இப்னு ஜமால்
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடானது நேற்று இனிதே நிறைவேறியது. இம்மாநாட்டுக்கு ஜனாதிபதி – பிரதமர் என இலங்கையின் பல முக்கிய அரசியல் பிரதிநிதிகளின் வருகையுடன் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
சுமார் 300 இலட்சம் ரூபாய் பணம் செலவழிக்கப்பட்டு மேள தாளங்களுடன் சுமார் 25ஆயிரம் முகா போராளிகளின் சங்கமத்துடன் இனிதே முகா தேசிய மாநாடு நிறைவு பெற்றது.
எவ்வித அபிவிருத்தியுமின்றி வாடிப்போயிருந்த பாலமுனை பிரதேசம் இம்மாநாட்டினால் கலகலப்பாக மாறியது. 24 மணித்தியாலயங்களும் சனநடமாட்டத்துடன் இயங்க ஆரம்பித்தது. குறித்த மைதானத்தில் பல இலட்சம் பணம் செலவழிக்கப்பட்டு மேடைகள் பதாகைகள் அமைக்கப்பட்டு சோடிக்கப்பட்டன.
நாட்டின் நாலா புறத்திலிருந்தும் முகா போராளிகள் பஸ்களில் கட்சி அமைப்பாளர்களினால் தொழில் வாய்ப்பு போன்ற வாக்குறுதிகளின் அடிப்படையில் அழைத்து வரப்பட்டார்கள். இதையும் தாண்டி சிலர் உணர்வுடனும் கலந்து கொண்டனர்.
சரி நாம் இப்போது விடயத்திற்கு வருவோம் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு ஏன் இந்த முறை அம்பாறை மாவட்டத்தில் மிக அவசர அவசரமாக நடத்தப்பட்டது.
பல வருடகால பிரச்சினைகளை அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் சுமந்து கொண்டு வரும் நிலையில் அவைகளுக்கு இதுவரை எவ்வித தீர்வுகளும் கிடைக்கவில்லை என அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அங்கலாய்த்து வருகின்ற நிலையில்; இம்மக்களின் பிரச்சினைகள் மற்றும் விமர்சனங்கள் என எதையும் கருத்தில் எடுக்கலாமல் இம்மாநாட்டை அம்பாறையில் நடத்துவதற்கான தேவை ஏன் முகா தவைர் ரவூப் ஹக்கீமுக்கு ஏற்பட்டது?
அம்பாறை மாவட்டமானது முகாவின் கோட்டை என வர்ணிக்கப்படுவதை நாம் அறிந்ததுதான். இக்கோட்டையில் ஏற்பட்ட சரிவு தான் இம்மாநாட்டை அம்பாறை மாவட்டத்தில் நடத்தக் காரணம்.
கடந்த பொதுத் தேர்தலில் அ.இ.ம.கா முதல் தடைவையாக களமிறங்கி புதுமுகங்களை வேட்பாளர்களாக நிறுத்தி 33 ஆயிரம் வாக்குகளை பெற்றமை ரவூப் ஹக்கீமை ஆட்டம் காணவைத்தது. கோட்டை தனது கையைவிட்டு வீழப்போகின்றது என்ற சேதி ஹக்கீமக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் நாட்டின் ஏனைய முகா கோட்டைகள் அஸ்திவாரத்துடன் புதைந்து விட்ட நிலையில் எஞ்சியிருந்த அம்பாறையும் தன்னை விட்டு சரிந்தால் தனது தலைமைத்துவம் கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சம் ரவூப் ஹக்கீமை சூழ்ந்து கொண்டது.
இந்த சரிவை நிமிர்த்தி அம்பாறை மாவட்டம் முகா வின் கோட்டை என்பதை மீண்டும் உலகுக்கு பறைசாற்ற வேண்டிய தேவை ஹக்கீமுக்கு ஏற்பட்டது. பல இலட்சம் செலவு செய்து முகா போராளிகளையும் ஜனாதிபதியையும் ஒன்று சேரத்து இந்த மாநாட்டை நடத்தியதன் மூலம் அம்பாறை மாவட்டம் அ.இ.ம.கா பக்கம் வீழ்வதை தடுத்து விட்டேன் என ரவூப் ஹக்கீம் கனவு கண்டு கொண்டிருப்பாராக்கும்.
இவரின் தூக்கம் கலையும் வரைக்கும் தான் இவரது கனவு நிலைத்திருக்கும்.
ஏனெனில் எவ்வித படை பட்டாளங்கள் இன்றி மொத்தம் மூன்று தடவைகள் ஆறு நாட்கள் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்து மக்களிடத்தில் உரிமை அரசியலை எடுத்துச் சென்ற ரிசாதுக்கு அம்பாறை மாவட்ட மக்கள் நம்பிக்கையுடன் அளித்த வாக்குகள் 33 ஆயிரமாகும்.
33 ஆயிரம் வாக்களித்த இம்மக்களுக்களின் நன்றிக் கடனுக்காக பல தொழில் வாய்ப்புக்களையும் தொழில் பேட்டைகளையும் மற்றும் நிறுவனங்களின் தலைவர் பதவிகளைம் வழங்கி இம்மக்களுக்கு ரிசாத் உதவி வருகின்றார். அம்மக்களை கௌரவித்துள்ளார்.
நான் முஸ்பாத்திக்கு கேட்கின்றேன் ரவூப் ஹக்கீம் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு என்ன செய்துள்ளார்?, இம்மக்களின் எந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன? நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகாரசபையில் வழங்கப்பட்ட தொழில்களையாவது நிரந்தரமாக்க முடிந்ததா? வெளிநாடுகளில் பல இலட்சம் சம்பளம் பெற்ற இளைஞர்கள் 20 ஆயிரம் ரூபா சம்பளத்தினால் திண்டாடி வருகின்றனர்.
இதனையும் விடுவோம். ஆகக்குறைந்தது ஒலுவில் பாலமுனை மக்களின் வறுமையைப் போக்கவாவது ரவூப் ஹக்கீம் இந்த மாநாட்டை பயன்படுத்தினாரா? என்றால் அதுவும் இல்லை. இதன் வெளிப்பாடு தான் ஒலுவில் பிரதேசத்தில் இவருக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளினால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை.
ரவூப் ஹக்கீமுக்கும் அவரது அடிவருடிகளுக்கும் இம்மாநாடு வெற்றியாக இருக்கலாம். ஆனால் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு இம்மாநாடு பயங்கர தோல்வியே. இம்மக்கள் இம்மாநாட்டினால் ஒரு துளியளவு கூட நன்மையையும் பெறவில்லை.
தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் காலத்தில் 1996ம் ஆண்டு கல்முனையில் நடத்தப்பட்ட மாநாட்டை இந்த மாநாட்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் இம்மாநாடு தோல்வியென்பது அக்கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு தெரியும்.
ஜனாதிபதியோ பிரதமரோ இன்றி தலைவர் அஸ்ரபின் தலைமையில் நடந்த அந்த மாநாட்டுக்கு தமிழ் பயங்கரவாதிகளின் துப்பாக்கிளை துச்சமென மதித்து உணர்வு பூர்வமாக பலஆயிரம் மக்கள் நடை பயணமாக கல்முனைக்கு வருகை தந்து தங்களது செலவில் காலை மற்றும் பகல் உணவுகளை அருந்தி நாரே தக்பீர் கோஷத்துடன் உரிமைப் பிரகடனம் செய்து சென்றதை தற்போதுள்ள முகா மூத்த உறுப்பினர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
ஆனால் முகா தேசிய மாநாட்டில் நடந்தது என்ன? இலவச பஸ் சேவை, உணவு, குடிநீர் போத்தல்கள் ,தூரப் பிரதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு பணம் என்பவற்றுடன் இம்மாநாட்டுக்கு வருவபர்களுக்கு தொழில் உத்தவரவாதமும் பிரதேச அமைப்பாளர்களினால் வழங்கியே ரவூப் ஹக்கீமுக்கு ஆள் சேர்த்துள்ளார்கள்.
மு.கா போராளிகளே நீங்கள் உங்கள் இதயத்தில் கைவைத்துச் செல்லுங்கள். இந்த மாநாட்டுக்கு ஏன் சென்றீர்கள்? ரவூப் ஹக்கீம் என்ற நபருக்காகச் சென்றீர்களா? இல்லை எமது தலைவர் மாமனிதர் அஸ்ரபின் கட்சிக்காக சென்றீர்களா? உண்மையைச் சொல்லுங்கள். தியாகத்தினால் வளர்க்கப்பட்ட உரிமைக் கட்சி ரவூப் ஹக்கீம் போன்ற ஆளுமையற்ற தலைமைகளினால் அழிந்துவிடக் கூடாது என்ற எண்ணத்துடனே ஒவ்வொரு போராளிகளும் இம்மாநாட்டுக்கு சென்றார்கள்.
இந்த மாநாட்டிற்கு வரும் ஜனாதிபதி – பிரதமர் ஆகியோர் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் வாய்திறப்பார்கள் என்று எதிர்பார்த்துச் சென்ற முகா போராளிகள் ஏமாந்து போயிருப்பார்கள். இதற்கான முழுப்பொறுப்பையும் ரவூப் ஹக்கீமை எடுக்க வேண்டும். இம்மாநாட்டுக்கு ஜனாதிபதியையும் பிரதமரையும் அழைத்த ரவூப் ஹக்கீம் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை தீர்க்குமாறு கண்டிப்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்திருப்பார் என்றால் அவர்கள் அதனை கருத்தில் எடுத்திருப்பார்கள். அல்லது அது தொடர்பிலாவது பேசியிருப்பார்கள். ஆனால் அவ்வாறான எவ்வித கோரிக்கைளும் முன்வைக்கப்படவில்லை. இதனால் அவர்களும் ரவூப் ஹக்கீமைப் போல மகிந்தவுக்கு ஏசிவிட்டு முஸ்லிம்களிடம் இனவாத அரசியலை செய்துவிட்டுச் சென்றுள்ளார்கள்.
நீங்கள் யாரும் நினைத்த விடக் கூடாது இனிவரும் நாட்களில் இந்த மாநாட்டினால் தங்களுக்கு ஏதாவது நன்மை கிடைத்துவிடும் என்று. இந்த மாநாடானது ரிசாத் பதியுதீன் என்னும் நபரை வீழ்த்த அவரது கட்சியின் வேரூன்றுதலை அம்பாறையில் தடுக்கவே இம்மாநாடு நடத்தப்பட்டது. ரவூப் ஹக்கீம் தனது தலைமைத்துவதை;தை பாதுகாக்க அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் ஒவ்வொரு தலைகளையும் அடமானம் வைத்துச் சென்றுள்ளார்.
ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸ் என்னும் உரிமைக் கட்சியின் தலைமைப் பதவியை எடுத்து 15 வருடங்கள் முடிந்து விட்டன. ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸை பொறுப்பேற்றதிலிருந்து அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அடைந்த நன்மைகள் தான் என்ன? முஸ்லிம் போராளிகளே இதயபூர்வாக சிந்தியுங்கள்.