பாகிஸ்தானுக்கு எட்டு ‘எப்-16’ ரக போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா முடிவு செய்தது. இது இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது.
உடனடியாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்டு வர்மாவை வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் நேரில் அழைத்து இந்தியாவின் எதிர்ப்பை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தார். இருப்பினும் இப்போது இந்தியாவின் எதிர்ப்பை மீறி, பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் விற்பனை செய்வதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிக்கை, அமெரிக்க கூட்டாட்சி பதிவேட்டில் வெளியிடப்பட்டு விட்டது.
அதில், “அமெரிக்க வெளியுறவு கொள்கை நோக்கங்களை நிறைவேற்றுகிற வகையில், தெற்கு ஆசிய பகுதியில் போர்த்திறம் சார்ந்த கூட்டாளியின் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு இந்த விற்பனை உதவும்” என கூறப்பட்டுள்ளது. இந்த விமானங்களின் விலை கிட்டத்தட்ட 700 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.4,690 கோடி) ஆகும்.
பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்றுத்தான் இந்த விற்பனை நடைபெறுவதாக அறிவிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.