மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு பிணை !

yositha rajapakse
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் யோசித்த ராஜபக்ஷ, நிஷாந்த ரணதுங்க உள்ளிட்ட ஐவர் கடந்த ஜனவரி மாதம் 30ம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

இதனையடுத்து, கடுவளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்களில், யோசித்த உள்ளிட்ட நால்வருக்கு இன்று பிணை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி இவர்களை ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், நீதிமன்றத்தின் அனுமதி இன்றி சந்தேகநபர்கள் வௌிநாடு செல்லவும் தடை விதித்துக்கப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர், நிஷாந்த ரணதுங்கவுக்கு பிணை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தனியாக பிணை மனு தாக்கல் செய்துள்ளதாகவும், ஏனைய நால்வருடனும் அவரது பெயர் உள்ளடக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் அவரது பிணை மனு குறித்த விசாரணை இன்று பகல் இடம்பெறவுள்ளது.