தொழுகையில் ஏற்படும் மறதி!

 Unknownகடமையான தொழுகையின் முதல் தஷஹ்ஹுத் (அத்தஹிய்யாத்) இருப்பில் அமராமல் மறதியால் எழுந்துவிட்டால்…? 
1224. அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். 
அவர்கள் எங்களுக்கு ஏதோ ஒரு தொழுகையைத் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். எனவே, மக்களும் நபி(ஸல்) அவர்களோடு எழுந்துவிட்டார்கள். தொழுகை முடியும் தருவாயில் நாங்கள் நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுப்பதை எதிர்பார்த்திருந்தபோது, அந்த இருப்பிலேயே ஸலாத்திற்கு முன் தக்பீர் கூறி, இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு ஸலாம் கொடுத்தார்கள்.  

1225. அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். 
தொழுகை நடத்திய நபி(ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமராமல் எழுந்துவிட்டார்கள். தொழுகையை முடிக்கும்போது இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள். அதன்பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.  

பாடம் : 2 (மறதியாக) ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டால்… 
1226. அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் லுஹரில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். உடனே அவர்களிடம் தொழுகை அதிகமாக்கப்பட்டுவிட்டதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘என்ன விஷயம்?’ எனக் கேட்டார்கள். ‘நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுகை நடத்தினீர்கள்’ என ஒருவர் கூறினார். நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததற்குப் பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள்.  

பாடம் : 3 (நான்கு ரக்அத் தொழுகையில்) இரண்டாவது அல்லது மூன்றாவது ரக்அத்தில் (மறதியாக) சலாம் கொடுத்துவிட்டால் வழக்கமான சஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட சற்று நீளமாகவோ இரண்டு சஜ்தாச் செய்வது. 
1227. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
அவர்கள் எங்களுக்கு லுஹரையோ அஸரையோ தொழுதுவிட்டு ஸலாம் கொடுத்தார்கள். அப்போது துல்யதைன்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா?’ எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களிடம், ‘இவர் கூறுவது உண்மைதானா?’ எனக் கேட்டபோது அவர்களும் ‘ஆம்” என்றார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுகை நடத்திவிட்டு இரண்டு ஸஜ்தாக்களும் செய்தார்கள். 
இப்னு ஸுபைர் மக்ரிப் தொழுகை நடத்தியபோது இரண்டு ரக்அத்திலேயே ஸலாம் கொடுத்துவிட்டுப் பேசியும்விட்டார். பின்பு (நினைவு வந்ததும்) மீதம் உள்ளதைத் தொழுதார். பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்துவிட்டு இவ்வாறே நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள் எனக் கூறினார்” என ஸஅத் அறிவித்தார்.  

பாடம் : 4 சஜ்தா சஹ்வின் போது தஷஹ்ஹுத் ஓதாமல் இருத்தல் அனஸ் (ரலி), ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) ஆகியோர் (மறதிக்குரிய சஜ்தாச் செய்துவிட்டு) சலாம் கொடுத்தார்கள்; தஷஹ்ஹுத் ஓதவில்லை. (அதில்) தஷஹ்ஹுத் ஓதவேண்டியதில்லை என கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். 
1228. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துடன் தொழுகையை முடித்தபோது துல்யதைன்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! தொழுகை சுருக்கப்பட்டுவிட்டதா? அல்லது நீங்கள் மறந்து விட்டீர்களா?’ எனக் கேட்டார். ‘துல்யதைன் கூறுவது உண்மைதானா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, மக்களும் ‘ஆம்’ என்றார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் பிந்தைய இண்டு ரக்அத்களைத் தொழுதுவிட்டு ஸலாம் கொடுத்தார்கள். பின்பு தக்பீர் கூறித் தம் வழக்கமான ஸஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட சற்று நீண்டதாகவோ ஸஜ்தாச் செய்து, பின் (அதிலிருந்து) எழுந்தார்கள். (தஷஹ்ஹுத் ஓதவில்லை.) 
இப்னு அல்கமா கூறுகிறார்: நான் முஹம்மத் இப்னு ஸிரீனிடம் ஸஜ்தா ஸஹ்வில் தஷஹ்ஹுத் உண்டா? எனக் கேட்டேன். அதற்கவர், அபூ ஹுரைரா(ரலி) உடைய அறிவிப்பில் தஷஹ்ஹுத் இல்லைதான் என்றார்’. 

பாடம் : 5 சஜ்தா சஹ்வின் போது தக்பீர் கூறுவது 
1229. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
தொழுகைகளில் ஒரு தொழுகையை நடத்திய நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்திலேயே ஸலாம் கொடுத்துவிட்டார்கள். (அநேகமாக அது அஸர்த் தொழுகை என்றே நினைக்கிறேன் என முஹம்மது இப்னு ஸிரீன் கூறுகிறார்.) பின்பு எழுந்து பள்ளிவாசலின் முற்பகுதியிலிருக்கும் மரக்கட்டையின் பக்கம் சென்று அதன்மேல் தம் கையை ஊன்றி நின்றார்கள். அங்கே இருந்தவர்களில் அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி) இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் அது பற்றிப் பேசப் பயந்து கொண்டிருந்தபோது பள்ளியிலிருந்து வேகமாக வெளியேறி மக்கள், ‘தொழுகை சுருக்கப்பட்டுவிட்டதோ’ எனப் பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களால் துல்யதைன் என அழைக்கப்படும் ஒருவர் ‘நீங்கள் மறந்து விட்டீர்களா அல்லது தொழுகை சுருக்கப்பட்டுவிட்டதா?’ எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான் மறக்கவும் இல்லை. (தொழுகை) சுருக்கப்படவும் இல்லை” என்றவுடன் ‘இல்லை நிச்சயமாக நீங்கள் மறந்து விட்டீர்கள்’ என அவர் கூறினார். நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்திவிட்டு ஸலாம் கொடுத்தார்கள். பின்பு தக்பீர் கூறித் தம் வழக்கமான ஸஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட நீண்டதாகவோ ஸஜ்தாச் செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தித் தக்பீர் கூறினார்கள். மீண்டும் தலையை (பூமியில்) வைத்துத் தக்பீர் கூறினார்கள். தம் வழக்கமான ஸஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட நீண்டதாகவோ ஸஜ்தாச் செய்து, பின்பு தம் தலையை உயர்த்தியாவாறே தக்பீர் கூறினார்கள்.  

1230. அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். 
அவர்கள் லுஹர் தொழுகையில் முதல் இருப்பில் அமராமல் எழுந்துவிட்டார்கள். தொழுகையை நிறைவு செய்தபோது ஸலாம் கொடுப்பதற்கு முன்னால் முதல் இருப்பில் அமர மறந்ததற்குப் பரிகாரமாக ஒவ்வொரு ஸஜ்தாவிலும் தக்பீர் கூறி இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள். உடனே மக்களும் நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து அந்த இரண்டு ஸஜ்தாக்களையும் செய்தனர்.  

பாடம் : 6 தொழுத ரக்அத்கள் மூன்றா அல்லது நான்கா எனத் தெரியவில்லையென்றால் கடைசி இருப்பின் போது இரண்டு சஜ்தாக்கள் செய்வது. 
1231. ‘தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடி விடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பி வந்து இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் மீண்டும் வந்து தொழுபவரின் உள்ளத்தில் ஊடுருவி ‘இதை இதையெல்லாம் நினைத்துப்பார்’ எனக் கூறி, அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டி அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை மறக்கடிக்கிறான். உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்களில் மூன்றா அல்லது நான்கா என்று தெரியவிட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு ஸஜ்தாச் செய்து கொள்ளட்டும்’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  

பாடம் : 7 கடமையான தொழுகையிலும் உபரியான தொழுகையிலும் சஜ்தா சஹ்வு செய்தல். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வித்ருத்தொழுத( போது மறதி ஏற்பட்டமைக்காக) பின்னர் இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள். 
1232. ‘உங்களில் ஒருவர் தொழத் தயாரானால் அவரிடம் ஷைத்தான் ஊடுருவி, அவர் எத்தனை ரக்அத் தொழுதார் என்பதையே அறியாத அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறான். எனவே, உங்களில் ஒருவருக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் (கடைசி) இருப்பில் இருந்தவாறே இரண்டு ஸஜ்தாச் செய்யட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  

பாடம் : 8 தொழுது கொண்டிருப்பவரிடம் யாரேனும் பேச்சுக் கொடுத்தால் அதைச் செவியேற்பதும் கையால் சைகை செய்வதும். 
1233. குரைபு அறிவித்தார். 
அப்பாஸ்(ரலி), மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), அப்துர்ரஹ்மான் இப்னு அஸ்ஹர்(ரலி) ஆகியோர் என்னிடம் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று எங்கள் அனைவரின் ஸலாமையும் அவருக்குக் கூறும்! அஸருக்குப் பின் இரண்டு ரக்அத் தொழுவது பற்றி அவரிடம் கேட்பீராக! நபி(ஸல்) அவர்கள் அதை தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க அத் தொழுகையை (ஆயிஷாவே!) நீங்கள் தொழுவதாகக் கேள்விப்படுகிறோம் என்று கேட்பீராக!” என்று கூறினார்கள். (மேலும்) இப்னு அப்பாஸ்(ரலி), தாமும் உமரும், இவ்வாறு (அஸருக்குப் பின்) தொழுபவர்களை அடிப்பவர்களாக இருந்ததையும் தெரிவிக்கச் சொன்னார். 
ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று, நான் அனுப்பப்பட்ட விஷயத்தைக் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரலி) ‘நீர் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் கேளும்’ எனக் கூறினார். நானும் இம்மூவரிடம் திரும்பி வந்து ஆயிஷா(ரலி) கூறியதைச் சொன்னேன். உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் சென்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்ட கேள்வியைக் கேட்குமாறு மீண்டும் அனுப்பினார்கள். (உடனே நான் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் நான் உம்மு ஸலமா(ரலி) விடம் வந்து விஷயத்தைக் கூறியபோது) நபி(ஸல்) அவர்கள் இவ்விரு ரக்அத்களைத் தடை செய்ததை கேட்டுள்ளேன். பிறகு அவர்கள் அஸர் தொழுதுவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுததை பார்த்தேன். தொழுதுவிட்டு என்னுடைய வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என்னுடன் அன்ஸாரிகளில் பனூ ஹராம் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். அவர்களில் ஒரு பெண்ணை, தொழுது கொண்டிருக்கும் நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பி, ‘நீ அவர்களுக்கு அருகில் சென்று இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இந்த இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடுத்ததை கேட்டிருக்கிறேன். ஆனால், இப்போது தாங்களே அதைத் தொழுவதை நான் பார்க்கிறேனே? என நான் கேட்டதாக அவர்களிடம் நீ கூறு. அவர்கள் தம் கைகளினால் சைகை செய்தால் நீ பின்வாங்கிவிடு எனக் கூறி அனுப்பினேன். அப்பெண்ணும் கூறப்பட்டது போன்றே செய்தார். நபி(ஸல்) அவர்கள் தம் கைகளால் சைகை செய்தபோது அப்பெண்மணி திரும்பி வந்துவிட்டார். தொழுகையை முடித்த நபி(ஸல்) அவர்கள், ‘அபூ உமய்யாவின் மகளே! அஸருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்தைப் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கிளையைச் சேர்ந்தவர்கள் வந்ததால் லுஹருக்குப் பின்னாலுள்ள இரண்டு ரக்அத்கள் தொழ முடியவில்லை; அத்தொழுகையை இந்த இரண்டு ரக்அத்களாகும்” என்றார்கள் என உம்மு ஸலாமா(ரலி) விடையளித்தார்கள்.  

பாடம் : 9 தொழுகையில் சைகை செய்வது இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவித்ததாக, குறைப் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். 
1234. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். 
இப்னு அவ்ஃப் கோத்திரத்தார்களிடைய ஏதோ பிரச்சினை ஏற்பட்டு இருப்பதாக நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. எனவே, நபி(ஸல்) அவர்கள் தம் தோழர் சிலருடன் அங்கு சென்று அக்கோத்திரத்தார்களிடையே சமாதானம் செய்வதில் ஈடுபட்டிருந்தபோது தொழுகையின் நேரம் நெருங்கிவிட்டது. அப்போது பிலால்(ரலி), அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து ‘அபூ பக்ரே! நபி(ஸல்) அவர்கள் (தங்கள் பணியின் நிமித்தமாக நேரத்தோடு வந்து சேர்வதிலிருந்து) தடுக்கப்பட்டிருக்கிறார்கள். தொழுகையின் நேரமும் நெருங்கிவிட்டது. எனவே, தாங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துகிறீர்களா?’ எனக் கேட்டதற்கு அபூ பக்ர்(ரலி) ‘நீர் விரும்பினால் செய்கிறேன்” என்றவுடன் பிலால்(ரலி) இகாமத் கூற அபூ பக்ர்(ரலி) முன்னின்று மக்களுக்குத் தொழுகை நடத்துவதற்காகத் தக்பீர் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வரிசைகளினூடே வந்து (முதல்) வரிசையில் நின்றார்கள். (இதைக் கண்ட) மக்கள் கைதட்டலானார்கள். தொழுகையில் திரும்பும் வழக்கமில்லாத அபூ பக்ர்(ரலி) மக்கள் கைதட்டலை அதிகரித்தபோது திரும்பி (முதல் வரிசையில்) நபி(ஸல்) அவர்கள் நிற்பதைக் கண்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ரைப் பார்த்துத் தொழுகையைத் தொடரும்படி சைகை செய்தார்கள். எனினும், அபூ பக்ர்(ரலி) தம் கைகளை உயர்த்தி இறைவனைப் புகழ்ந்து திரும்பாமல் பின் நோக்கி வந்து (முதல்) வரிசையில் நின்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் முன் சென்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுகையை முடித்ததும் மக்களை முன்னோக்கி ‘மக்களே! தொழுகையில் (இதே போன்று) ஏதாவது நிகழ்ந்துவிட்டால் நீங்கள் ஏன் கை தட்டுகிறீர்கள்? கை தட்டுதல் பெண்களுக்குரிய செயலாகும். எனவே, யாருக்கேனும் தம் தொழுகையில் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் ‘ஸுப்ஹானல்லாஹ்’ எனக் கூறட்டும். ஏனெனில், ஸுப்ஹானல்லாஹ்வைக் கேட்கிறவர் இந்தப் பக்கம் தம் கவனத்தைச் செலுத்துவார்’ எனக் கூறினார்கள். பிறகு (அபூ பக்ர்(ரலி) அவர்களிடம்) ‘அபூ பக்ரே! நான் உம்மை நோக்கிச் சைகை செய்தபோது மக்களுக்குத் தொடர்ந்து தொழுகை நடத்துவதிலிருந்து உம்மைத் தடுத்தது எது?’ எனக் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) ‘இறைத்தூதர் முன்னிலையில் தொழுகை நடத்து அபூ குஹாஃபாவின் மகனுக்குத் தகுதியற்ற செயலாகும்” எனக் கூறினார்.  

1235. அஸ்மா(ரலி) அறிவித்தார். 
ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றபோது மக்களோடு அவர் நின்று தொழுது கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் அவரிடம்” மக்களுக்கு என்ன வாயிற்று?’ எனக் கேட்டேன். ஆயிஷா(ரலி) தம் தலையால் வானத்தின் பக்கம் சைகை செய்தார். நான் ‘(இறை) அத்தாட்சியா?’ எனக் கேட்டதற்கு ‘ஆம்” எனத் தம் தலையால் சைகை செய்தார்.  

1236. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
அவர்கள் நோயுற்றபோது தம் வீட்டில் உட்கார்ந்தவாறு தொழுகை நடத்தினார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டு தெழுதார்கள். எனவே, நபியவர்கள் மக்களை நோக்கி உட்காருமாறு சைகை செய்தார்கள். தொழுகையை முடித்துவிட்டு ‘இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பதே பின்பற்றப்படுவதற்காகத்தான்! எனவே, அவர் ருகூவுச் செய்தால் நீங்களும் ருகூவுச் செய்யுங்கள்; அவர்(தலையை) உயர்த்தினால் நீங்களும் உயர்த்துங்கள்” என்று கூறினார்கள்.