தே.மு.தி.க. கூட்டணி வெற்றி பெற்றால் வெளிப்படையான ஆட்சி நடக்கும் – விஜயகாந்த்

vijaykanth-facebook

 

 தே.மு.தி.க.– மக்கள் நலக் கூட்டணி, த.மாக. சார்பில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர், கே.வி.குப்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தே.மு.தி.க. வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிப்பட்டில் நடந்தது.

கூட்டத்துக்கு தே.மு.தி.க. மாவட்ட செயலாளரும், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான கே.அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கு.லிங்கமுத்து எம்.எல்.ஏ., த.மா.கா. மாவட்ட தலைவர் குப்புசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், தே.மு.தி.க. நகர செயலாளர் சி.பி.ராஜா மற்றும் தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், த.மா.கா.வை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு தே.மு.தி.க. வேட்பாளர்களான கே.அரிகிருஷ்ணன் (திருப்பத்தூர்), ஏ.பையாஸ்பாஷா (ஜோலார்பேட்டை), வாசு (ஆம்பூர்), தேவியம்மாள் (கே.வி.குப்பம்) ஆகியோரை அறிமுகம் செய்தார்.

கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது :–

எனக்கும், எனது கட்சியை சேர்ந்தவர்களுக்கும் (தே.மு.தி.க.) சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதுபோல் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.

லோக்–ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும் என மு.க.ஸ்டாலின் சொல்கிறார். ஏன் சொல்கிறார் தெரியுமா? அவர்களுக்கு தான் ஊழல் பற்றி நன்கு தெரியும். தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளராக ராஜாவை வைத்து இருக்கிறார்கள். உங்கள் கொள்கையே திருட்டு கொள்கை தானா? வழக்கில் இருப்பவர் தான் உங்கள் கொள்கை பரப்பு செயலாளரா?

தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்படும். கல்வி, விவசாயம் உள்ளிட்டவைகள் கணினிமயமாக்கப்படும். பொதுமக்களின் கேள்விகளுக்கு ஒரு வாரத்தில் பதில்கள் அளிக்கப்படும். எங்கள் ஆட்சியில் வெளிப்படை தன்மை இருக்கும்.

இங்கு போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்கள் வெற்றி பெற அனைவரும் முரசு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அதுபோல், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் அவரவர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

ஊழல்களின் அத்தியாயமே தி.மு.க., அ.தி.மு.க. தான். இவர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்திற்கு ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்து செல்கிறார். அவர் இருக்கும் மேடை முழுவதும் ஏர்–கூலர் வசதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் மக்கள் வெயிலில் அமர்ந்து இருக்கிறார்கள். தமிழகத்தை தலைநிமிர செய்வேன் என ஜெயலலிதா கூறுகிறார். முதலில் அக்கட்சியின் மந்திரிகளை தலைநிமிர செய்யுங்கள். அப்புறம் மக்களை பற்றி பேசுங்கள். 

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா.வை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.