டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் காம்பீர் முதலில் பந்து வீச முடிவு செய்தார். தொடக்க வீரர் டூ பிளஸ்சிஸ் அல் ஹசன் பந்து வீச்சில் 4 ரன்களில் கீளின் போல்ட் ஆனார். இதனை அடுத்து ரகானேவும், சுமித்தும் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
ஆடுகளம் பந்து வீச்சாளருக்கு சாதகமாக இருந்ததால், இருவரும் வேகமாக ரன் குவிக்க திணறினார்கள். 31 ரன்கள் எடுத்திருந்த போது சுமித் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இதனை அடுத்து களமிறங்கிய பெரேரா(12), மோர்கல்(16) ஆகியோர் விரைவாக அவுட் ஆக அடுத்து கேப்டன் டோனி களமிறங்கினார்.
சிறபாக ஆடிவந்த ரகானே 52 பந்துகளில் 67 ரன்கள் குவித்து நரேன் பந்து வீச்சில் ஆட்டமிழ்தார். இறுதியில் அதிரடியாக ஆடிய டோனி 12 பந்துகளில் 23 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர் முடிவில் புனே அணி 5 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் ஷகிப் அல் ஹாசன் 3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. உத்தப்பாவும், காம்பீரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த உத்தப்பா, இந்தப் போட்டியில் முதல் பந்திலேயே ரன் ஏதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அதேபோல், காம்பீரும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். 2.5 ஓவர்களில் கொல்கத்தா அணி 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்தது. அடுத்து களமிறங்கிய ஷாகிப் அல் ஹாசனும் 3 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்தாலும் யாதவ் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
அதனால் 6 ஓவர்களில் கொல்கத்தா அணி 59 ரன்கள் குவித்தது. யாதவ் உடன் யூசப் பதான் இணைந்து சீரான ரன் குவிப்பில் ஈடுபட்டார். சிறப்பாக விளையாடி வந்த பதான் 36(27) ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து, அரைசதம் விளாசிய யாதவ் 60(49) ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
கடைசி 4 ஓவர்களில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 42 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்கும் சமமாக இருந்தது. ஆனால், ரஸ்ஸல்ஸ் வந்த வேகத்தில் இரண்டு சிக்ஸர்கள் விளாச புனே அணியின் வெற்றி வாய்ப்பு மங்கியது. ஆனால், 17 ரன்களில் அவர் நடையை கட்டினார்.
கடைசி 2 ஓவர்களில் 18 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரில் 11 ரன்கள் எடுக்கப்பட்டது. அதனால் கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. இறுதியில் 19.3 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. தோனியின் புனே அணி 4-வது தோல்வியையும், காம்பீரின் கொல்கத்தா அணி 4-வது வெற்றியையும் பதிவு செய்துள்ளது. சிறப்பாக விளையாடிய கொல்கத்தா அணியின் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.