வடமாகாண சபை வடக்கும், கிழக்கும் இணைந்ததான சமஷ்டி ஆட்சி முறையை கோரி தீர்மானம் நிறைவேற்றியமையை தொடர்புபடுத்தி சிங்கள கடும் போக்குவாதிகள் மீண்டும் இனவாதத்தைப் பரப்புவதற்கு முயற்சித்து வருகிறார்கள்.
அரசாங்கம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.
வடமாகாண சபை வடக்கும், கிழக்கும் இணைந்ததான சமஷ்டி ஆட்சி முறையைக்கோரும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை தொடர்பில் கருத்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான மக்கள் கருத்தறியும் குழு கோரியுள்ளது. அதற்கிணங்கவே வடமாகாண சபை தீர்மானமொன்றை நிறைவேற்றி அதனைச் சமர்ப்பித்துள்ளது.
இது அவர்களது ஜனநாயக உரிமையாகும்.
இந்நிலையில் சமஷ்டி ஆட்சிமுறையொன்று வழங்கப்பட்டுவிட்டது போல் செயற்பட்டு எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனையும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் கைது செய்ய உத்தரவிடுமாறு கோருவதுடன், இனவாத கருத்துக்களை வெளியிடுவதும் நாட்டை மீண்டும் இனரீதியிலான கலவரங்களுக்கு இட்டுச் செல்வதாக அமையும்.
கடந்த கால அரசாங்கத்தின் காலத்திலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளின் போது இனவாத கடும்போக்குவாதிகள் அப்பேச்சுவார்த்தைகளைத் தடைசெய்தனர். சிங்கள மக்களைத் தமிழர்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டனர்.
தற்போது நாட்டில் கடும்போக்குவாதிகளின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. அரசாங்கம் இதுவிடயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவர்களின் எதிர்மறையான திட்டங்கள் என்ன என்பதைத் தேடிப்பார்க்க வேண்டும்.
இவ்வாறான முயற்சிகளுக்கு ஆரம்பத்திலே முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். சிங்கள மக்களின் உணர்வுகளைத் தூண்டி ஓர் அசாதாரண நிலைமை மீண்டும் உருவாக இடமளிக்கக்கூடாது என்றார்.