20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியை வீழ்த்திய பிறகு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சேமி கூறுகையில், ‘டாஸில் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். இதுவரை நடந்த 5 ஆட்டங்களிலும் டாஸ் ஜெயித்தது ஆச்சரியம் அளிக்கிறது. இது சேசிங் செய்யக்கூடிய ஆடுகளம் என்பதை அறிவோம். கிறிஸ் கெய்ல் தொடக்கத்திலேயே ஆட்டம் இழந்தாலும் கூட, சிமோன்ஸ், சார்லஸ், ரஸ்செல் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றிருப்பதை நினைத்து மிகவும் பெருமை அடைகிறேன். 19 வயதுக்குட்பட்டோருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பையை கைப்பற்றியது. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பையில் எங்களது அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இவை எல்லாம் எங்களுக்கு சாதிப்பதற்கு உந்து சக்தியாக இருந்தது.’ என்றார்.
82 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருது பெற்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர் லென்டில் சிமோன்ஸ் கூறும் போது, ‘ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பிளட்சர் காயமடைந்ததும், எனக்கு அழைப்பு வந்தது. உடனடியாக இந்தியாவுக்கு புறப்பட்டு வந்தேன். சோர்வாக இருந்ததால் காலையில் சிறிது நேரம் பயிற்சி செய்து விட்டு, பகல் 12 முதல் 4 மணி வரை தூங்கினேன். நன்கு ஓய்வு எடுத்த பிறகே களம் இறங்கினேன். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை எனக்கு சொந்த மைதானம் போன்றது. இங்குள்ள சீதோஷ்ண நிலையை மிகச்சரியாக கணித்து செயல்பட்டேன். நான் சிறப்பாக விளையாடியதற்கு ஐ.பி.எல். அனுபவம் உதவிகரமாக இருந்தது.’ என்றார். வெற்றி பெற்றதும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தங்களது வழக்கமான நடனத்தை ஆடி மகிழ்ந்தனர். ஓட்டலிலும் இதே உற்சாகம் களை கட்டியது.
20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் கொல்கத்தாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பலப்பரீட்சை நடத்துகின்றன.