அதிகாரம் இருக்கும் இறுதி நிமிடம் வரை அக்கரைப்பற்று மக்களின் குரலாக இருப்பேன் : உதுமாலெப்பை !

சலீம் றமீஸ்

 

எங்களிடம் அரசியல் அதிகாரங்கள் இருந்த போதெல்லாம் அக்கரைப்பற்று மக்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களை பூரணப்படுத்தியதுடன், குறிப்பாக கல்வித் துறை வளர்ச்சிக்கு பாரிய பங்கினை வழங்கியுள்ளோம். இரண்டு தடவைகள் நடை பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தல்களில் அக்கரைப்பற்று மக்கள் அதிகப்படியான வாக்குகளை அளித்து எங்களுக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளனர். வாக்களித்த மக்களின் கல்வி விடயத்தினை பேசுவதற்கான அங்கீகாரம் மக்களினால் கிடைத்துள்ள நிலையில் இம்மக்களின் கல்வி விடயத்தில் தலையிடக் கூடாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் கூறுகின்றார்.

 

thavam uthumaan

 

அக்கரைப்பற்று மக்கள் எனக்கு வழங்கிய அரசியல் அதிகாரம் இருக்கும் இறுதி நிமிடம் வரை அக்கரைப்பற்று மக்களின் குரலாக செயல்படுவதனை யாரும் தடுக்க முடியாது என அக்கரைப்பற்று கல்வி விடயத்தில் தலையிடுவதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பைக்கு தகுதி இல்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.தவம் தெரிவித்த கருத்து தொடர்பாக பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக உண்மைக்கு புறம்பான செய்திகளையும், பிரதேச வாத உணர்வுகளையும் தூண்டக் கூடிய அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின் அக்ஃஅஸ் ஸிறாஜ் மகா வித்தியாலய அதிபரான எம்.ஐ.எம்.உவைஸூக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் பல்வேறு கஸ்டங்களை ஏற்படுத்தியதாகவும் , பல அழுத்தங்களை தொடர்ந்தும் ஏற்படுத்தியதாகவும் இதன்காரணமாக மன உளைச்சலுக்குள்ளான நிலையில் அதிபர் உவைஸ் அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலய அதிபர் பதவியில் இருந்து வேறு பாடசாலை ஒன்றுக்கு இடமாற்றம் பெற்று தருமாறு அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

அஸ்ஸிராஜ் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் 80 பேர் இணைந்து கையொப்பமிட்டு இக் கல்லூரியின் அதிபரினால் வழங்கப்பட்டிருந்த வேறு பாடசாலைக்கு இடமாற்றம் கோரிய வேண்டுகோளை மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு இவ் அதிபரை தொடர்ந்தும் இப்பாடசாலையின் அதிபராக கடமையாற்றக் கோரி அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு வலயக்கல்வி பணிப்பாளருக்கு தன்னால் வழங்கப்பட்ட வேறு பாடசாலைக்கு இடமாற்றம் கோரிய கடிதத்தினை அதிபர் உவைஸ் வாபஸ் பெற்றுக் கொண்டார்.

 
அக்கரைப்பற்று பிரதேச சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் நகர திட்டமிடல், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்களிடமும் இவ் அதிபரை இடமாற்ற வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கல்லூரியின் அதிபர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.தவம்; தன்னை இப்பாடசாலை அதிபர் பதவியிலிருந்து இடமாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் மேற்கொண்ட பல தொந்தரவுகளை தொடர்ச்சியாக கொடுத்து வந்ததன் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகி தனது சுய கௌரவத்தினையும், தனிப்பட்ட பாதுகாப்பினையும் கருத்திற் கொண்டு இப்பாடசாலை அதிபர் பதவியில் இருந்து இடமாற்றம் கோரி வலயக் கல்வி பணிப்பாளருக்கு விண்ணப்பித்துள்ளதாக எழுத்து மூலம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான றஊப் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளார்.

 
கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு.தண்டாயுதபானியை கல்வி அமைச்சில் சந்தித்த அக்கரைப்பற்று பிரமுகர்கள் இக் கல்லூரி அதிபரை இடமாற்ற மேற்கொள்ளப்படும் அரசியல் பின்னணிகளை விளங்கப்படுத்தினார்கள்.
அரசியல் காரணங்களுக்காக அதிபர்கள் இடமாற்றப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சரும் வாக்குறுதி அளித்தார். உரிய அதிகாரிகளையும் இது விடயமாக பணித்தார். என்ன காரணத்திற்காக அதிபர் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார் என்பதனை அக்கரைப்பற்று மக்கள் நன்கு அறிவார்கள். அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகள் சிலவற்றில் இவ்வாறான நிலைமை தோன்றியுள்ளதால் கல்வி வளர்ச்சியில் பாரிய தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அண்மையில் அக்கரைப்பற்று பிரமுகர்கள் கிழக்கு மாகாண ஆளுனர் திரு.ஒஸ்டின் பெர்னான்டோவை சந்தித்து முறையிட்டுள்ளனர். இத்தனை நிலைமையும் ஏற்பட்ட பின் அக்கரைப்பற்று கல்வி விடயமாக என்னை தலையிடக் கூடாது என மாகாண சபை உறுப்பினர் தவம் கூறியுள்ளார்.

 
அதிகப்படியான ஆதரவு வழங்கிய அக்கரைப்பற்று மக்களினால்; எனக்கு வழங்கப்பட்ட அரசியல் அதிகாரம் இருக்கும் வரை அம்மக்களின் குரலாகவே செயல்படுவேன் என்பதனை மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். தனது அரசியல் நலனுக்காக பிரதேச வாத உணர்வுகளை தூண்;டி ஒற்றுமையாக வாழும் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில் பிரதேச மக்கள் மத்தியில் பிரிவுகளை ஏற்படுத்தி வருவது குறித்து நாம் கவலை அடைய வேண்டியுள்ளது. அக்கரைப்பற்று கல்வியின் வீழ்ச்சிக்கு யார் காரணம் என்பதனை அக்கரைப்பற்று மக்கள் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்.

 
கடந்த 23.02.2016ம் திகதி கிழக்கு மாகாண சபையில் என்னால் சமர்ப்பிக்கப்பட்ட கிழக்கு மாகாண தமிழ் மொழி பாடசாலைகளில் 2வது மொழியான சிங்களப் பாடம் கற்பிப்பதற்கான ஆசிரியர்களை நியமணம் செய்வதற்கும், சிங்கள மொழிப் பாடசாலைகளில் 2வது மொழியான தமிழ் ஆசிரியர்களை நியமணம் செய்வதற்கும் சமர்ப்பிக்கப்பட்ட தனி நபர் பிரேரனையில் கலந்து கொண்டு உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் தவம் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு தொடர்பில்லாத வகையில் அக்கரைப்பற்று வலயக் கல்விச் செயற்பாடுகளை குறிப்பிட்ட போது பிரேரணைக்கு தொடர்பில்லாத விடயங்களை பேசுவதனை நிறுத்துமாறு சபைக்கு தலைமை தாங்கிய தவிசாளர் திரு.நிஹால் கலப்பதி கேட்டுக் கொண்டார்.

 

இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் கிழக்கு மாகாண சபையில் பேசாத வார்த்தைகளை பத்திரிகைகளுக்கும், இணையதளங்களுக்கும் அவசரமாக அனுப்பி தனது அரசியல் இலாபத்தினை நிறைவு செய்வதற்கு எத்தனித்துள்ளார். இது தொடர்பாக 24.02.2016ம் திகதி நடை பெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் கிழக்கு மாகாண பேரவை தலைவரிடமும், கிழக்கு மாகாண சபையிலும் முறைப்பாடு செய்துள்ளேன் எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.