அமெரிக்கா, பாக்.,கிற்கு தெரியாமல், பின்லேடனை கொன்றதாக கூறிய தகவல்கள் அனைத்தும் பொய் : ‘டான்’ பத்திரிகை !

 அல் – கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை, உண்மையில் காட்டிக் கொடுத்தது யார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, அமெரிக்க புலனாய்வு பத்திரிகையாளர் செய்மர் ஹெர்ஷ் அளித்த தகவல்களை, ‘டான்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள விவரம்: ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானில், அபோதாபாத் நகரில் உள்ள பங்களாவில் பதுங்கியிருந்தார். இதை, பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அதிகாரி ஒருவர், 2010ல், பாக்.,ல் இருந்த, அமெரிக்க சி.ஐ.ஏ., பிரிவு தலைவர் ஜோனாத்தன் பேங்க் என்பவரிடம் தெரிவித்தார். 

images
ரூ.1,500 கோடி:

அந்த ஐ.எஸ்.ஐ., அதிகாரிக்கு, பின்லேடன் தலைக்கு நிர்ணயிக்கப்பட்ட, 1,500 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இப்போது, அவர் வாஷிங்டனில், சி.ஐ.ஏ., ஆலோசகராக உள்ளார். அவர் கொடுத்த தகவலை ஊர்ஜிதப்படுத்திக் கொண்ட, சி.ஐ.ஏ., அமெரிக்க அதிரடி படையை சேர்ந்த ஒருவரையும், இரு தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களையும், பாக்.,கிற்கு அனுப்பியது.

 அவர்கள், காஸி பகுதியில், ஐ.எஸ்.ஐ., அமைத்து தந்த அறையில், தாக்குதலுக்கான ஒத்திகையை மேற்கொண்டனர். அமெரிக்க அதிரடி படை, பாக்.,கிற்கு தெரியாமல், பின்லேடனை தீர்த்துக் கட்டியதாக கூறியது பொய். இது, பாக்., அரசு, ஐ.எஸ்.ஐ., தலைவர் அகமது சுஜா பாஷா, ராணுவ தலைவர் அஷ்ரப் கயானி ஆகியோருக்கு தெரிந்தே நடந்த சம்பவம். சவுதி அரேபியாவிற்கும் பின்லேடன் மறைந்துள்ள இடம் தெரியும். அவனை, ஐ.எஸ்.ஐ., கண்காணிப்பில், வைத்திருக்குமாறு சவுதி, பாகிஸ்தானிடம் கூறியுள்ளது.

 அதே சமயம், பின்லேடன் சந்தேகப்படாமல் இருக்க, அவன் ஆப்கனில், இந்துகுஷ் மலைப்பகுதியில் பதுங்கியுள்ளதாக, அமெரிக்கா கதை விட்டது. இதுவும், பாக்., செய்த ஏற்பாடு. பின்லேடன் இறப்புக்கு சாட்சியாக விரும்பாத பாக்., அவனை கொன்ற செய்தியை, ஒருவாரம் கழித்து வெளியுலகிற்கு தெரிவிக்க வேண்டும் என, அமெரிக்காவிடம் தெரிவித்தது. அதற்கு அமெரிக்கா ஒப்புக் கொண்டது. ஆனால், பாக்.,கிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, பின்லேடன் கொல்லப்பட்ட செய்தியை, ஒபாமா பகிரங்கமாக, ‘டிவி’யில் வெளியிட்டார்.

 இதனால், பாக்., தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டது. பாக்.,கிற்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என, அமெரிக்க பாதுகாப்பு துறை முன்னாள் செயலர் ராபர்ட் கேட்ஸ், ஒபாமாவிடம் வாதாடினார். இந்த வாக்குவாதம் காரணமாக, பின்லேடன் கொல்லப்பட்டது குறித்த, ‘டிவி’ ஒளிபரப்பு, இரண்டு மணி நேரம் தாமதமானது. அதன் பின்னரே ஒளிபரப்பானது. ஒபாமாவின் இந்த முடிவிற்கு, அப்போது வரவிருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் தான் முக்கிய காரணம். அதில் வெற்றி பெற, பின்லேடன் கொலை உதவும் என, ஒபாமா கணக்கு போட்டு, காய் நகர்த்தினார். 
சிறையில் அடைத்தது:

இந்நிலையில், பாக்., தன்னை தற்காத்துக் கொள்ள, சி.ஐ.ஏ.,க்கு பின்லேடனை காட்டிக் கொடுத்ததாக கூறி, ஷகீல் அப்ரிதி என்ற மருத்துவரை, கைது செய்து பெஷாவர் சிறையில் அடைத்தது. அவருக்கு இந்த சம்பவம் குறித்து எதுவும் தெரியாது. நோய்வாய்ப்பட்டிருந்த பின்லேடன் கொல்லப்பட்ட பின், அமீர் அஜீஸ் என்ற மருத்துவர், மரபணு சோதனை நடத்தி, இறந்தது பின்லேடன் தான் என்று கூறினார். அவருக்கு, பரிசுத் தொகையில் ஒரு பங்கு வழங்கப்பட்டது. மொத்தத்தில், அமெரிக்கா, பாக்.,கிற்கு தெரியாமல், பின்லேடனை கொன்றதாக கூறிய தகவல்கள் அனைத்தும் பொய். இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.