சர்வதேச கிரிமினல் கோர்ட்டின் கைது உத்தரவையும் மீறி சூடான் அதிபர் இந்தோனேசியா வந்தார் !

SUDAN president

 

சொந்தநாட்டு மக்களை இனப்படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்தரவையும் மீறி சூடான் அதிபர் உமர் ஹசன் அல் பஷிர் இந்தோனேசியா நாட்டுக்கு வந்துள்ளார்.

மேற்கு சூடானில் உள்ள மேற்கு டர்பர் பகுதியில் ஏற்பட்ட புரட்சியை ஒடுக்க ராணுவத்தை ஏவி அப்பாவி பொதுமக்களை கொன்றதாக வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த 2009-2010 ஆண்டுகளில் உமர் ஹசன் அல் பஷிருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனால், கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து அவர் எந்த வெளிநாட்டுக்கும் செல்லாமல் இருந்துவந்தார். ஆனால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அங்கத்தினராக இடம்பெறாத சீனாவுக்கு மட்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்று வந்தார். இதேபோல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அங்கத்தினராக இடம்பெறாத இந்தோனேசியா தலைநகரான ஜகர்தாவில் நடைபெறும் சர்வதேச இஸ்லாமிய கூட்டுறவு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் மீண்டும் இங்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.