வெற்றிகரமாக நிறைவடைந்த அமைச்சர் றிசாத்தின் அம்பாறை மாவட்ட விஜயம்

12417731_574851976014185_2267008663678931506_n_Fotor

அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (03/04/2016) சென்றிருந்தார். இறுக்கமான நிகழ்ச்சி நிரலில் அவரது விஜயம் அமைந்திருந்தது. சாய்ந்தமருது, கல்முனை, இறக்காமம், வரிபத்தான்சேனை, அக்கரைப்பற்று, ஒலுவில், பாலமுனை, சம்மாந்துறை, அட்டாளச்சேனை, செங்காமம், பொத்துவில், மாவடிப்பள்ளி, சென்றல் கேம்ப், மாளிகைக்காடு ஆகிய முஸ்லிம் பிரதேசங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்தார்.  மாளிகைக்காடு, வரிபத்தான்சேனை, அட்டாளச்சேனை ஆகிய இடங்களில், சதொச கிளைகளையும் திறந்து வைத்து உரையாற்றினார்.

சாய்ந்தமருதுவில் இரண்டு நிகழ்வுகளில் அவர் பங்கேற்றார். சனிக்கிழமை காலை மகளிர் அமைப்பை சந்தித்து, அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்த அமைச்சர், பின்னர்  சாய்ந்தமருது அல்-ஹிலால் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற, பீர் முஹம்மத் எழுதிய “திறன் நோக்கு” என்ற நூல் வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, உரையாற்றினார். கல்வியலாளர்களும், எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் அமைச்சரின் உரை மிகவும் கனதியாக இருந்தது.

ameer ali rishad ishak vc ismail

 

சமூகத்தின் மீதான தனது கவலையை வெளிப்படுத்திய அவர், மர்ஹூம் அஷ்ரப்பினால் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ், இன்று திசைமாறிச் செல்வதாக சாடினார். முஸ்லிம் சமூகம் பாரிய சவால்களுக்கு முகம் கொடுப்பதாகவும், நல்லாட்சியை உருவாக்குவதில், நூறு சதவீதம் பங்களித்த இந்த சமூகம், இன்னும் ஏக்கத்துடனேயே வாழ்வதாகவும் குறிப்பிட்டார். இந்த நிகழ்விலேயே பிரபல தொலைக்காட்சி, வானொலி அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, அகில இலங்கை மக்கள் காங்கிரசில் தாம் இணைந்துள்ளதாகவும், றிசாத்தின் கரங்களை பலப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்தார். “அஷ்ரபின் குணாதிசயங்களை றிசாத்தில் காண்கின்றேன்” என அவர் தெரிவித்த போது, மண்டபம் ஒட்டுமொத்த கரகோஷங்களால் அதிர்ந்தது.

வரிப்பத்தான்சேனையில், சதொசவை திறந்துவைத்த பின்னர், வெயிலின் அகோரத்தையும் தாங்கிக்கொண்டு, குழுமியிருந்தத சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் மத்தியில், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் உரையாற்றிய அமைச்சர், வில்பத்துப் பிரச்சினைய தொட்டுச் சென்றார்.

 

rsd_Fotor

சம்மாந்துறை, பெரிய பள்ளிவாசலில் சனிக்கிழமை அன்று, மஹ்ரிப் தொழுகையை முடித்துக்கொண்டு, அமைச்சர் றிசாத் வெளியேறிய போது மக்கள் வெள்ளம் அவரைச் சூழ்ந்துகொண்டது. சம்மாந்துறை பள்ளிவாசலில் இருந்து, மணிக்கூட்டு கோபுரச் சுற்றுவட்டம் வரை நகரம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அமைச்சர், மக்கள் வெள்ளத்தின் மத்தியில் நகர்ந்து சென்று, சுற்று வட்டத்துக்கு அப்பால் அமைந்திருந்த, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பணிமனையை திறந்துவைத்தார். இந்தக் காரியாலயம். கடந்த காலங்களில் மர்ஹூம் அன்வர் இஸ்மாயிலின்  கட்சிக் காரியாலயமாக இயங்கியதாக அங்கு பேசிக்கொள்ளப்பட்டது.

காரியாலயத் திறப்பு விழாவின் பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில், அமைச்சர் உட்பட அதிதிகள், கட்சிப் பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர். நள்ளிரவைத் தாண்டிய போதும் கூட்டம் இடம்பெற்றது. இரவு 12.45 மணியளவில் தனது உரையை ஆரம்பித்த அமைச்சர், மிகவும் ஆக்ரோஷமாகவும், சமுதாய நலனை முன்னிறுத்தியும் பல்வேறு விடயங்களை புட்டுவைத்தார்.

 

rishad bathiyudeen

ஒலுவில், பாலமுனை மக்களையும் அமைச்சர் சந்தித்த போது, அவர்கள் அழாத குறையாக பல விடயங்களை எடுத்துரைத்தனர். துறைமுக நிர்மாணப் பணிகளுக்கென ஒலுவில் மக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்கு இற்றைவரை நஷ்டஈடு வழங்கப்படவில்லை. முஸ்லிம் சமூகத்தை மேம்படுத்துவதற்காக இந்தக் கிராமம் தன்னையே தியாகம் செய்துள்ள போதும், இந்தக் கிராம மக்களுக்கு எந்த விதமான மேம்பாடும் கிடைக்கவில்லையென ஊர்ப்பிரமுகர்கள் குறிப்பிட்டபோது, அமைச்சர் மிகவும் கவலையுடன் காணப்பட்டார்.

அக்கரைப்பற்றுவில் மக்கள் கலந்துரையாடலை முடித்துவிட்டு, சுகவீனமுற்றிருக்கும் மூத்த ஊடகவியலாளர் மீரா இஸ்ஸதீனிடம் சுகம் விசாரிக்கச் சென்றபோது, அங்கு குழுமியிருந்த பத்திரிகையாளருடன், அரசியல் நிலவரங்களை கேட்டறிந்துகொண்டார்.

meera rishad 4

 

அக்கரைபற்றுவிலிருந்து, பொத்துவிலுக்குச் சென்ற அமைச்சர், இடையே பல்வேறு கிராமங்களுக்கு சென்றார். குறிப்பாக நீரின்றி, மின்சாரமின்றி, அடிப்படை வசதிகளின்றி வாழும் செங்காம மக்களை சந்தித்த அமைச்சர், மனமுருகினார். அவர்களின் அடிப்படைத் தேவைகளை கவனிப்பதற்கான ஆயத்த நடவடிக்கைகளை அங்கிருந்தே மேற்கொண்டார். பொத்துவிலில், அங்குள்ள சென்ரல் ரோட், இன்னுமே மணல் ரோட்டாக இருப்பதைக் கண்டு அமைச்சர் வெதும்பினார். பொத்துவிலில் காரியாலயத்தை திறந்துவைத்த பின்னர் அங்கு உரையாற்றியபோது, பொத்துவில் மக்கள் படுகின்ற அவஸ்தைகளையும், பொத்துவில் ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது வைத்தியர்கள் தமக்குத் தெரிவித்த விடயங்களையும் தொட்டுக் காட்டிய அமைச்சர், எமது கட்சிக்கு, அம்பாறை மாவட்டத்தில் மாகாண சபையிலோ, பாராளுமன்றத்திலோ, பிரதிநிதிகள் இல்லாதபோதும் வாக்களித்த சுமார் 33000 மக்களுக்கு தமது கட்சி ஒருபோதும் துரோகம் செய்யமாட்டாது எனவும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார். எதிர்காலத்தில் இந்த மக்களின் விமோசனத்துக்காக தமது கட்சி உழைக்கும் என உறுதிபடத் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த விஜயத்தில் பிரதி அமைச்சர் அமீர் அலி, எம்பிக்களான எம்.எச்.எம். நவவி, அப்துல்லாஹ் மஹ்ரூப், இஷாக் ரஹ்மான் மற்றும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜெமீல், கஹடகஹா கிரபைட் தலைவர் எஸ்.எஸ்.பி.மஜீத், மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் சுபைர்டீன், கிண்ணியா பிரதேச முன்னாள் தவிசாளர் ஹில்மி மஹ்ரூப், உலமாக் கட்சியின் தலைவர் முபாரக் மௌலவி, வடமாகாண மஜ்லிஸ் சூரர தலைவர் முபாரக் ரஷாதி, கல்வி நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் டாக்டர். ஷாபி, மான்குட்டி ஜுனைதீன்      உட்பட கட்சிப் பிரமுகர்கள் பலர்    கலந்துகொண்டனர்.

பாலமுனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் நீதிபதி கபூர் கட்சியில் இணைந்துகொண்டமை  குறிப்படத்தக்கது.

 

 ஊடகப் பிரிவு