தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்

AFP_938IW

 

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நாக்பூரில் நடந்த ஆட்டத்தில் (குரூப்1) வெஸ்ட் இண்டீஸ் – தென்ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. 

ஏற்கனவே இங்கிலாந்து, இலங்கை அணிகளை வீழ்த்தியுள்ள டேரன் சமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரைஇறுதியை உறுதி செய்யும் முனைப்பில் களமிறங்கியது. அதேசமயம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு இது முக்கியமான ஆட்டம் ஆகும். இந்த போட்டியில் தோற்றால் அவர்களின் அரையிறுதி வாய்ப்பு மங்கிவிடும்.

சேஸிங் செய்வது கடினம் என்று கூறப்படும் நாக்பூர் மைதானத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் சமி முதலில் பந்து வீச முடிவு செய்து ஆச்சரியப்படுத்தினார். சமியின் முடிவு சரி என்று நிரூப்பிப்பது போல் தென் ஆப்பிரிக்கா அணி 20 ரன்கள் எடுப்பதற்குள் ஆம்லா, டூ பிளசிஸ் மற்றும் ராஸவோவ் ஆகியோரை இழந்து தடுமாறியது. 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டி வில்லியர்ஸ் பிராவோவின் ஸ்லோ பந்து வீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அதிரடி வீரர் மில்லர் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் கெயில் பந்தில் போல்டானார். அதன் பிறகு டி காக்கும், டேவிட் விஸ்சும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக ஆடிவந்த டேவிட் விஸ் 28 ரன்னிலும், டி காக் 47 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் தென் ஆப்பிரிக்காவின் ரன் வேகம் குறைந்தது.

கடைசி மூன்று ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்கா 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 20 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட்களை இழந்து 122 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆந்த்ரே ரசல், கெயில் மற்றும் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள். 

123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. ரசிகர்களின் கரக்கோஷத்துடன் களமிறங்கிய கெயில் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க வீரரான சார்ல்ஸ் 32 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். 

கடந்த ஆட்டத்தில் கலக்கிய பிளட்சர் இன்று 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய சாமுவெல் 19-வது ஓவர் வரை களத்தில் இருந்து அந்த அணி வெற்றி இலக்கை நெருங்க முக்கிய காரணமாக விளங்கினார். வெஸ்ட் இண்டீஸ் எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி ஓவரில் அந்த அணி ஒன்பது ரன்கள் எடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது, ரபாடா வீசிய கடைசி ஓவரை பார்த்வெயிட் எதிர்க்கொண்டார். முதல் பந்தில் ரன் எடுக்க முடியவில்லை, ஆனால் அடுத்த பந்தை சிக்சருக்கு விரட்டி அசத்தினார். 19.3 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி இலக்கை அடைந்து, மூன்று விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாமுவெல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இந்த வெற்றி மூலம் வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.