தமிழர்களை கொன்ற துப்பாக்கிகளுக்கு தோட்டா வழங்கியவர்கள் ஜே.வி.பியினர் : கனகராஜ் !

க.கிஷாந்தன்

 

 இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அரசியல் எதிரிகள் சொல்லிக்கொடுத்ததை அப்படியே ஒப்புவிக்கும் கிளிப்பிள்ளையே அனுர குமார திசாநாயக்க என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மீது சேறு பூச எத்தணிக்கும் சக்திகளின் எடுப்பார் கை பிள்ளையாக ஜே.வி.பி யின் அனுர குமார திசாநாயக்காவின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

KANABATHI KANAGARAJ

 

அன்று மக்கள் விடுதலை  முண்ணனியினரின் அரசியலின் தொடக்கமே இந்திய தமிழர்களை இந்த நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதிலிருந்து தான் ஆரம்பித்தது. ஆனால் இன்று இந்திய வம்சாவளி மக்களுக்கு சில மலையக அரசியல் கோமாளிகளுடன் சேர்ந்து புதிய பெயர் சூட்ட புறப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்தில்  இனவாததிற்கு முதலடி எடுத்து கொடுத்தவர்களும், தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை இரும்பு கரம்கொண்டு நசுக்கி தமிழர்களை கொன்று குவித்த துப்பாக்கிகளுக்கு தோட்டாக்களை வழங்கிய இவர்கள் தற்போது தமிழர்களுக்காக நீழிக்கண்ணீர் வடிக்கின்றார்கள்.  மலையகத்தின் தலைமையின் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் மூலம் மலையக மக்களை சிதறடித்து அரசியல் குளிர்காய மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் மூலம் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட சேவைகளையும் அதற்கான செலவுகளையும் அறியாமல்  பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க பேசுவது வேடிக்கையான விடயமாகும்.  இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரசை அவமானப்படுத்தும் வகையில் பதில் சொல்ல வேண்டும்  என என்னுபவருக்காக தந்திரமாக தயார் செய்யப்பட்ட கருவி. பிழையான தகவல்களை வழங்கி கேள்விக்கேட்க வைப்பதனாலும் அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்ட பதில்களினாலும் உண்மையை மறைக்க முடியாது.

கடந்த ஒன்பது வருடங்களில் தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்திற்கு 1800 மில்லியன் ரூபாய்கள் அரச நிதி பயன்படுத்தப்பட்டதாக அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் தகவல்கள் படி வருடத்திற்கு சராசரியாக  125 மில்லியன் (பனிரெண்டு கோடி ஐம்பது லட்சம் ரூபா)  ரூபாய்களை திறைசேரி வழங்கி வந்திருக்கிறது. இதை மாதாந்த  அடிப்படையில் கணக்கிட்டால் மாதத்திற்கு ஒரு கோடி  நான்கு லட்சம் ரூபாவை திறைசேரி வழங்கி வந்திருக்கிறது.

இந்த மன்றத்தில் நிரந்தர ஊழியர்களாக 185 பேரும், 10 பர் தற்காலிக ஊழியர்களாகவும் சேவை செய்து வருகின்றனர். இவர்களுக்கான மாதாந்த சம்பளமாக 6.5மில்லியன் (65 லட்சம் ரூபாய்) வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன் மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்கள் வாழுகின்ற பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள  48 பிரஜாசக்தி தகவல் தொழில்நுட்ப நிலையங்களை நடத்தி செல்வதற்காக மாதாந்தம் 2.5 மில்லியன் (இருபதைந்து லட்சம் ரூபா) செலவிடப்பட்டிருக்கிறது. அத்துடன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் விடுதியில் தங்கி தொழிற் பயிற்சி பெறுபவர்கள் உட்பட சகல மாணவர்களுக்கும் இலவசமாக  உணவு
வழங்கப்பட்டு வருகிறது. அதே போல இறம்பொட கலாசார கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் மாணவர்களுக்கும் இலவச உணவு வழங்கப்பட்டு வந்திருக்கிறது. நவசக்தி சுயதொழில் வேலைத்திட்த்தின் ஊடாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு சுய தொழில் செய்வதற்கான கடன் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் மூலம் இன்னும் பல்வேறு சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மலையக மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கான செலவுகளையெல்லாம் சரியாக கணக்கு போட்டு பார்த்தால் கிடைத்த நிதியை உச்ச அளவில் மக்களுக்காக பயன்படுத்தப்பட்டிருப்பதை சாதாரணமாகவே அறிந்துகொள்ள முடியும்.

அனுரகுமார திசாநாயக இவற்றையெல்லாம் சரியாக தெரிந்துகொள்ளாமல் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு சேறு பூச எத்தனிப்பவர்களினால் தத்தெடுக்கப்பட்டவராக மாற்றப்பட்டுள்ளார்.

ஆறுமுகன் தொண்டமானின் குடும்பத்தை சார்ந்தவர்கள் தமது சொந்த சொத்துக்களை விற்று மக்கள் சேவை புரிந்தவர்கள். ஆறுமுகன் தொண்டமானுக்கோ அல்லது இலங்கை தொழிலாளார் காங்கிரசிற்கோ  ஊழல் புரிந்து வாழவேண்டிய அவசியமில்லை. அதனால்தான் மலையக மக்களின் முழுமையான ஆதரவுடன் இன்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைநிமிரிந்து நிற்கிறது. பொய்யான போலியான தகவல்களை வழங்கி மலையக மக்களை இலங்கை தொழிலாளர் காங்கிரசிலிருந்து பிரிக்க முணையும் எவ்விதமான நயவஞ்சக  முனைப்புக்களும் மலையக மக்களிடம் எடுபடாது என்பதை காலம் உணர்த்தும் எனவும் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.