ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக கடமையேற்றுள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அத்துடன், மல்வது பீட மகாநாயக்கத் தேரரையும் சந்தித்து ஆசீர்வாதம்பெற்றுக்கொண்ட நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது தொடரந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதியின் உத்தரவிற்கமையவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டு அணிகளாக பிரிந்து செயற்படுவதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதியின் அனுமதியுடனேயே ஒரு தரப்பினர் கூட்டு எதிர்கட்சியாகவும், மற்றைய அணியினர் நல்லாட்சி அரசாங்கத்தின் பங்குதாரராகவும் செயற்பட்டுவருவதாகவும் மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், கூட்டு எதிர்கட்சியினருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் பிளவுகள் ஏற்பட்டால் அதன் நன்மைகள் ஐக்கிய தேசியக் கட்சியினையே சாரும் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், 2020ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியை அமைப்பதே தமது பிரதான நோக்கம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நிரந்தரமாக கூட்டணி அரசாங்கத்தில் இருக்கும் எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.