சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் படையில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினரும் இடம் பெற்று உள்ளனர்.
ஆனால், அவர்கள் யார்–யார் என்ற விவரம் தெரியாமல் இருந்தது. இதனால் சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் நாட்டை சேர்ந்த தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வந்தன.
இந்த நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் படையில் இருக்கும் 20 ஆயிரம் பேரின் பெயர் பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் இதை ரகசியமாக வைத்திருந்தனர். ஆனால், ஜெர்மனி நாட்டில் உள்ள 2 டி.வி. நிலையங்களுக்கு இந்த பட்டியல் கிடைத்து இருக்கிறது.
சிரியா நாட்டில் ராணுவ வீரராக இருந்த ஒருவர் அதில் இருந்து விலகி ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்தில் சேர்ந்து இருந்தார். பின்னர் அவர் ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்தில் இருந்தும் வெளியேறி விட்டார்.
அப்போது அவர் ஐ.எஸ். தீவிரவாதிகள் வைத்திருந்த வீரர்களின் ரகசிய பட்டியலை திருடி வந்து ஜெர்மனி டி.வி. நிறுவனத்திடம் வழங்கி உள்ளார். இந்த பட்டியலில் 20 ஆயிரம் பேரின் முழு விவரமும் உள்ளது. அதில் ஒவ்வொரு பட்டியலிலும் 23 தகவல்கள் இடம் பெற்று உள்ளன. வீரரின் பெயர், அவரது நாடு, பிறந்த தேதி, முகவரி, உறவினருடைய விவரங்கள், சிரியா மற்றும் ஈராக்குக்குள் எந்த வழியாக வந்து படையில் சேர்ந்தார் போன்ற அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளன.
சுமார் 50 நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் இதில் சேர்ந்துள்ளனர். பிரான்சு, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பலரும் தீவிரவாதிகள் இயக்கத்தில் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகமாக இந்த இயக்கத்தில் சேர்ந்து இருக்கிறார்கள். தீவிரவாதிகள் விவரம் வெளியே வந்திருப்பதால் இது அந்தந்த நாடுகள் இனி விசாரணையை தீவிரப்படுத்தி அவர்களுடைய ஆதரவாளர்களை கைது செய்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.