ஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள் அணுகும் விதத்திற்குமிடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.தமிழ் தலைமைகள் தங்களது சுக போகங்களைத் துறந்து தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கின்றன.முஸ்லிம் தலைமைகள் தங்கது சுக போகங்களை மையப்படுத்தியே தங்களது அரசியல் பயணப் பாதைகளை அமைத்துக்கொள்கிறார்கள் என்று கூறினாலும் பிழையாகாது.அதிகமான தமிழ் தலைமைகள் மத்திய அரசிடமிருந்து எதுவிதமான பதவிகளையும் பெறாததன் காரணமாக அரசின் பிழையான செயற்பாடுளை தைரியமாக கண்டிப்பதோடு அதனை உரிய இடத்திற்கும் கொண்டு சேர்க்கின்றனர்.முஸ்லிம் தலைமைகள் சிறிய விடயங்களைக் கூட தட்டிக் கேட்க முடியாத நிலையில் தான் உள்ளன.கல்முனை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அம்பாறைக்கு இடமாற்றப்பட்டமை இதனை நிறுவும் தற்காலச் சான்றாகும்.அண்மையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் தொடர்பில் பேரின மக்களிடையே பாரிய துவேசக் கருத்துக்கள் துளிர்விட்டிருந்தன.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸ கூட தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கூடாது என பகிரங்கமாக கூறி இருந்தார். இது தொடர்பில் 2015-12-3ம் திகதி வெள்ளிக்கிழமை மஹிந்த அணியினருக்கும் அரச தரப்பு உறுப்பினர்களுக்குமிடையில் பாரிய கருத்து மோதல்களும் இடம்பெற்றிருந்தன.
இவ்வாறான துவேசக் கருத்துக்களையும் மீறி பல தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.தற்போதும் சிறு சிறு எண்ணிக்கையானவர்கள் விடுவிக்கப்பட்டு கொண்டுமிருக்கின்றனர்.அவ் வேளையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் எழுந்த இனவாதக் கருத்துக்களுக்கு ஜனாதிபதி மைத்திரி பிரதமர் ரணில் மற்றும் அவர்கள் தரப்பினரும் பதில் அளித்திருந்தனர்.இதன் விளைவாக இதில் துளிர்விட்ட இனவாதக் கருத்துக்கள் கருகக் காரணமாகியது.இங்கு தான் நாம் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு விடயம் உள்ளது.இன்று இலங்கை முஸ்லிம்களுக்கும் பல பிரச்சினைகள் உள்ளன.எதற்காவது இலங்கை அரச தலைவர்கள் தங்கள் சமூகத்தை எதிர்த்து முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்துள்ளார்களா என்றால் இல்லை என்பதுவே பதிலாகும்.மாறாக பல விடயங்களில் இன வாதிகளுக்கு தீனி போடும் செயல்களைத் தான் செய்துள்ளார்கள்.உதாரணமாக வில்பத்துப் பிரச்சினையை எடுத்துக் கொண்டால் உங்கள் பிரச்சினைகளை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள் எனும் விதமாக இது தொடர்பில் எதுவித சிறு கருத்துக்களையும் தெரிவிக்காது இலங்கை அரச தலைவர்கள் ஓடி ஒழிந்த வராலாற்றை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.இது போன்ற விடயங்களில் முஸ்லிம் அரசியல் வாதிகள் இனவாதிகளுடன் நேரடியாக மோதித் தான் விளங்கப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.இதன் போது முஸ்லிம் சிங்கள உறவுகளும் விரிசலடைகின்றன.இது தொடர்பில் தான் ஏதேனும் கருத்து தெரிவித்தால் இன வாதம் கிளர்ந்தெழும் என்பதைக் காரணம் காட்டியே அமைச்சர் ஹக்கீம் தூர நின்று இவ் விடயத்தை கையாள்வதாக குறிப்பிட்டு தனது பக்கத்தை நியாயப்படுத்த முயல்கிறார்.ஏன் இலங்கை அரச தலைவர்கள் முஸ்லிம்களின் விடயங்களில் இத்தனை கரிசனையின்றி காலம் கடத்துகிறார்கள் என்றால் அது முஸ்லிம் அரசியல் தலைமைகள் மேற்கொள்ளும் சரணகதி அரசியலே பிரதான காரணமாகும்.
முஸ்லிம் கட்சிகள் ஒரு ஆட்சி மாற்றம் நிகழும் போது எத்தனை அமைச்சுக்களை,பிரதி அமைச்சுக்களை பெறலாம் என்பதிலேயே குறியாக இருக்கின்றன.கடந்த பாராளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து தோற்றம் பெற்ற அமைச்சரவையில் மு.கா தலைவருக்கு முன்னர் வழங்கப்பட்ட அமைச்சு வழங்கப்படாது எனவும் அவ் அமைச்சு அமைச்சர் றிஷாத்திற்கு வழங்கப்படும் என்ற கதை தான் பிரதான விடயமாக சென்றிருந்தது.இது தான் முஸ்லிம் சமூகத்திற்குள்ள பிரதான பிரச்சினையா? கடந்த ஆட்சி மாற்றத்தை அடுத்து தோற்றம் பெற்ற தேசிய அரசில் த.தே.கூவிற்கு பல முக்கிய பதவிகளை அத் தேசிய அரசு முன்னிலைப் படுத்திய போதும் அவர்கள் தங்களது கோரிக்கைகளைத் தான் முன்னிலைப்படுத்திருந்தார்கள்.இவைகள் தான் மக்கள் மீது அக்கரை கொண்ட அரசியல் தலைமைகள் கையாளும் பொருத்தமான வழி முறையாகும்.மைத்திரியின் வெற்றிக்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கிய முஸ்லிம் கட்சிகள் அவர் வெற்றி பெற்றவுடன் எல்லாம் கிடைத்தாப் போல் ஒட்டி உறவாடுகிறார்கள்.இவர்கள் ஏமாளிகளா? அல்லது ஏமாற்றுகிறார்களா? போன்ற வினாக்கள் தான் இச் சந்தர்ப்பத்தில் உள்ளத்தில் உதிக்கிறது..
த.தே.கூ கைக்கொள்ளும் அரசியல் வழி முறைகள் மூலம் தமிழ் மக்கள் அபிவிருத்திகள் எதனையும் பெற முடியாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் போன்ற நியாங்களை முஸ்லிம் கட்சிகள் கடைப்பிடிக்கும் அரசியலுக்கு நியாயம் கற்பிக்க தூக்கிப் பிடிப்பவர்களுமுண்டு.இன்று முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம் பகுதிகளில் செய்கின்ற சேவைகள்,அபிவிருத்திகள் சிறு பிள்ளைகள் அழும் போது முட்டாசை கொடுத்து அடக்குவது போன்றாகும்.த.தே.கூ தான் அரசிடம் முன் வைக்கும் கோரிக்கைகளில் இராணுவத்தை சர்வதேசத்திடம் கை கட்டச் செய்யும் கோரிக்கைகள் போன்றவற்றை கை விட்டு தங்களது பகுதிகளுக்கு அபிவிருத்திகளைக் கேட்குமாக இருந்தால் அரசு வடக்கையும் கிழக்கையும் ஒரு சில நாட்களுக்குள் தங்கத்தால் நிரப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.ஜி.ஜி பொன்னம்பலம் ஐம்பதுக்கு ஐம்பது தீர்வை முன்வைத்துப் போராடி இறுதியில் அதனைக் கை விட்ட போது அக் காலத்து அரசு அபிவிருத்திகளை அள்ளி வீசிய வரலாற்றை இவ் விடத்தில் நினைவூட்டுவதும் பொருத்தமானதாக அமையும்.அதே போன்று அவர்கள் கோரும் மாகாண சபைகளுக்கு நிதியினைக் கையாளும் அதிகாரம் வழங்கப்படுமாக இருந்தால் சர்வதேசத்தின் உதவியுடன் இழந்த அனைத்தையும் சில வருடங்களுக்குள்ளேயே மீட்டுக்கொள்வார்கள்.
சிலர் எனது மேற்கூறிய கருத்துக்களை ஏற்கலாம் அல்லது ஏற்காமலும் விடலாம்.தமிழ்த் தலைமைகள் அரசியல் யாப்பு மாற்ற விடயத்தை எவ்வாறு அணுகுகின்றன? முஸ்லிம் தலைமைகள் அதனை எவ்வாறு அணுகுகின்றன? என்பதை நாம் ஆராய்ந்தாலும் இது தொடர்பில் இன்னும் அறியக் கூடியதாக இருக்கும்.நாம் ஒற்றை ஆட்சியை மீறி எதனையும் செய்யப்போவதில்லை.தமிழ் மக்களின் மனங்களை வெற்றி கொள்ளும் வகையில் எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன குறிப்பிட்டிருந்தார்.சம்பந்தன் எதிர்ப்பினும் பேச்சு நடாத்துவோம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜ பக்ஸ கூறி இருந்தார்.ஒற்றை ஆட்சியில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் தீர்வு,தமிழ் மக்களின் நம்பிக்கை ஒரு போதும் வீண் போகாது என அமைச்சர் ராஜித சேனாரத்தன கூறி இருந்தார்.அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூட இத்தகைய கருத்துக்களைக் கூறி இருந்தார்.அரசியல் அமைப்பு தொடர்பான கதைகள் எங்கு பேசப்பட்டாலும் அங்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளும் அலசப்படுகிறது.இப்படி அரசின் உயர் புள்ளிகள் அனைத்தும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தக்க தீர்வை வழங்குவதற்கு முயற்சிக்கின்றன.இலங்கையில் முஸ்லிம்களும் வாழ்கின்றனர்.அவர்களுக்கும் தேவை உள்ளது என்ற சொல்லாடல்கள் அரசின் முக்கிய புள்ளிகளின் வாய்களில் இருந்து வந்ததாக அறிய முடியவில்லை.இதற்கெல்லாம் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மேற்கொள்ளும் சரணகதி அரசியல் முறைமை தான் பிரதான காரணம் என்பதை கசப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.
இப்படியெல்லாம் இவர்களை கவனிக்குமளவு தமிழ் தலைமைகள் எத்தகைய அரசியலை கடைப்பிடிக்கின்றது? இலங்கை அரசு அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் புத்தி ஜீவிககளை மாத்திரம் கருத்திற் கொள்ளாது சாதாரண மக்களின் கருத்துக்களும் உள் வாங்கப்படுமுகமாக 24 பேர் கொண்ட புலமையாளர்கள் குழுவொன்றை உருவாக்கியுள்ளது.இது அரசியலமைப்பு உருவாக்கத்தில் சாதாரண மகனும் பங்கு கொள்ளும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.இது போன்று இவ் விடயத்தில் மக்கள் கருத்துக்களை உள்வாங்கி செயற்படும் பொருட்டு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தலைமையில் வட மாகாண சபை உறுப்பினர்கள் 19 பேரை உள்ளடக்கி ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பிலும் பல்வேறு திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவது தொடர்பான விவாதத்தில் 24-02-2016ம் திகதி உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் காத்தான்குடியில் செயற்படும் சிவில் அமைப்பினர் அரசியல் கட்சிகள் தன்னிச்சையாக முடிவெடுக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்பதாகவும் இவ் விடயத்தில் சிவில் அமைப்புக்களின் கருத்துக்களும் உள் வாங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.இப்படி கருத்துத் தெரிவிக்கும் அமைச்சர் ஹக்கீம் சிவில் அமைப்புகளின் கருத்துக்களை உள்வாங்கி தன்னிச்சையாக செயற்பட்டிருக்கக் கூடாது.இது வரையில் இது தொடர்பாக மு.கா எதுவித சிவில் அமைப்புக்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக அறிய முடியவில்லை.இப்படி இருக்கையில் எவ்வாறு அமைச்சர் ஹக்கீமால் இக் கருத்தைக் கூற முடியும்.இவ் விடயம் தொடர்பில் இலங்கை முஸ்லிம்களின் தலைமைகளாக மார் தட்டிக் கொள்ளும் மு.காவோ,அ.இ.ம.காவோ சிவில் அமைப்புக்களுடனோ அல்லது சாதாரண மக்களுடனோ எதுவிதமான கலந்துரையாடல்களையும் அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
இவ் விடயத்தில் சாதாரண மக்களைத் தான் இந்த முஸ்லிம் கட்சிகள் கவனத்திற் கொள்ளவில்லை குறைந்தது முஸ்லிம் புத்தி ஜீவிகளையாவது கவனத்திற் கொண்டிருக்க வேண்டும்.இவ் அரசியலமைப்பு வரைபு தொடர்பில் அமைச்சர் மனோ கனேசன் தலைமையிலான தமிழர் முற்போக்கு கூட்டணி ஒரு நிபுணர் குழுவை அமைத்து ஆராய்ந்து வருகிறது.இதில் பல பேராசிரியர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.இலங்கைத் தொழிலார் காங்கிரஸினால் முன் வைக்கப்படவுள்ள அரசியலமைப்பு யோசனைகள் குறித்து பல அறிஞர்களை உள்ளடக்கிய கலந்துரையாடல் ஒன்று வெள்ளவத்தை குளோபல் ஹோட்டலிலும் இடம்பெற்றிருந்தது.இவ் விடயத்தை ஏனைய விடயங்கள் போன்று சாதாரணமாக அணுகாது அறிவினை ஒரு புள்ளியில் செறிவாக்கி கையாள்வது சாலவும் பொருத்தமானது.வடக்கும் கிழக்கும் இணைக்கப்படும் போது முஸ்லிம்களுக்கானதொரு தனி அலகு வழங்கப்பட வேண்டும் என மு.காவின் செயலாளர் நாயகம் இந்திய வெளி விவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் கூறியுள்ளார்.இது தொடர்பில் மு.கா தங்களது கட்சியினுள் கூட கலந்துரையாடல்கள்,ஆய்வுகள் மேற்கொண்டதாக அறிய முடியவில்லை.இத்தகைய தீர்வுகள் எந்தளவு முஸ்லிம் சமூகத்திற்கு ஆரோக்கியமானதாக அமையும் என்பதும் வினாவில் முற்றுப் பெரும் ஒரு விடயமாகும்.
எந்தவொரு விடயத்திலும் வெளிப்படைத் தன்மை பேணப்படல் சிறப்பானது.சில விடயங்களை சில நேரங்களில் மறைத்துச் செல்வது பொருத்தமானதாகவும் இருக்கலாம்.இவ் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான விடயங்கள் எப்போதாவது ஒரு நாள் சந்தைக்கு வந்துதான் ஆக வேண்டும்.இதன் காரணமாக இது தொடர்பில் முஸ்லிம் கட்சிகள் எந்த முடிவு எடுத்தாலும் அதனைப் பகிரங்கப்படுத்த வேண்டும்.வடக்கும் கிழக்கும் இணைக்கப்படும் போது நிலத்தொடர்பற்ற மாகாண சபையை மு.கா கோருவதாக மு.காவின் செயலாளர் நாயகம் ஹசன் அலி கூறியுள்ளார்.நிலத்தொடர்பற்ற மாகாண சபைக் கோரிக்கை என்பது கூட தெளிவானதொரு பதிலல்ல.எதனை அடிப்படையாக கொண்ட நிலத்தொடர்பற்ற மாகாண சபை என்பது அதில் தொக்கி நிற்கும் ஒரு வினாவாகும்.தமிழ் அரசியல் பேரவை தங்களது உத்தேச அரசியலமைப்பு வரைவை வெளிப்படையாகவும் தெளிவாகவும் வெளியிட்டுள்ளதைப் பார்த்து முஸ்லிம் கட்சிகள் படிப்பினை பெற வேண்டும்.
வட கிழக்கு இணைப்பு,தேர்தல் முறை மாற்றம் தவிர்ந்து எத்தகைய விடயங்களிலும் இந்த முஸ்லிம் கட்சிகள் சிறிதும் தங்களது கவனத்தை செலுத்தாமல் ஊரா வீட்டுப் பிள்ளைகள் போல் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன.ஜனாதிபதி முறை மாற்றம் மற்றும் அதிகாரப்பகிர்வு ஆகியனவும் முஸ்லிம் மக்களுடன் நேரடியாக சம்பந்தப்பட்டு நிற்கும் விடயங்களாகும்.இவ் விடயங்களில் சிறிதும் சம்பந்தப்படாமல் முஸ்லிம் கட்சிகள் மூலைக்குள் ஒதுங்குவதை ஒரு போதும் ஏற்க முடியாது.இவர்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் வட கிழக்கு இணைப்பில் தங்களது மூக்கை நுழைத்தாக வேண்டும்.இவர்கள் தங்களது மூக்கை நுழைக்காமல் ஒதுங்கினாலும் த.தே.கூ முஸ்லிம் கட்சிகளை ஒதுங்க விடாது.தேர்தல் முறை மாற்றம் தொடர்பான விடயத்தில் இவர்கள் தங்களது மூக்கை நுழைக்காவிட்டல் முஸ்லிம் தலைமைகளினது அரசியல் கப்பல் அப்படியே நடுக்கடலிலே மூழ்கி விடும்.இதன் காரணமாகவே முஸ்லிம் கட்சிகள் இவ் விடயங்களில் மாத்திரம் அதிகம் தங்களது மூக்கை நுழைக்கின்றன.இலங்கை நாட்டை தேசிய ரீதியில் பாதிக்கும் விடயங்களில் பலரும் கண் குத்தி நிற்பதால் முஸ்லிம் தலைமைகள் இவ் விடயங்களில் அவ்வளவு சிரத்தை எடுக்க வேண்டிய அவசியமில்லை.எனினும்,முஸ்லிம் தலைமைகள் இவ் விடயத்தில் வாய் மூடி மௌனியாக இருப்பது இலங்கை நாட்டின் மீது பற்றில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவோதோடு பேரின சமூகங்களினை விட்டும் அன்னியப்படுத்தவும் காரணமாகிவிடும்.எனவே,இலங்கை நாட்டை தேசிய ரீதியில் பாதிக்கும் விடயங்களில் ஆத்மார்த்தமாக ஈடுபாடு காட்டாவிட்டாலும் சிறிது நடிப்பதும் காலத்திற்கு தேவையான ஒன்று.
த.தே.கூ இவ் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் இது வரை எது விதமான வரைவுகளையும் முன் வைக்கவில்லை.இது தொடர்பில் த.தே.கூவின் பங்காளிக் கட்சிகள் சில தங்களது அதிருப்திகளை தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றன.இது தான் ஆரோக்கியமான விடயம்.இவ் அரசியலமைப்பு தொடர்பில் இது வரை மு.காவோ அ.இ.ம.காவோ எது விதமான வரைவுகளையும் இலங்கை அரசிடம் முன் வைக்கவில்லை.இது தொடர்பில் அக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவதோடு தங்களது அதிருப்திகளையும் வெளிப்படுத்திருக்க வேண்டும்.இவ் விடயத்தில் சிறிதும் அக்கரை காட்டாமல் இருக்கும் இவர்கள் எங்கே கேள்வி எழுப்பப் போகிறார்கள்? கேள்வி எழுப்பாவிட்டாலும் பறவாயில்லை அதனை உப்புச் சப்பற்ற அதையும் இதையும் கூறி நியாயப்படுத்த முனைவதைத் தான் சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.த.தே.கூ ஏதாவது கோரிக்கைகளை முன் வைக்குமாக இருந்தால் அதனை பரிசீலிக்க தயார் என ஜனாதிபதி கூறி உள்ளார்.அதாவது த.தே.கூவைப் பார்த்து ஏதாவது கோரிக்கைகளை முன் வையுங்கள் என ஜனாதிபதியே கூறுகிறார் என்பதுவே இதன் மறுதலை.ஊடகங்களில் த.தே.கூவினர் விடும் அறிக்கைகளுக்கே இலங்கை அரச தலைவர்கள் பதில் அளித்துக்கொண்டிருக்கின்றார்கள்.த.தே.கூவினர் உத்தேச வரைவுகளை முன் வைக்காது போனாலும் அவர்கள் எதை அரசிடம் முன் வைக்க விரும்புகிறார்களோ அத்தனையும் இலங்கை அரச தலைவர்களை சென்றடைந்து விட்டது என்பது தான் அவர்கள் மேற்கொள்ளும் சாணக்கிய அரசியல் வழி முறை.
உத்தேச அரசியலைப்பு தொடர்பான முன்மொழிவுகளை உருவாக்கும் பொருட்டு வட மாகாண சபை உறுப்பினர்கள் 19 பேரை உள்ளடக்கிய குழு ஒன்று முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண சபையில் மூன்றினங்களும் குறித்த பலத்துடன் இருப்பதால் ஏனைய மாகாண சபைகளை விட கிழக்கு மாகாண சபையில் இது தொடர்பிலான முன்னெடுப்புக்களை மேற்கொள்வது மிகவும் பொருத்தமானது.இதனை மத்திய அரசால் கொண்டு வரப்படவுள்ள அரசியலமைப்பு மாற்றத்திற்கான ஒரு சிறு ஒத்திகையாகவும் அமைத்திருக்கலாம்.இதனை மேற்கொள்ள வேண்டிய கடமை மு.காவுக்கே உள்ளது.த.தே.கூ அரசியலமைப்பு தொடர்பில் சில நாடுகளுக்குச் சென்று ஆராய்ந்தும் வருகிறது.இதனையெல்லாம் முஸ்லிம் கட்சிகளை செய்யக் கோருவது கூரையில் ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவர்களை வானத்தைக் கீறி வைகுண்டம் செல்ல வழி காட்டுங்கள் எனக் கோருவதாகிவிடும்.த.தே.கூ மிகப் பெரிய பலத்துடன் திகழ்ந்தும் பல கட்சிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடல்களை அமைத்து வருகிறது.த.தே.கூவின் எதிரியாக கூறவல்ல தமிழ் பேரவையின் தீர்மானத்தைக் கூட பரிசீலிக்கத் தயார் என த.தே.கூவின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் கூறி இருந்தார்.இது வரை இடம்பெற்ற மாகாண சபை,பாராளுமன்றத் தேர்தல்களில் மக்களின் வாக்குகளின் மூலம் ஒரு ஆசனத்தையேனும் பெறாத ந.தே.மு உடன் கூட த.தே.கூ பேச்சு நடாத்தி இருந்தது.முடக் காலுடன் நடை பயிலும் முஸ்லிம் கட்சிகள் இது வரையில் ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் கூட பேச்சு நடாத்தவில்லை.தங்களது கட்சிக்குள் கூட கலந்துரையாடல்களை அமைத்ததாக அறிய முடியவில்லை.இவைகளே தமிழ் தலைமைகளுக்கும் முஸ்லிம் தலைமைகளுக்கும் இடையிலான வேறுபாடுகளாகும்.
குறிப்பு: இக் கட்டுரை இன்று 10-03-2016ம் திகதி வியாழக்கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.