அணு ஆயுதங்களை எந்த நேரத்திலும் பயன்படுத்த தயார் நிலையில் இருக்குமாறு ராணுவத்தினருக்கு வடகொரிய அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஹைட்ரஜன் குண்டுகளை வெடித்து பரிசோதித்தது, விண்வெளி ஆய்வு என்ற பெயரில் அதிநவீன ஏவுகணையை செலுத்தியது போன்ற அத்துமீறல்களுக்காக வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு சபை கடந்த புதன்கிழமை புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ள வேளையில் அதிபர் கிம் ஜாங் உன் பிறப்பித்துள்ள இந்த திடீர் உத்தரவு உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வடகொரியாவின் ராணுவ தலைமையகத்துக்கு வந்த கிம் ஜாங் உன் அங்கு வைக்கப்பட்டுள்ள அதிநவீன ராக்கெட்கள், ஏவுகணைகளை பார்வையிட்ட பின்னர், நமது எதிரிநாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் நம்மிடம் இருக்கும் அணு ஆயுதங்களை எந்த நேரத்திலும் பயன்படுத்த தயார் நிலையில் இருக்குமாறு ராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அணு ஆயுதங்களின் தரத்தையும் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய அதிபர், நாட்டை பாதுகாப்பதற்காக நம்மிடம் உள்ள அணு ஆயுதங்கள் எந்த நிமிடத்திலும் சீறிப்பாயும் வகையில் தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
குறிப்பாக, தென்கொரியாவை குறிவைத்து தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏவுகணைகளை பார்வையிட்ட கிம் ஜாங் உன் திருப்தி தெரிவித்ததாகவும் அந்த செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால், கொரிய தீபகற்பத்தில் போர்மேகம் சூழும் நிலை உருவாகியுள்ளது, குறிப்பிடத்தக்கது.