அமெரிக்க அதிபர் பதவிக்கு வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப், இந்த நாட்டின் அதிபராக நான் பதவி ஏற்றால் வெளிநாட்டில் இருந்துவந்து அமெரிக்காவில் சட்டப்புறம்பாக குடியேறியுள்ளவர்களை அடித்து விரட்டுவேன் என பேசி வருகிறார்.
அமெரிக்கர்களின் வேலையை இந்தியர்கள் பறித்து சென்றுவிடுவதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். பல இடங்களில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் மக்களின் எதிர்ப்பை சந்தித்துவரும் டிரம்ப்புக்கு அமெரிக்காவில் வாழும் முஸ்லிம் மற்றும் சீக்கிய மதங்களை சேர்ந்த அமைப்பினர் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தங்களது ஆதரவை வெளிப்படையாகவே அறிவித்துள்ள இந்த அமைப்பினர் வாஷிங்டனின் புறநகர் பகுதியான மேரிலாண்டில் நேற்று நடத்திய கூட்டத்தில் டிரம்ப்பின் பிரசார ஆலோசகர் பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் அமெரிக்காவில் உள்ள சீக்கிய சமுதாயத்தினரின் முக்கிய பிரதிநிதியான ஜஸ்திப் சிங் பேசியதாவது:-
டொனால்ட் டிரம்ப் சீக்கியர்கள் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர் அல்ல. அவர் பேசுவதை ஊடகங்கள் திரித்து கூறிவருகின்றன. குறிப்பாக, அவரைப் பார்த்து பயப்படும் பிரபல ஊடகங்கள் அவருக்கு எதிரான அவதூறுகளை பரப்பி வருகின்றன.
முஸ்லிம்களைப் பற்றி அவர் பேசும்போது பொதுவாக எல்லா முஸ்லிம்களைப் பற்றியும், குறிப்பாக, அமெரிக்க முஸ்லிம்களைப் பற்றியும் அவர் பேசியதில்லை. சிரியாவில் நிலவிவரும் அகதிகள் பிரச்சனையை மையப்படுத்தி மட்டுமே அவர் பேசுகிறார். அவர் சிறுபான்மையின மக்களுக்கு எதிரானவர் அல்ல.
அவர் இந்தியாவுக்கு எதிரானவர் என்றும் சிலர் கூறுகின்றனர். அவர் இந்தியாவுக்கு நன்மையானவர் என நான் நம்புகிறேன். அவருக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் மும்பை மற்றும் புனே நகரில் இயங்கி வருகின்றன. இதர அதிபர் வேட்பாளர்களைவிட மற்ற நாடுகளைப் பற்றியும் அங்கு வாழும் மக்களின் கலாசாரங்களைப் பற்றியும் டொனாட் டிரம்ப் நன்றாக அறிந்து வைத்துள்ளார். இந்தியாவோடு மிக நெருக்கமான பந்தத்தையும் உறவையும் அவர் கொண்டுள்ளார். எனவே, ஊடகங்களில் வரும் தவறான தகவல்களை நாம் பொருட்படுத்த கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்குள்ள சிலிக்கான் வேலி பகுதிக்கு வந்திருந்தபோது அவரை வரவேற்க அமெரிக்காவாழ் சீக்கிய அமைப்பினர் சார்பில் மாபெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்தவர் ஜஸ்திப் சிங், என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் டிரம்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இங்குள்ள முஸ்லிம்களை ஒருங்கிணைத்துவரும் அமெரிக்காவாழ் பாகிஸ்தானியரான சாஜித் தரார் இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், ’இதர அதிபர் வேட்பாளர்களைவிட அதிகமான சாதனைகளை நிகழ்த்தியவராக டொனால்ட் டிரம்ப் மட்டுமே தெரிகிறார்.
அமெரிக்காவை மாற்றக்கூடிய தகுதியும் திறமையும் இவருக்கு உண்டு என நாங்கள் நம்புகிறோம். மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்யத்தை அவர் கட்டி எழுப்பியுள்ளார். சுயநலமற்ற வகையில் தனது சொந்த செலவில் பிரசாரம் செய்து வருகிறார்.
அவருக்கு எதிராக ஊடகங்கள் மிகப்பெரிய போரை நடத்தி வருகின்றன. அவரது ஒவ்வொரு பேச்சும், தகவலும் திரிக்கப்பட்டு செய்தியாக்கப்படுகின்றன’ என தெரிவித்தார்.