இலங்கையில் முதலீட்டாளர்களுக்கு உதவும் பயனுள்ள மற்றும் பாதுகாப்பான வர்த்தக சூழலை அமைக்கும் நோக்கத்துடன் ஜூன் மாதமளவில் பாராளுமன்றத்தில் புதிய சட்டமூலத்தை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக, வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சுவீடன் வௌிவிவகார அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பிலும் சீனாவுடனான சுதந்திர வர்த்தகம் தொடர்பிலும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
அபிவிருத்தியில் முன்னோக்கிச் செல்லும் நாடு என்ற வகையில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்குதல் மற்றும் ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகையை மீள பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக, மங்கள சமரவீர இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி முதலீட்டுக்கு உகந்த பயனுள்ள மற்றும் பாதுகாப்பான வர்த்தக சூழலை உருவாக்கும் வகையிலான பல சட்ட மூலங்களை ஜூன் மாதமளவில் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.