9–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 9–ந்தேதி தொடங்கியது. நேற்றுடன் 14 ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன.
இந்த போட்டித்தொடரில் இதுவரை நடந்த ஆட்டத்தின் முடிவில் தொடக்க வீரர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். ரன்குவிப்பில் ‘டாப் 5’ இடத்தில் தொடக்க வீரர்களே உள்ளனர்.
கொல்கத்தா அணியின் கேப்டனான காம்பீர் தான் தற்போது ரன் குவிப்பில் முன்னிலையில் உள்ளார். தொடக்க வீரரான அவர் 4 ஆட்டத்தில் 226 ரன் எடுக்கப்பட்டுள்ளார். 2 ஆட்டத்தில் ஆட்டம் இழக்காமல் சராசரி 113 ஆக இருக்கிறது. 2 அரை சதம் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 90 ரன் எடுத்துள்ளார். ஸ்டிரைக்ரேட் 120.85 ஆகும்.
அடுத்து குஜராத் லயன்ஸ் அணி வீரர் ஆரோன் பிஞ்ச் உள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த அவர் 3 ஆட்டத்தில் 191 ரன் எடுத்துள்ளார். சராசரி 95.50 ஆகும். 3 அரை சதம் எடுத்துள்ளார். அதிகபட்ச ரன் 74 ஆகும். ஸ்டிரைக்ரேட் 139.41 ஆகும்.
ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டனும், இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேனுமான விராட் கோலி 3 ஆட்டத்தில் 187 ரன் எடுத்து உள்ளார். இதில் இரண்டு அரை சதம் அடங்கும். சராசரி 62.37. ஸ்டிரைக் ரேட் 144.96 ஆகும்.
குயின்டன் டிகாக் (டெல்லி டேர்டெவில்ஸ்) 184 ரன் எடுத்து 4–வது இடத்தில் உள்ளார். அவர் ஒருவர் தான் இந்த தொடரில் சதம் அடித்து இருக்கிறார். பெங்களூர் அணிக்கு எதிராக 108 ரன் குவித்து இருந்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 178.64 ஆகும்.
ரைசிங் புனே அணி வீரர் டு பிளிஸ்சிஸ் 170 ரன் எடுத்து 5–வது இடத்தில் உள்ளார். மற்ற தொடக்க வீரர்களில் ரோகித் சர்மா (மும்பை) 165 ரன்னும், வார்னர் (ஐதராபாத்) 161 ரன்னும் எடுத்து உள்ளனர்.
இந்தியாவின் முன்னணி வீரரும், ஐதராபாத் அணியின் மற்றொரு தொடக்க வீரரான தவான் மட்டுமே மிகவும் மோசமான நிலையில் உள்ளார். அவர் 3 ஆட்டத்தில் 16 ரன்களே எடுத்து உள்ளார்.
கேப்டன்களில் காம்பீர், விராட் கோலி, ரோகித் சர்மா, வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.