நசுக்கப்படும் முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக என்றே மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அவரது மறைவுக்கு முதல் முஸ்லிம்களின் உரிமைகள் பலவற்றை பெற்றுத்தந்ததுடன் தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம் மற்றும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை என பல்வேறு அபிவிருத்திகளையும் கொண்டுவந்தது. அன்னார் மறைந்து பதினாறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், நமது பிரதேசத்தில் அபிவிருத்தி என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு, அபிவிருத்தியில் நாம் பின்தள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளமன்ற வேட்பாளரும், கல்முனைக்கான மக்கள் செயற்பாட்டுச் சபையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலீலுல் ரஹுமான் தெரிவித்தார்.
கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏழாவது மாதர் அமைப்பு கிளையை அங்குராப்பணம் செய்துவைக்கும் நிகழ்வு 2016-04-15 ஆம் திகதி ஏ.இசட்.எம்.ஜௌபர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே விரிவுரையாளர் கலீலுல் ரஹுமான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நூற்றுக்கணக்கான பெண்கள் பங்குகொண்டிருந்த இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கலீலுல் ரஹுமான், மறைந்த தலைவரின் படத்தையும் அவரது கட்சிப்பாடலையும் போட்டு மக்களை உசுப்பேத்தி அப்பாவி மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு பாராளுமன்ற ஆசனங்களை அனுபவித்து வருகின்ற இவர்கள் அதன்பால் கிடைக்கின்ற சுகபோகங்களை அனுபவிது வருவதாகவும் மக்களுக்காகவென்று உருப்படியான எதனையும் செய்துவிடாது நட்டாற்றில் விட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தாங்கள் அல்லாத வேறு சக்திகள் அபிவிருத்திகளை நமது பிரதேசங்களுக்கு கொண்டுவருகின்றபோது அவர்கள்மீது கல்களை எறிபவர்களையே துரதிஷ்டவசமாக நாங்கள் எங்களது பிரதிநிதிகளாக தெரிவு செய்துள்ளோம் என்றும் தெரிவித்த அவர், அம்பாறை மாவட்டத்திற்கான பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களோடு அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையும் அதன் முக்கியத்தவர்களும் இப்பிராந்தியற்கு வருகைதந்தபோது இப்பிராந்தியத்தில் வேலையற்ற ஆயிரகணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவைய்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் சம்மாந்துறையில் இருபத்தைந்து எக்கர் நிலப்பரப்பில் பாரிய கைத்தொழில்ப்பேட்டைகளை அமைக்க முற்படும்போது நமது மக்கள் வாக்களித்து பாராளமன்றத்துக்கு அனுப்பியவர்கள் அந்த முயற்சிக்கு தடையாக இருக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நமது மக்களுக்கு வாழ்வாதாரம் என்றாலும் சரி ஏனைய அபிவிருத்திகள் எமது அடையாளம் காணப்பட்ட அபிலாசைகள் என்றாலும் சரி அவைகளை பெற்றுத்தர அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமைத்துவமான றிசாத் பதியூதீன் அவர்களால் மட்டுமே பெற்றுத்தர முடியும் என்று தெரிவித்த கலீலுல் ரஹுமான் அவர்கள், அபிவிருத்திக்கு எதிரானவர்களை ஓரம் கட்டிவிட்டு நமது எதிர்கால சந்ததிகளின் நலனுக்காக மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் வழியில் அபிவிருத்திப்பணிகள் செய்துவரும் தலைவர் றிசாத் பதியூதீனுடைய தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுமாறு அறைகூவல் விடுத்தார்.
நிகழ்வில் அதிக எண்ணிக்கையான பெண்கள் கட்சியின் மாதர் அமைப்பில் இணைந்துகொண்டதுடன் விண்ணப்பப்படிவங்களையும் பூர்த்தி செய்து கையளித்தனர். ஏ.எல்.எம்.ஹனிபா, எம்.ஏ.அப்துல் கரீம், எம்.ஐ.எம்.ஜிப்ரி மற்றும் எம்.ஏ.எம்.அஸ்கர் ஆகியோரும் மேலும் பெரும்திரளான பெண்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.