ஐ.பி.எல். எட்டாவது தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 39 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது. இந்தப் போட்டியில் டிவிலியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.
இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் விராட் கோஹ்லி–- டி வில்லியர்ஸ் ஜோடி 215 ஓட்டங்கள் சேர்த்து புதிய சாதனை படைத்தது.
ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூர்–- மும்பை அணிகள் மோதின.
இந்த போட்டியில் 2ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோஹ்லி மற்றும்- டி வில்லியர்ஸ் 215 ஓட்டங்களைக் குவித்தனர். இதுதான் ஒரு ஜோடி அதிகபட்சமாக ஐ.பி.எல். போட்டியில் எடுத்த ஓட்டங்களாகும். ஐ.பி.எல்.இல் மட்டுமல்ல 20 ஓவர் வரலாற்றிலும் இதுதான் ஒரு ஜோடியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாகும்.
இந்த ஆட்டத்தில் விராட் கோஹ்லி 50 பந்துகளில் 82 ஓட்டங்களையும் டி வில்லியர்ஸ் 59 பந்துகளில் 133 ஓட்டங்களையும் விளாசினர்.
ஐ.பி.எல். தொடரில் டி வில்லியர்ஸ் அடித்த அதிகபட்ச ஓட்ட எண்ணக்கை இதுவாகும். ஐ.பி.எல். தொடரில் தனிநபர் ஒருவர் எடுத்த மூன்றாவது அதிகபட்ச ஓட்டமும் இதுவேயாகும்.
இதனையடுத்து 236 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.