ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்
இந்தியாவில் இடம்பெறும் 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் முகமாக இலங்கை கிரிக்கெட் அணியை ஆசிர்வதிக்கும் முகமாக இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் நாடு பூராகவும் சென்று ரசிகர்களின் கையொப்பம் பெற்ற துடுப்பு மட்டையை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (07) திங்கட்கிழமை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டார்.
இதில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்தன, பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சுனில் சாந்த, இலங்கை கிரிக்கெட் நிறுவன பிரதித் தலைவர் மதிவானன், உப செயலாளர் ரவின் விக்கிரமரத்ன, மொபிடல் நிறுவனத்தின் பிரச்சார முகாமையாளர் ஜீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதித் தலைவரிடம் பிரதி அமைச்சர் ஹரீஸ் துடுப்பு மட்டையை வைபவ ரீதியாக கையளித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,
எமது வீரர்கள் இம்முறையும் தங்களது அதிதி திறமைகளை வெளிக்காட்டி உலக கிண்ணத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே எனது அவா என்பதோடு அணிக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். எமது தாய்நாட்டை சர்வதேசம் திரும்பி பார்க்கும் அளவுக்கு பெரும் புகழை எமது வீரர்கள் ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் விளையாட்டு நிகழ்ச்சிகளையும் விரிவாக்கல் நிகழ்ச்சிகளையும் நடாத்த முன்வர வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் கூட்டுத்தாபனத்தின் தலைவரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.