நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , பிரதிப் பொலிஸ்மா அதிபர், பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட ரக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விசாரணையில், விசாரணையை மூடி மறைத்ததாக நாரஹேன்பிட்டி குற்றவியல் பொறுப்பதிகாரியை மட்டும் கைது செய்தமையானது அவருடன் இந்த விவகாரத்தை மூடி மறைக்க செய்யப்பட்ட அரசியல் பின்னணி கொண்ட நடவடிக்கையா என சட்டத்தரணி ஆஷா கஹாவத்த கேள்வி எழுப்பினார்.
வஸீம் தாஜுதீன் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் சமித் சம்பிக்க பெரேராவை நேற்று புலனாய்வு பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் திலினி கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
சந்தேக நபர் சார்பில் ஆஜராகி வாதங்களை முன்வைக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
வஸீம் தாஜுதீன் விவகாரத்தில் கொலையை மூடி மறைத்தமை தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றி வந்த முன்னாள் நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேராவை நேற்று முன்தினம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.
இந்நிலையில் அவரை நேற்று குற்றப் புலனாய்வு பிரிவினர் கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இதன்போது சந்தேக நபருக்கு எதிரான விசாரணை அறிக்கையை குற்றப்புலனாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சீ.டப்ளியூ.விக்கிரமசேகர நீதிவானிடம் சமர்ப்பித்தார்.
இதன்போது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்து கருத்து தெரிவித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் விக்கிரமசேகர,
சந்தேக நபர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வஸீம் தாஜுதீன் கொலை விவகாரத்துடன் தொடர்புடையவர்.
இது குறித்து மேற்கொண்ட நீண்ட விசாரணையினாலேயே கொலையை மூடி மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையின் 198,199,296 ஆகிய பிரிவுகளுக்கு அமைவாக கைது செய்துள்ளோம். எனவே இது தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதால் சந்தேக நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோருகிறோம் என்றார்.
இதன்போது சந்தேக நபரான சுமித் சம்பிக்க பெரேரா சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த ஆய்ஷா கஹாவத்த பின்வருமாறு வாதிட்டார்.
இங்கு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ஒரு அப்பாவி. அவர் முன்னாள் நாரஹேன்பிட்டி குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி. அவருக்கு வஸீம் தாஜுதீன் யாரென்றும் தெரியாது. இவருக்கு வஸீமை கொலை செய்ய வேண்டிய தேவையோ அல்லது அதனை மறைக்கும் அவசியமோ இருக்கவில்லை.
உண்மையாக வாகன விபத்தொன்று இடம்பெற்றதாக அப்போதைய நாரஹேன்பிட்டி பொறுப்பதிகாரி இவருக்கு தெரியப்படுத்தியதையடுத்தே விசாரணைகளை அவர் ஆரம்பித்தார்.
இவ்விசாரணையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ,பிரதிப் பொலிஸ்மா அதிபர் ,பொலிஸ்மா அதிபர் வரையிலான உயர் அதிகாரிகள் தலையீடு செய்கின்றனர். அல்லது ஆலோசனை வழங்கி மேற்பார்வை செய்வர்.
அப்படியிருக்கையில் விசாரணைகளை மூடி மறைத்ததாக இவரை மட்டும் கைது செய்வது,அதுவும் தண்டனை சட்டக்கோவையின் 296 ஆவது அத்தியாயத்தின் கீழ் கைது செய்துள்ளமையும் சட்டத்தை நகைப்புக்குரியதாக்கும் செயல். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த விவகாரத்தில் யாரோ ஒருவரை கைது செய்து தற்போதுள்ள அரசியல் நிலைமைகளை சமாளிக்க விடை தேடுவதாகவே இந்த கைது அமைந்துள்ளது. அப்பாவி ஒருவரை கைது செய்துவிட்டு இந்த வழக்கு விசாரணைகளை இழுத்தடிக்க செய்யும் முயற்சியே இது என்றார்.
இதன்போது குறிப்பிட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் விக்கிரமசேகர சட்டத்தரணி ஆய்ஷா கஹாவத்தவின் வாதத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டார். பொலிஸ் மா அதிபர் ஒருவர் ஒருபோதும் விசாரணைகளில் தலையீடு செய்வதில்லை என குறிப்பிட்ட அவர் தாம் 2015.03.26 ஆம் திகதி அன்றே விசாரணைகளை பொறுப்பேற்றதாகவும் அதுமுதல் செய்த விசாரணைகளுக்கு அமைவாகவே கைது இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து மீளவும் கருத்தை முன்வைத்த சட்டத்தரணி ஆய்ஷா கஹாவத்த, சந்தேக நபரால் கைது செய்யப்பட்டோர் சிறையில் உள்ளதால் விளக்கமறியலில் வைப்பதாயின் அவருக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றார்.
அத்துடன் சந்தேக நபருக்கு கொலஸ்ரோல் ,நீரிழிவு போன்ற நோய்கள் உள்ளதாகவும் அவரை பொலிஸ் அல்லது சிறைச்சாலை வைத்தியசாலையில் வைக்குமாறும் சந்தேக நபரின் மனைவி பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறும் கோரினார்.
இதனை ஆராய்ந்த நீதவான் திலினி கமகே சந்தேக நபரை எதிர்வரும் மே மாதம் ஐந்தாம் திகதிவரையில் விளக்கமறியளில் வைக்க உத்தரவிட்டார். அத்துடன் சிறையில் சந்தேக நபருக்கு விஷேட பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிவான் அவசியம் ஏற்பட்டால் சிறைச்சாலை வைத்தியசாலையில் சந்தேக நபருக்கு சிகிச்சை வழங்குமாறும் உத்தரவிட்டார்.
நன்றி – விடிவெள்ளி