“வடமாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்கும் வகையிலும், அந்த மக்களின் பொருளாதார மேம்பாட்டை உயர்த்தும் வகையிலும் கட்சி, இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் அமைச்சர் றிசாத்தின் கரங்களை நாங்கள் பலப்படுத்துவோம்” இவ்வாறு வடமாகாண சுகாதார, சுதேச சமூக சேவைகள் மகளிர் விவகார அமைச்சர் டாக்டர். பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தின தேசிய விழா, வவுனியா காமினி மஹா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற போது, கெளரவ அதிதியாக கலந்துகொண்ட மாகாண அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் கலந்துகொண்டார்.
அமைச்சர் சத்தியலிங்கம் இங்கு மேலும் கூறியதாவது,
வவுனியா யுத்தத்தால் மிகவும் வெகுவாக பாதிக்கப்பட்ட மாவட்டமாகும். யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் நிறைவு பெற்றுவிட்டது. எனினும் இந்த மாவட்ட மக்கள் இன்னும் பின்தங்கியவர்களாகவே இருக்கின்றனர். வருமைக் கோட்டுக்குக் கீழே வாழ்க்கை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். யுத்தத்தின் விளைவாக இங்கு 40,000 அங்கவீனர்கள் இருக்கின்றனர். 45,000 விதவைகள் வாழ்கின்றனர். தாய், தந்தையர்களை இழந்த பிள்ளைகள் ஏராளம். அனைத்துக் குழந்தைகளையும் இழந்த பெற்றோர்கள் அநேகம். போரில் ஈடுபட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட 15,000 முன்னாள் போராளிகள் இருக்கின்றனர்.
எனவே, இந்த மக்களுக்கு ஒரு திட்டமிட்ட பொருளாதார கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். அமைச்சர் றிசாத் பதியுதீன் வவுனியா மாவட்ட மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றார். எனினும் இன்னும் அவர் செய்ய வேண்டிய பல விடயங்கள் இருகின்றன. தேவை என்று வரும்போது மாகாணம், மத்தியரசு என்று மக்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குத் தமது தேவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இந்த வகையில் அமைச்சர் றிசாத் உடன் இணைந்து உழைப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
வவுனியா மாவட்டத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்த, உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்கள் செயலிழந்து காணப்படுகின்றன. இவற்றை செயலுருப்பெறச் செய்ய அமைச்சர் றிசாத் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் இந்த மாவட்டத்தில் பெரும் பிரச்சினையாக இருக்கும், வேலை இல்லா திண்டாட்டத்தை இல்லாமல் செய்ய நாம் அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இந்த மாவட்டத்தில் சுமார் 5000 பட்டதாரிகள் வேலை இல்லாமல் இருக்கின்றனர். இவர்களின் எதிர்காலத்தை சிறப்பிக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.