எனது அதிகாரங்களைப் பறித்தெடுத்தவர்களது மேடையில், அதிகாரமில்லாத மேடையில் நான் ஏறி என்னை விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அதனாலே நான் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
என்னைக் கட்சியிலிருந்து விலக்கினாலும் மரத்திலிருந்து விலக்க முடியாது. நான் மரச்சின்னத்தை அணைத்தவாறே மரணிப்பேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.
என்னைக் கட்சியிலிருந்தும் விலக்கி விட்டதாக ஒரு சிலர் வதந்திகள் பரப்பினாலும் விலக்கி விட்டதாகக் கூறி எனக்கு இதுவரை கடிதம் அனுப்பி வைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
பாலமுனையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி கலந்து கொள்ளாமை குறித்து வினவியபோதே அவர் ‘விடிவெள்ளி’க்கு இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் ‘அதிகாரமில்லாத ஒரு மேடையில் ஏறுவதற்கு அருகதை இல்லை என்பதை உணர்ந்தேன். மேடையில் அதிகாரமற்ற வெறும் ஜடமாக அமர்ந்திருக்க நான் விரும்பவில்லை. அதற்கு எனது மனச்சாட்சி இடமளிக்கவும் இல்லை.
இதனாலே தேசிய மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். என்னைப் புறந்தள்ளுவதற்கு ஒரு கூட்டம் முயற்சிக்கிறது. எனது அமைதியைப் பயன்படுத்திக்கொண்டு செயற்படுகிறார்கள். தேசிய பட்டியல் விவகாரத்தில் நான் அமைதியாகவே இருந்தேன். என்றாலும் நான் தேசியப் பட்டியல் எம்.பி பதவி கேட்டு சண்டை பிடிப்பதாக மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களைப் பரப்பினார்கள்.
எனக்கு தேசிய பட்டியல் எம்.பி பதவி தருவதாகக் கூறப்பட்டது. அவ்வாறு கூறி நான் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுத்தார்கள். இவ்வாறு மூன்று தடவைகள் என்னைத் தேர்தலில் போட்டியிட விடவில்லை. நான் தடுக்கப்பட்டேன். அமைச்சரின் சகோதரருக்கு தேசியப்பட்டியலில் எம்.பி.பதவி வழங்கப்பட்ட போதும் அதற்கு எதிராக நான் பிரசாரம் செய்யவில்லை அமைதிகாத்தேன்.
எனது அமைதியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அமைதியாக இருந்ததால் எனது அதிகாரங்களைப் பறித்தெடுத்துக் கொண்டார்கள்.
மக்கள் என்னை நிராகரித்திருந்தால் நான் ஆறுதலடைவேன். ஆனால் மக்கள் என்னை நிராகரிக்கவில்லை. என்னைப் பழிவாங்க நினைத்திருந்தால் தேர்தலில் களமிறக்கி தோற்கடித்து பழி வாங்கியிருக்கலாம். நான் மக்களால் தோற்கடிக்கப்படவில்லை. மக்கள் என்னை மதிக்கிறார்கள். மக்களை அணுகவிடாமல் திட்டமிட்டு சதி செய்து விட்டார்கள்.
நான் ஓய்வு பெற வேண்டிய இந்தக் கடைசிக் கட்டத்தில் என்னைப் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க விட்டு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் அதிகாரத்தைத் தந்து என்னைக் கௌரவப் படுத்தியிருக்க வேண்டும். ஆனால் என்னைக் காலால் உதைத்து விட்டார்கள். நாட்டிலுள்ள சட்டத்தின் மூலம் என்னைக் கட்சியிலிருந்தும் வெளியேற்றலாம்.
ஆனால் எனக்கும் மரத்துக்குமிடையில் உள்ள உறவு சட்டத்துக்கும் அப்பாற்பட்டதாகும். மரத்திலிருந்து என்னை வேறாகப் பிரித்தெடுத்து விடமுடியாது.
மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப்பின் பேச்சுக்களை தொகுத்து நூலொன்றினை வெளியிடவுள்ளேன். அந்த நூலினைத் தற்பொழுது எழுதிக் கொண்டிருக்கின்றேன். ஏன் மரச்சின்னத்துடன் அஷ்ரப்பின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டேன் எனும் விபரங்களை நூலில் உள்ளடக்கியுள்ளேன். தற்போது 200 பக்கங்கள் எழுதியுள்ளேன். விரைவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வேன்.
நான் யாருக்கும் அநியாயம் செய்ய இருக்கவில்லை. அப்படியானவன் நானல்ல. தேர்தலில் என்னைப் போட்டியிட வைத்து மக்களால் தோற்கடித்து பழிவாங்கியிருக்கலாம்.
ஆனால் இப்பொழுது நடைபெறுவது மறைந்திருந்து என்னைத்தாக்கி பழிவாங்கும் நடவடிக்கையாகும். எல்லாவற்றையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவன் நிச்சயம் நியாயத்தின் பக்கம் இருப்பான் என்பதில் நான் மட்டுமல்ல மக்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்றார்.