கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு பங்கேற்று பேசினார்.
முன்னதாக அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
தி.மு.க–காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் குலாம் நபி ஆசாத் கலந்து கொள்கிறார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக நான் மனுதாக்கல் செய்யவில்லை. கட்சி தலைவி சோனியாகாந்தி, ராகுல்காந்தி போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன். இந்த தேர்தலில் ஜனநாயகம் ஜெயிக்க வேண்டுமென்று எண்ணுகிறோம். ஜனநாயகம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது.
மக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது. அ.தி.மு.க. கூட்டணியில் சரத்குமார் சேர்ந்தது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுக்கூட்டத்தில் குஷ்பு பேசியதாவது:–
நடிகையாக இல்லாமல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக உங்கள் முன் நிற்பதில் பெருமை கொள்கிறேன். காங்கிரஸ் கட்சி இந்தியாவில் 130 ஆண்டுகளுக்கு முன்னர் வளர ஆரம்பித்த ஒரு ஆலமரம். அதில் உள்ள கிளைகள்தான் இன்று பா.ஜனதா மற்றும் தமிழக திராவிடக் கட்சிகள். அதில் உள்ள கோடிக்கணக்கான தொண்டர்களில் ஒருவராகத்தான் நானும் உள்ளேன்.
தமிழக மக்களாகிய நீங்கள் வரும் தேர்தலில் யோசித்து பார்த்து வாக்களிக்க வேண்டும். ரூ.1,000, ரூ.2,500 கொடுக்கிறார்கள் என்று ஏரியாவுக்கு ஏரியா பேரம் பேசுவார்கள். அவர்களை நம்பி நீங்கள் வாக்களித்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு சோதனைகளைதான் சந்திக்க வேண்டும்.
மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கும் கட்சி காங்கிரஸ். உங்கள் அருகாமையில் உள்ள கேரளாவில் நடைபெறும் ஆட்சியே அதற்கு சாட்சி. அங்கு முதல்–மந்திரி உம்மன் சாண்டி 24 மணி நேரமும் மக்களுக்காக உழைத்து வருகிறார்.
எனவே நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ‘இலைகள்’ உதிரும், ‘சூரியன்’ உதயமாகும். ‘கைகள்’ உதவும். இது சாதாரண கை இல்லை. இந்தியாவில் வாழும் மக்கள் ஒவ்வொருவரின் நம்பிக்கை.
குமரி மாவட்டத்தில் குளச்சலில் வர்த்தக துறைமுகத்தை அமைக்காமல் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான இணையத்தில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் துறைமுகம் அமைக்க முயற்சிக்கிறார்கள். மாவட்டத்திற்கு வளர்ச்சி தேவைதான். அதே நேரம் மக்களுக்கு பாதிப்பு வராமல் நல்ல திட்டங்களை கொண்டு வர முடியுமா? என்று யோசிக்க வேண்டும்.
வரும் தேர்தலில் நாங்கள் ஜெயித்தால் யு.கே.ஜி. முதல் கல்லூரி வரை இலவச கல்வி கொடுப்போம்.
குமரி மாவட்டத்தில் பஸ்கள் மோசமான நிலையில் உள்ளது. ரோடுகளும் மோசமாக காணப்படுகிறது.
தமிழக மக்கள் மாற்றம் தேவை என்று கூறி வருகிறார்கள். அந்த மாற்றம் நிச்சயம் வரும். அதை தி.மு.க–காங்கிரஸ் கூட்டணியால் மட்டுமே கொண்டு வர முடியும். கொண்டு வருவோம். காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணியை ஜெயிக்க வைப்போம். தமிழகத்தின் மகளாக, மருமகளாக நான் கேட்கிறேன்.
மாற்றம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. வரும் தேர்தலில் தி.மு.க– காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்திற்கு நகர தலைவர் மாகின் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் கண்ணாட்டு விளை பாலையா, அசோகன் சாலமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் சாம்மோகன்ராஜ் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் ராஜலிங்க ராஜா, இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ஹசன் ஆரூண் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற குஷ்புவிற்கு வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.