டக்ளஸ் தேவானந்தா, சென்னையில் 1986–ம் ஆண்டு வசித்தபோது, சூளைமேட்டை சேர்ந்த திருநாவுகரசு என்பவரை சுட்டுக்கொலை செய்ததாகவும், பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை 4–வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. டக்ளஸ் தேவானந்தா இலங்கையில் வசிப்பதால், இந்த வழக்கை ‘காணொளிக்காட்சி’ மூலம் அவரிடம் விசாரிக்கவேண்டும் என்று செசன்சு கோர்ட்டுக்கு, ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு 4–வது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி எம்.சாந்தி முன்பு கடந்த 18ம் திகதி விசாரணைக்கு வந்தபோது, அரச வக்கீல் எம்.பிரபாவதி, ‘இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் உள்ளதால், காணொளிக்காட்சி மூலம் டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை மார்ச் 5–ம் திகதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், அரசு வக்கீல் எம்.பிரபாவதிக்கும், சூளைமேடு இன்ஸ்பெக்டருக்கும் நீதிபதி எம்.சாந்தி உத்தரவு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ‘தேசிய தகவல் மையத்தின் மூலம், இலங்கையில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவிடம் காணொளிக்காட்சி மூலம் வழக்கை விசாரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, வருகிற மார்ச் 5ம் திகதி காலை 10 மணிக்கு அரசு தரப்பு சாட்சிகளை கோர்ட்டில் ஆஜராக ஏற்பாடுகள் செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது என, தமிழக ஊடகமான தினத்தந்தி செய்தி வௌியிட்டுள்ளது.