றக்பி வீரர் வசிம் தாஜூதீனின் வழக்கை விபத்து என்ற அடிப்படையிலேயே முன்னெடுக்குமாறு தமக்கு வலியுறுத்தப்பட்டதாக, நாராஹென்பிட்ட குற்றவியல் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேலிடத்திலிருந்தே இவ்வாறு வலியுறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், குறித்த வழக்கை இடைநிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
வசிம் தாஜூதீனின் மரணம் குறித்த வழக்கின் உண்மையை மறைத்ததாக தெரிவித்து கடந்த 20ஆம் திகதி நாராஹென்பிட்ட குற்றவியல் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை, குறித்த விடயம் நீதி மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.