6–வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்–10 சுற்று நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இதன் முடிவில் குரூப் 1–ல் வெஸ்ட் இண்டீஸ் (6 புள்ளி), இங்கிலாந்து (6 புள்ளி), குரூப் 2–ல் நியூசிலாந்து (8 புள்ளி), இந்தியா (6 புள்ளி) ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தன. நடப்பு சாம்பியன் இலங்கை, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட எஞ்சிய 6 அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தன.
இந்த நிலையில் இன்று இரண்டாவது அரையிறுதியில் மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளை வெற்றி கொண்டு தாங்கள் குறித்து தவறாக மதிப்பிட வேண்டாம் என மீண்டும் வலுவான நிலையில் உள்ளது.
இந்தியாவுடனா போட்டி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன டேரன் சமி கூறியதாவது:-
எனது கவனம் முழுவது எதிரணி வீரர்களை விட எங்கள் வீரர்கள் மீதுதான் உள்ளது. வீராட் கோலி ஒரு தனிச் சிறப்பு மிக்க வீரர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் ஒரு சிறந்த வீரர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர் ரன் எடுக்கும் விதம் ஆச்சரியமாக உள்ளது. அவரது திறமையான பேட்டிங்கால் இந்தியா வெற்றிகளை பெற்று வருகிறது.
இந்தியாவை சொந்த மண்ணில் தோற்கடிப்பது கடினம். இந்த போட்டி 15 வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கும் 78 ஆயிரம் இந்திய ரசிகர்களுக்கும் இடையிலான மோதல். ஆனால் நான் கூறியது போல நாங்கள் வெஸ்ட் இண்டீஸ் அணி மீதுதான் கவனம் செலுத்துவோம்.
19-வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றுள்ளது. தற்போது பெண்கள் அணியும், ஆண்கள் அணியும் டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இரு அணிகளும் கோப்பையை வென்றால், 2016-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்துவிடும்.
இவ்வாறு சமி கூறினார்.