அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்க தயார் – அபயராம விகாராதிபதி ஆனந்த தேரர்

mahinda-rajapakse-speaks-to-muruththettuwe-ananda-thero_Fotor
 நாட்டுக்கும் மக்களுக்கு அழிவை கொண்டு வரும் சகல சந்தர்ப்பங்களிலும் பௌத்த மத தலைவர்கள் முன்னுக்கு வந்து அதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளதாக அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக பேசுவதை இந்த காலத்தில் இனவாதம் என வர்ணிக்கின்றனர் எனவும் இவ்வாறு நாட்டுக்காக பேசிய 48 பிக்குமாரை அரசாங்கம் கைது செய்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற துறவிகளின் குரல் அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்திகளை தற்போதைய அரசாங்கம் அழித்து வருகிறது. ஜா-எல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த நடை பயிற்சி செய்யும் பாதையில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் இரவு நேரங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து 14 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அரசாங்கம் ஆடிய ஆட்டமும் இல்லை. மேளமும் உடையவில்லை.

பிக்குமாருக்கு எதிரான அடக்குமுறை மற்றும் மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏப்ரல் 6 ஆம் திகதி கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் புத்தர் சிலைக்கு அருகில் எதிர்ப்பு கூட்டம் நடத்தப்படும்.

தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டால், அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்க தயார்.

ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கத்தை மண்டியிட வைத்த பௌத்த மத தலைவர்களுக்கு, இந்த அரசாங்கத்தை மண்டியிட வைப்பது பெரிய காரியமல்ல எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

முருத்தெட்டுவே ஆனந்த தேரர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மிகத் தீவிரமான ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.