டுகொள்ள முடியும். அது மாத்திரமல்லாமல் அந்தப் பின்னணியையும் இல்லாமல் செய்ய வேண்டும்.
கேள்வி: கட்சியின் தீர்மானங்கள் அனைத்தும் உயர்பீடத்தின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்படுவதாக பரவலாக பேசப்படுகிறது. எனினும் உயர்பீடத்தின் அங்கீகாரமின்றி பொதுச்செயலாளரின் அதிகாரம் குறைக்க்கப்பட்டுள்ளதாக தாங்கள் கூறுகிறீர்களே…
பதில்: இறுதியாக நடைபெற்ற கட்டாய உச்சபீடக் கூட்டத்தில், பொதுச் செயலாளரின் அதிகாரக்குறைப்பு தொடர்பில் கூறப்படவில்லை. மாறாக பொதுச் செயலாளர் பதவி அப்படியே இருக்க மேலும் ஆறு புதிய செயலாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. எனவே பொதுச் செயலாளர் பதவியை செல்லாக்காசாக்கும் உத்தி அங்கு பயன்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்ட வேண்டும். குறித்த ஆறு செயலாளர்களில் ஒருவர் அரசியல் அதியுயர்பீடத்தின் செயலாளராக நியமிக்கப்படுவார் என்றும், அவர் அரசியல் பதவிகள் எதனையும் வகிக்காத ஊதியம் பெறும் செயலாளராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.எனவே அவர் பொதுச்செயலாளர் நாயகத்திற்கு உதவியாக நியமிக்கப்படும் செயலாளராகவே நாம் அப்போது நோக்கினோம்.ஆனால் அவர் கட்சிக்கே உரிய செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது பின்னர்தான் தெரிய வந்தது.
உச்சபீடக் கூட்டத்தின் பின்னர் அடுத்த நாள் நடைபெற்ற பேராளர் மாநாட்டில் யாப்புத் திருத்தம் ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்டது. அதன்போது புதிதாக நியமிக்கப்படும் கட்சிக்கான செயலாளர் , உச்சபீடச் செயலாளராகவும் செயற்படுவார் என்றே வாசிக்கப்பட்டது.. ஆனால் அந்த விடயம் தமிழில் வாசிக்கப்பட்டபோது உயர்பீடச் செயலாளர் தலைவரால் நியமிக்கப்படுவார், தேவையேற்பட்டால் தலைவரால் நீக்கப்படுவார் என்றே குறிப்பிடப்பட்டது.
எனினும் உச்சபீடச் செயலாளர் பதவியானது கட்சிக் செயலாளருக்குரிய கையெழுத்திடும் அதிகாரம் கொண்ட பதவி என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எனவே பொதுச் செயலாளர் நாயகத்தின் அதிகாரக் குறைப்பு விடயத்தில் சிரேஷ்ட சட்டத்தரணிகளின் தந்திரோபாயம் பிரயோகிக்கப்பட்டிருப்பது தெட்டத் தெளிவாகிறது. மேலும் உச்சபீடத்தில் எடுக்கப்படாத தீர்மானம் தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கேள்வி: பொதுச் செயலாளரின் அதிகாரக் குறைப்பு எந்த வகையில் தாக்கம் செலுத்துகிறது?
பதில்: அதாவது கட்சியில் அதிகாரமுள்ள பதவிகள் இரண்டுதான் உள்ளன. ஒன்று தலைவர், மற்றையது செயலாளர். செயலாளர் ஆவணங்களில் இறுதிக் கையொப்பமிடும் அதிகாரத்துடன் இருந்தார். அதனால்தான் செயலாளர் நாயகம் என்று குறிப்பிடப்பட்டது. தேர்தல்கள் ஆணையாளருடன் தொடர்பு கொள்கின்ற, பாராளுமன்ற செயலாளருடன் தொடர்புகொள்கின்ற, கட்சியின் சார்பாக ஆவணங்களில் கையெழுத்திடுகின்ற அதிகாரம் கொண்டவராகத்தான் இவ்வளவு காலமும் ஹஸனலி இருந்தார். அந்த அதிகாரம்தான் தற்போது பிரித்து வழங்கப்பட்டுள்ளது. எனவே இறுதிக் கையெழுத்திடும் அதிகாரம் அவரின் கண்ணை மறைத்துக்கொண்டு பறிக்கப்பட்டுள்ளது. அதுவே இன்று கட்சிக்குள் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உச்சபீடச் செயலாளரை நியமிக்கவும், நீக்குவதற்குமான அதிகாரம் தலைவருக்கு உள்ளது. இவ்வாறு செய்திருப்பது அதிகாரம் கொண்ட இரு பதவிகளையும் தலைவரே பிரயோகிக்கும் தன்மையை ஏற்படுத்தும்.
கேள்வி: இழுபறி நிலைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் எனக்குறிப்பிட்டீர்கள். எனினும் ஏற்கனவே குறித்த விடயம் தொடர்பில் சமரசம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுதானே…
பதில்: ஆம்… சமரசம் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதுதான். எனினும் அந்தப் பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் பின்பற்றப்பட வில்லை.
கேள்வி: செயலாளரின் அதிகாரக் குறைப்பானது ஹஸனலியை கட்சியிலிருந்து ஓரம் கட்டுவதற்கான அணுகுமுறையாக நோக்கலாமா?
பதில்: தலைவருக்கும் செயலாளருக்குமிடையில் எவ்விதமான இடைவெளியும் கடந்த காலங்களில் இருக்கவில்லை. செயலாளர் தலைவருடன் மிகவும் நெருக்கமான உறவைப்பேணி வந்தார். அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவர். மேலும் கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எவருடனும் பிணக்குகளில் ஈடுபடாதவர். சகல விடயங்களையும் அனுசரித்து நடவடிக்கை எடுப்பவர்.
அவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கட்சிக்கு சேதங்களை ஏற்படுத்தியவர் அல்ல. ஆரம்பம் முதல் இன்றுவரை கட்சியின் ஆவணங்களை சேகரித்து வைத்திருக்கும் ஒருவர். சகல விடயங்களிலும் பொறுமை காத்து காரியங்களை முன்னெடுப்பதற்கான காரணம் முஸ்லிம் காங்கிரஸை அவர் தன்னுடைய கட்சியாக நோக்குவதுதான். எனினும் அவ்வாறானவர்களை ஓரங்கட்ட வேண்டிய அவசியம் இல்லை.
கேள்வி: இந்த முரண்பாட்டினால் தாங்களும் பொதுச் செயலாளர் ஹஸனலியும் இணைந்து புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கான இரகசிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பரவலாகப் பேசப்படுகிறதே…
பதில்: நிச்சயமாக இல்லை. முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகி மற்றுமொரு கட்சியை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை. கட்சிக்குள் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான வழி புதிய கட்சி ஆரம்பிப்பதல்ல. பிரச்சினைகளை உள்ளக ரீதியாகவே தீர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் முஸ்லிம்களுக்கு பல முஸ்லிம் கட்சிகள் உள்ளன. இன்னுமின்னும் கட்சிகளை ஆரம்பிக்க வேண்டிய தேவை இல்லை.நாமிருவரும் புதிய கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக வெளியான தகவலானது சூழ்ச்சியாக இருக்கலாம் என ஹஸனலி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
கேள்வி: செயலாளரின் அதிகாரக் குறைப்பு விவகாரத்தில் நீங்கள் செயலாளர் நாயகத்திற்கு ஆதரவாகச் செயற்படுகிறீர்களா?
பதில்: எனக்கும் தலைவருக்குமிடையில் தனிப்பட்ட முரண்பாடு எதுவும் இல்லை. இருந்த போதிலும் பொதுச் செயலாளரின் அதிகாரங்கள் அவரின் கண்ணை மறைத்துக்கொண்டு பறிக்கப்பட்ட விடயத்தில் ஹஸனலிக்கு ஆதரவாகச் செயற்படுகிறேன். ஏனெனில் அவரின் பக்கம் நியாயம் இருக்கிறது.
இவ்வாறான பிரச்சினைகள் கட்சிக்குள் எழுவது இது முதற் தடவையல்ல. பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் மரணித்த பின்னர் பல பிரச்சினைகள் கட்சிக்குள் எழுந்தன. அப்போதெல்லாம் நான் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பக்கம் சார்ந்திருந்தேன். ஏனெனில் அப்போதெல்லாம் அவரின் பக்கம் நியாயம் இருந்தது.
தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட ஹக்கீம் பேரியல், ஹக்கீம் – ஹாபிஸ் நஸீர், ஹக்கீம் – அதாவுல்லாஹ், ஹக்கீம் – ஹிஸ்புல்லாஹ், ஹக்கீம் – ரிஷாட் பதியுதீன், அமீரலி, போன்றோருடன் முரண்பாடுகள் எழுந்தபோது ரவூப் ஹக்கீமின் பக்கம் நியாயம் இருந்ததனால் அவரோடு இருந்து கட்சியைக் காப்பாற்றினேன்.
முன்னர் ஏற்பட்ட முரண்பாடுகள் தலைவரிடம் பங்கு கேட்டு எழுந்தவைகளாகும். ஆனால், தற்போது தலைவரிடம் செயலாளர் நீதி கேட்கும் முரண்பாடு எழுந்துள்ளது. எனவே, தற்போது தலைவருக்கும் செயலாளருக்குமிடையில் எழுந்துள்ள பிரச்சினையில் ஹஸனலியின் பக்கம் இருந்து கட்சியை பாதுகாப்பதற்கு முன்நிற்கிறேன்.
கேள்வி: உச்சபீடச் செயலாளர் நியமிக்கப்பட்ட பின்னர் தேர்தல்கள் திணைக்களத்தினால் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதா?
பதில்: கட்சியின் பேராளர் மாநாட்டில் எங்களுடைய புதிய யாப்பு அங்கீகரிக்கப்பட்ட பின் தேர்தல்கள் ஆணையாளரினால் அழைக்கப்பட்ட எல்லா கூட்டங்களுக்கும் இரு செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் கட்சியின் செயலாளர் யார் என்பது தொடர்பில் தேர்தல்கள் திணைக்களம் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றுதான் நான் கருதுகிறேன்.
எனவே, இந்தப் பிணக்கு தொடருமாயின் கட்சிக்கு செயலாளர் இல்லை என்ற நிலையும் ஏற்படலாம். ஆகவே, இந்தப் பிரச்சினையை விரைவாகத் தீர்க்க வேண்டும். மேலும் தற்போது உத்தேச அரசியலமைப்பு பற்றிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் கட்சியில் இவ்வாறான இழுபறி நிலை தொடருமாயின் முஸ்லிம்களின் பிரச்சினைகளில் பின்னடைவுகளை ஏற்படுத்தும்.
கேள்வி: உத்தேச அரசியலமைப்பில் முஸ்லிம்களின் தேவைகள் எவ்வாறு அடையாளப் படுத்தப்பட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: புதிய அரசியலமைப்பு தொடர்பில் பலரும் பல கருத்துக்களைக் கொண்டுள்ளனர். சில கட்சிகளின் தலைமைத்துவங்கள் தம்மை பலப்படுத்திக் கொள்வதற்காகவே இதனை பயன்படுத்த முனைகின்றன.
எனினும் முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்த வரையில் தேர்தல் திருத்தச் சட்டம்தான் பிரதான இடம் வகிக்கிறது. தொகுதிவாரியான தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டால் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பேரம் பேசும் தன்மை அற்றுப்போய் விடும். சலுகைகள் வழங்குவதாக வாக்களித்தாலும் விகிதாசார முறை இல்லாமல் செய்யப்படும்போது அது பாதிப்பாகத்தான் அமையும். அதனைத் தவிர்க்க முடியாது. எனவே, விகிதாசார தேர்தல் முறை மாற்றப்படக் கூடாது. இனப்பிரச்சினை விடயத்தில் எல்லோருக்கும் இருப்பதைப் போன்று முஸ்லிம்களுக்கும் ஒரு அலகு வேண்டும்.
கேள்வி: முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் விவகாரம் இன்னும் தீர்க்கப்படாமைக்கான காரணம் என்ன?
பதில்: காலத்துக்கு காலம் அரசியல் சூழ்நிலைகள் மாற்றமடைகின்றன. எனவே, தற்போதைய நிலையில் தேசியப்பட்டியல் ஒரு விவகாரமே இல்லை. எனினும் அதனை சிலர் விவகாரமாக்கிக்கொள்ள முயற்சிக்கின்றனர். தற்போது எழுந்துள்ள உண்மையான பிரச்சினைகளை மறைப்பதற்கு தேசியப்பட்டியல் விவகாரம் இருப்பதாக காட்டிக்கொள்கின்றனர்.
கேள்வி: தங்களுக்கும் தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் வழங்குவதாக வாக்களிக்கப்பட்டதுதானே….
பதில்: கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஓர் ஒப்புதலுடன் நான் போட்டியிடவில்லை. ஏனைய வேட்பாளர்களின் வேண்டுதலுக்கும் கட்சியின் முடிவுக்கும் அமைவாகவே தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எனினும் தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவம் வழங்குவதாக வாக்களித்தனர். தேர்தலின் பின்னர் அது வழங்கப்படவில்லை. நான் அது தொடர்பில் தலைவருக்கு கடிதம் ஒன்று மாத்திரம் அனுப்பினேன். அதற்கான பதில் இதுவரையில் கிடைக்கவில்லை. அதனோடு அந்த விவகாரத்தை நான் கை விட்டேன்.
முஸ்லிம் காங்கிரஸால் மூன்று முறை எனக்கு தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஆகையினால் இம்முறை தேசியப்பட்டியல் வழங்கப் படாமையிலும் நியாயம் இருப்பதை உணர்ந்து அதனை கைவிட்டேன். ஆகவே, அவ்விவகாரத்தை தொடர்ந்தும் பேசிக்கொண்டிருக்காமல் அதனை அனைவரும் மறந்து விடுமாறு பணிவாக வேண்டுகோள் விடுக்கிறேன்.
கேள்வி: கட்சியிலுள்ள பழையவர்கள் ஓரங்கட்டப்பட்டு புதியவர்களின் ஆதிக்கம் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறதே…
பதில்: அவ்வாறு நடைபெறுவதில் தவறில்லை. ஜனநாயக அடிப்படையில் அதனைச் செய்யலாம். கட்சிக்கு புதிய இரத்தம் பாய்ச்சப்படுவது அவசியம். எனினும் பாய்ச்சப்படுகின்ற இரத்தம் சுத்தமானதாக இருக்க வேண்டும்.
கேள்வி: கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டிய தேவையுள்ளதா?
பதில்: தற்போதுள்ள முஸ்லிம் கட்சிகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் சிறந்த கட்சி. அதில் எவ்வித சந்தேகமுமில்லை. முஸ்லிம் காங்கிரஸ் உயிருள்ள கட்சிதான். மேலும் மறுசீரமைப்பு செய்வதனூடாக இன்னும் உயிர்ப்புள்ள கட்சியாக ஆக்குவதற்கு இடமுண்டு. முஸ்லிம் காங்கிரஸ் மக்களின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டது. ஏனைய முஸ்லிம் கட்சிகள் தலைவர்களின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டவை..
கேள்வி: வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரம் பற்றி தற்போது பேசப்படுகிறது. அது தொடர்பில் தங்களின் நோக்கு என்ன?
பதில்: வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரம் உள்ளிட்ட தமிழர்களின் ஜனநாயக அடிப்படையில் கேட்கின்ற அரசியல் அபிலாஷைகளை மறுதலிக்கும் உரிமை இன்னுமொரு சிறுபான்மையினருக்கு இல்லை. அதே நேரம் முஸ்லிம்களுக்கென்று தனியலகைக் கேட்கின்ற உரிமை முஸ்லிம் தரப்புக்கும் இருக்கிறது.
எனவே முஸ்லிம்களின் அபிலாஷைகளை மறுதலிக்கின்ற எவ்வித உரிமையும் இன்னுமொரு சிறுபான்மையினருக்கு இல்லை. இருந்தபோதிலும் வட கிழக்கு என்பது இப்போதிருப்பதைப் போலல்லாது புதிதாக இரண்டு மாகாணங்களாக எல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும். அதில் தமிழர்களின் அபிலாஷைகளான வட கிழக்கு இணைந்ததாகவும் அதில் தமிழர்களின் அபிலாஷைகளான வட கிழக்கு இணைந்ததாகவும் இருக்க வேண்டும். முஸ்லிம்களின் அபிலாஷைகளாக இருக்கின்ற தனியலகும் இருக்க வேண்டும். அதுவே தீர்வாக அமைவது சிறப்பானதாக இருக்கும்.