அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் ஒரே ஈரலை தம்மிடையே பங்கீடு செய்த நிலையில் சிக்கலான முறையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை மருத்துவர்கள் 8 மணி நேர அறுவைச்சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரித்துள்ளனர்.
அந்தக் குழந்தைகள் 5 மாதங்களுக்கு முன் பிறந்த போது, அவை உயிர் பிழைப்பதற்கு 25 சதவீத வாய்ப்பே உள்ளதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேற்படி குழந்தைகளுக்கிடையே பங்கீடு செய்யப்பட்டிருந்த தனியொரு ஈரலை இரண்டாகப் பிளந்து இந்த இரட்டையர்களை முழுமையாக பிரிக்கும் இந்த அறுவைச்சிகிச்சையில் 17 சத்திரசிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றிருந்தனர்.
அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டமை அறிவிக்கப்பட்டதும் அந்தக் குழந்தைகளின் தாயாரான மிசெல் பிரான்ட்லி (24 வயது), தந்தையான பிறையன் மிராபெல் ( 26 வயது) மட்டுமல்லாது மருத்துவமனையில் காத்திருந்த அவர்களது உறவினர்களும் ஆனந்த மிகுதியால் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.
அறுவைச்சிகிச்சையையடுத்து கார்ட்டர் மற்றும் கோர்னர் மிராபெல் என்று இந்த இர ட்டை ஆண் குழந்தைகள் உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உடல் ஒட்டிய நிலையில் இரட்டையர்கள் பிரசவமாவது 200,000 பிறப்புகளுக்கு ஒன்றென இடம்பெறும் அபூர்வ நிக ழ்வாகும்.