க.கிஷாந்தன்
கூட்டு ஒப்பந்தத்தை உடனடியாக புதுப்பித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி அட்டனில் 04.03.2016 அன்று மதியம் போராட்டம் நடத்தியது.
ஜே.வி.பியின் தொழிற்சங்கப் பிரிவான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினரான கே.டீ லால் காந்த பங்கேற்றிருந்தார். அத்துடன், தொழிலாளர்களும் வீதியில் இறங்கி உரிமைக்குரல் எழுப்பினர்.
நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே; நியாயமான சம்பள உயர்வை உடன் வழங்கு; நல்லாட்சி அரசே எமது அழுகுரல் உனது செவிகளுக்கு கேட்கவில்லையா என்றெல்லாம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.
அத்தோடு பதாதைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைச்சாத்திப்பட்ட கூட்டு ஒப்பந்தம் 2015 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதியுடன் காலவதியானது. இதை புதுப்பித்துக்கொள்வதற்காக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையில் நடைபெற்று வந்த பேச்சுகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது விடயத்தில் தொழில் அமைச்சும் தலையிட்டது. ஆனால், ஒன்பது மாதங்கள் கடந்துள்ளபோதிலும் ஸ்தம்பிதமடைந்துள்ள பேச்சுகள் மீள ஆரம்பமாகவுமில்லை;ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவுமில்லை. அத்துடன், அரசின் உத்தேச சம்பள உயர்வான இரண்டு ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவும் உரிய வகையில் கிடைப்பதில்லை. இவ்வாறானதொரு புன்புலத்திலேயே ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
இலங்கையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே சம்பள உயர்வு கணிப்பிடப்படுகின்றது. 1994 ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வந்தது. இரண்டு வருடங்களுக்கு ஒருதடவை இது புதுப்பிக்கப்படும். தொழிலாளர்களின் சார்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட கூட்டமைப்பு ஆகியன கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களாகும்.