விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையைப் பயன்படுத்தி சந்திரிரிக்காவின் அரசியல் நிர்ணய சபைத் திட்டத்தையே தவிடுபொடியாக்க முடிந்தது : வை.எல்.எஸ்.ஹமீட்

mnlk_Fotor

 

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

அரசியல் அமைப்பு சட்ட மாற்றம் பாகம் -06.,

நீதி மன்றில் அரசியல் நிர்ணய சபைக்கெதிரான வழக்கு..

இந்த பின்னணியில் திரு சுந்தரலிங்கம் அவர்கள் இந்த அரசியல் நிர்ணய சபைக்கு எதிராக உயர் நீதி ,மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் தீர்ப்பு 1971ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ம் திகதி வழங்கப்பட்டது.

அத்தீர்ப்பில் “அவ்வாறானதொரு புதிய அரசியல் அமைப்பு சட்டம் ஸ்தாபிக்கப்படுகின்ற பொழுது அல்லது அவ்வாறு ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக ஒரு தோற்றப்பாடு உருவாக்கப்படுகின்ற பொழுது இரண்டில் ஒரு வகையான சூழ் நிலை எழலாம்.
1). அவ்வாறானதொரு அரசியல் யாப்பு சட்டபூர்வமானதாகவும் வலுவானதுமாகவும் இருக்கும். அது தற்போதய அரசியல் யாப்பை மேவுகின்ற ஒன்றாகவும் இருக்கும். அவ்வாறான சூழ் நிலையில் புதிய அரசியல் யாப்பை கேள்விக்குறட் படுத்துவது வெற்றியளிக்காது.
2)மாறாக அரசியல் நிர்ணய சபையினால் உருவாக்கப்படுகின்ற புதிய அரசியல் யாப்பு சட்ட அந்தஸ்தும் வலுவும் அற்றது என்பதுதான் உண்மை நிலையாயின் அவ்வாறான புதிய அரசியல் யாப்பு ஸ்தாபிக்கப்பட்ட அல்லது ஸ்தபிக்கப்பட்டதற்கான தோற்றப்பாடு உருவாக்கப்பட்டதற்கு பின்னர்தான் பொருத்தமான நீதிமன்றம் அந்த யாப்பு சட்ட தன்மை மற்றும் வலு அற்றது என தீர்மானிக்க முடியும்; என்று திர்ப்பளித்திருந்தது.

(அதாவது இத்தீர்ப்பு வழங்கப்பட்ட நேரம் புதிய அரசியல் யாப்பு பிரகடனபடுத்தப்பட்டிருக்கவில்லை என்பது இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.)

புதிய யாப்பு பிரகடனம்.

————————-

இறுதியாக 1972ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி பி.ப.12.43 மணிக்கு நவரங்ககல மண்டபத்தில் வைத்து புதிய யாப்பு பிரகடனப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பிரதமர் சிறீமாவோ பண்ராநாயக்க அவர்கள் குடியரசிற்கும் புதிய அரசியல் யாப்பிற்கும் விசுவாசம் தெரிவித்து சத்தியப் பிரமாணம் செய்ததோடு ஜனாதிபதியாக திரு.வில்லியம் கோபல்லாவ அவர்களை அறிவித்தார்.

பின்னர் நீதிபதிகளும் அரச உத்தியோகத்தர்களும் இலங்கை குடியரசிற்கும் யாப்பிற்கும் விசுவாசம் தெரிவித்து சத்திய பிரமாணம் செய்தார்கள். இவ்வாறுதான் புதிய அரசியல் யாப்பு நிறுவப்பட்டது.

எனவேதான் அன்று “2/3 பெரும்பான்மையுடனோ அல்லது இல்லாமோ அரசியல் அமைப்பை திருத்துவதன் மூலம் தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும்” என்ற சந்திரிக்கா அம்மையாரின் கூற்று தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டதும், அது வரைக்கும் தனித்து போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பட்டில் இருந்த நான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்துதான் போட்டியிட வேண்டும் என்று விவாதிக்க தீர்மானித்தேன். ஏனெனில் சந்திரிக்கா அம்மையாரின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சாதரண அறுதி பெரும்பான்மையினை பெற்றால் கூட அவர் அரசியல் நிர்ணய சபையினை அமைத்து தேர்தல் முறைகளை தனக்கு வேண்டிய முறையில் மாற்ற முற்படலாம். அவ்வாறு மாற்றினால் சிறுபான்மை அரசியல் பாரதூரமாக பாதிக்கப்படலாம். எனவே அதனை தடுத்து நிறுத்த ஒரே வழி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதாகும். ஏனெனில்

 விகிதாசார தேர்தல் முறையின் கீழ் ஒரு வாக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை தீர்மானிக்கலாம். 1989ம் ஆண்டு சுமார் முன்னூறு வாக்குகளால் அம்பாறை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை இழந்த வரலாறு நம்மில் பலருக்கு ஞாபகம் இருக்கும்.

நாம் தனித்து போட்டியிட்டால் சில நேரங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகள் குறைவதனால் பொது ஜன ஐக்கிய முன்னணி சில மாவட்டங்களில் இலகுவாக வெற்றி பெறலாம். ஒரு மாவட்டத்தினை வெல்லுகின்ற கட்சிக்கு பெரும்பாலும் ஆகக் குறைந்தது இரண்டு ஆசனங்கள் அதிகமாக கிடைக்கலாம். சில நேரங்களில் விதி விலக்கு இருந்தாலும் கூட . அதே நேரம் நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் பொழுது அம்மாவட்டங்களை ஐக்கிய தேசியக் கட்சி வென்று அதிக ஆசனங்களை பெறலாம். எவ்வாறாயினும் பொது ஜன ஐக்கிய முன்னணி அறுதி பெரும்பான்மை பெறுவது தடுக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடாகும்.
இந்த முடிவுடன் அதி உயர் பீட கூட்டத்திற்கு சென்ற பொழுது புத்தளம் பாயிசைத்தவிர அனைவரும் தனித்து போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள்.நான் ஐக்கிய தேசியக் கட்சியுடந்தான் இனைந்து போட்டியிட வேண்டும் என்ற எனது நிலைப்பட்டை கூறிய பொழுது அக்கறைப்பற்றை சேர்ந்த சகோதரர் உவைஸ் அவர்கள் அவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டால் மக்கள் கல்லால் அடிப்பார்கள் என்றார். அப்பொழுது அப்படி மக்கள் கல்லால் அடித்தால், முதலாவது கல் அடியினை வாங்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். கட்சி மக்களை வழி நடாத்துகின்ற சந்தர்ப்பங்களும் இருக்கின்றன, அதே நேரத்தில் கட்சியை மக்கள் வழி நடாத்துக்கின்ற சந்தர்பங்களும் இருக்கின்றன; இது கட்சி மக்களை வழி நடாத்துகின்ற சந்தர்ப்பம் எனக்கூறி எனது நிலைப்பட்டிற்கான நியாயத்தினை விளக்கினேன்.பலர் என்னுடன் உடன்பட்டார்கள். சிலர் என்னுடன் உடன் படுவதில் தயக்கம் இருந்த போதிலும் கூட .கட்சித் தலைவருக்கு அந்த நேரம் வை.எல்.எஸ்.ஹமீட் ஒரு ஆபத்பாந்தவனாகப் பட்டார்.

ஏனெனில் கட்சி தலைவரைப் பொறுத்தவரை  ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட வேண்டும். ஆனால் அவருக்கு கைகொடுக்க புத்தளம் பாயிஸ் மட்டுமே இருந்தார். ஏனைய அனைவரும் மறுபக்கம். அவ்வறான இக்கட்டான நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் ஏனையவர்களின் நிலைப்பட்டில் இருந்த ஒருவர் இரண்டு நாட்களுக்கு பின் அவரது நிலைப்பட்டிற்கு ஆதரவாக உரத்து குரல் கொடுத்தது அவருக்கு ஆறுதலாக இருந்தது.
முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடப்போகின்றது என்று அறிந்ததும் கிழக்கிலிருந்து பல குழுக்கள் தனித்து போட்டியிட வேண்டும் என்று தலைமையிடம் வலியுறுத்த கொழும்பிற்கு வந்தார்கள். கிழக்கிழங்கை ஜம்மியத்துல் உலமா சபையும் வந்தது. இவர்களுக்கெல்லாம் விளக்கம் கொடுக்கின்ற பொறுப்பு கட்சி தலைவரினால் வை.எல்.எஸ்.ஹமீடிற்கு ஒப்படைக்கப்பட்டது. இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டோம். எமது இலக்கிலும் வெற்றியடைந்தோம். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  அறுதிப் பெரும்பான்மை பெற வில்லை.அதற்கு எட்டு ஆசனங்கள் தேவைப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

1972ம் ஆண்டு சிறீமாவோ பண்டாரநாயக்கா 50 விகிதத்திற்கு குறைவான வாக்குகளை பெற்றும் அதிக ஆசனங்களை பெற்று அரசியல் நிர்ணய சபையினை அமைத்தார். தொகுதி முறைத் தேர்தலில் உதவியின் காரணமாக. அதாவது 1970ல் ஐக்கிய முன்னணி ( சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டு அணி) 48.7 விகித வாக்குகளைப் பெற்று 76.8 விகித ஆசனங்களைப் பெற்றது. மறு வார்த்தையில் கூறுவதானால் 151 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்தில் 116 ஆசனங்களை வென்றார்கள்.
2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி நடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 45.6 விகித வாக்குகளைப் பெற்று 46.6 விகித ஆசனக்களைப் பெற்றார்கள். அதாவது 225 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்தில் 105 ஆசனங்களை மட்டும் வென்றார்கள்.
இரண்டு தேர்தலுக்குமிடைப்பட்ட வித்தியாசம் 1970ம் ஆண்டு, 2004ம் ஆண்டு UPFA பெற்ற வாக்குகளை விட 3.1 விகித மேலதிக வாக்குகளை சிறீலங்கா சுதந்திரக் கூட்டணி பெற்று 30.2 விகித மேலதிக ஆசனங்களைப் பெற்றதனால் அவர்களுக்கு அரசியல் நிர்ணய சபை சாத்தியப்பட்டது.
விகிதாசார தேர்தல் முறையின் கீழ் சில சிறுபான்மைகளுக்கு இருக்கின்ற அரசியல் பலத்தை 2004ம் ஆண்டு பாவித்து சிறுபான்மைகளுக்கு வர இருந்த பெரியதொரு ஆபத்து -அதாவது சந்திரிக்கா பண்டார நாயக்காவின் அரசியல்நிர்ணய சபை அமைத்து தேர்தல் முறையை பெரும்பான்மை சமூகத்திற்கு சாதகமாக மாற்றுகின்ற அந்த திட்டம். தவிடுபொடியாக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்த விகிதாசார தேர்தல் முறையில்தான் இப்பொழுது மீண்டும் கைவைக்க முயற்சிக்கின்றார்கள். எனவேதான் முஸ்லிம்களே விழிப்படையுங்கள்.! விழிப்படையுங்கள்.! என்று மிண்டும் கூறுகின்றோம்.
சந்திரிக்கா அம்மையார் அறுதிப் பெரும்பான்மை பெறாத போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியை விட அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தார். அவர் அறுதிப் பெரும்பான்மை பெற்றிருந்தால் அரசியல் நிர்ணய சபையை அமைத்திருப்பார். ஏனெனில் அன்று சிரிமாவோ பண்டாரநாயக்க செய்தது போல் அவரும் தேர்தல் விஞ்ஞாபத்தில் அரசியல் நிர்ணய சபை தொடர்பாக குறிப்பிடிருந்தார். அவ்வாறு அவர் அரசிய நிர்ணய சபையை அமைத்திருந்தால் தேர்தல் முறை மாற்றப்பட்டிருக்கும். சில வேளை சிறுபான்மை அரசியலுக்கு சந்தர்ப்பம் இல்லாமல் கூட போய்யிருக்கலாம்.
2004ம் ஆண்டு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து வெளியேற்றமும், முஸ்லிம்களின் அரசியல் பலம் இன்னுமொரு தடவை நிரூபிக்கப்பட்டமையும்….

——————————————————

தேர்தலில் ஆசனங்களை குறைவாக பெற்ற போதிலும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி அமைத்தது. இருப்பினும் ஆட்சியை தொடர பெரும்பான்மை தேவைப்பட்டது. குறித்த தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய முதல் தடவையாக போட்டியிட்டு 9 ஆசனங்களை பெற்றிருந்தது. அதே நேரம் முஸ்லிம் காங்கிரஸ் பத்து ஆசனங்களைப் பெற்றிருந்தது.தேவையான பெரும்பான்மையை பெறுவதற்கு சந்திரிக்கா அம்மையாருக்கு இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று ஜாதிக ஹெல உறுமயவை அரவணைப்பது அல்லது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசை அரவணைப்பது. அவர் முஸ்லிம் காங்கிரசினை அரவணைக்கவே விரும்பினார்.

இந்த விடயம் கட்சியின் அதி உயர் பீடத்தில் விவாதிக்கப்பட்டது. அங்கு கட்சி கட்டாயம் சந்திரிக்காவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிலைப்பட்டை நாங்கள் ஒரு சிலர் எடுத்தோம். ஏனெனில் யுத்த நிறுத்த காலத்தில் புலிகளினால் முஸ்லிம்களுக்கு செய்யப்பட்ட அநீதிகளை கைகட்டிப் பார்த்துகொண்டு முஸ்லிம் காங்கிரசின் தயவில் ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் நாங்கள் கூட்டு சேர்ந்தது, சந்திரிக்காவிற்கு பெரும்பான்மை கிடைப்பதனை தடுத்து அதன் மூலம் அவரது அரசியல் நிர்ணய சபையை அமைக்கும் யோசனையினை தவிடு பொடியாக்குவதேயாகும்.

இப்பொழுது அவருக்கு எட்டு ஆசனங்கள் மட்டுமே தேவை.ஜாதிக ஹெல உறுமயவிடம் ஒன்பது ஆசனங்கள் இருந்தன.ஜாதிக ஹெல உறுமயவுடன் சேர்ந்து அவர்கள் பெரும்பான்மையை பெற்றால், அவர் அதன் மூலம் அரசியல் நிர்ணய சபையை அமைத்து தனது காரியத்தை சாதிக்க முயலலாம். எதைத் தடுப்பதற்காக நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்ந்தோமோ அதை இப்பொழுது ஐக்கிய தேசியக் கட்சியினை திருப்தி படுத்துவதற்காக வெளியில் இருப்பதன் மூலம் சந்திரிக்காவிற்கு ஜாதிக ஹெல உறுமயவுடன் சேர்ந்து அதனை செய்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்கப் போகின்றோம். எனவே நாம் இதனை தடுப்பதாக இருந்தால் சந்திரிக்காவிற்கு முஸ்லிம் காங்கிரஸ் முட்டுக்கொடுப்பதை தவிர வேறு வழியில்லை; என்பதை சுட்டிக்காட்டினோம். அபொழுது எம்மை வைத்து அந்த அரசியல் நிர்ணய சபையினை அமைத்தால் என்ன செய்வது?என கட்சித் தலைவர் கேட்டார். அப்பொழுது அரசியல் நிர்ணய சபையை அமைக்கக் கூடாது என்ற உத்தரவாதத்தை பெற்றுக்கொண்டு ஆதரவளிப்போம் என்று கூறினோம். அப்பொழுது தலைவர், மீண்டும்  உத்தரவாதம் தந்த பின்னர் அரசியல் நிர்ணய சபையை அமைத்தால் என்ன செய்வது, என்று கேட்டார்.  நாம் கூறினோம். அவ்வாறு செய்தால் நமது முட்டை கழற்றி விடுவோம் .அப்பொழுது அவருடைய ஆட்சி கழிந்துவிடும் .அது அவருக்கு தெரியும். எனவே அவர் அதனை ஒரு பொழுதும் செய்ய மாட்டார். ஆனால் நாம் முட்டுக்கொடுக்கா விட்டால் ஜாதிக ஹெல உறுமயவை கொண்டு எல்லாவற்றையும் சாதித்து விடுவார் என்றோம். ஆனால் கட்சியின் தலைவர் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விட்டு வெளியில் வருவதற்கு தயாராக இருக்கவில்லை.

இந்த நிலையில்தான் வேறு வழியிலாமல் கட்சியை உடைத்துகொண்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. அதன் மூலம் அரசியல் நிர்ணய சபை தடுத்து நிறுத்தப்பட்டது. விளைவு சந்திரிக்காவின் தேர்தல் முறை மாற்றம் கைகூடாமல் போனது. அந்த முடிவினை எடுக்காமல் இருந்திருந்தால் சில வேளை தேர்தல் முறை மாற்றப்பட்டு சிறுபான்மை அரசியல் பற்றி பேசுவதற்குரிய சந்தர்ப்பமே இல்லாமல் போயிருக்கலாம். தேர்தல் முறை மாற்றம் சிறுபான்மை சமூகத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை தேர்தல் முறைகள் தொடர்பாக விரிவாக ஆராயும் பொழுது பார்க்கலாம்
இன்று சிலர் எம்மீது சேறு பூச முனைவது போல் அன்றும் சிலர் முனைந்தார்கள். ஆனால் எக்களுடைய உள்ளத்தில் இஹ்லாஸ் இருந்தது. அதனால்தான் நாங்கள் எதற்கும் கவலைப்படாமல் சத்தியத்திற்கான எமது போராட்டத்தினை முன்னெடுத்தோம்.

இன்று வை.எல்.எஸ்.ஹமீட் கட்சியுடன் முரண்பட்டிருப்பது தேசியப்பட்டியலுக்காக என்று கொச்சைபடுத்த சிலர் முற்படுகின்றார்கள். தேசிய பட்டியல்தான் பிரச்சனை என்றால் 2010ம் ஆண்டு வை.எல்.எஸ்.ஹமீட் முரண்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு முரண்பட்டிருந்தால் நீதி மன்றம் செல்ல வேண்டிய தேவை கூட இருந்திருக்காது. ஏனெனில் “இன்று மாநாடுகள் நடாத்துகின்றவர்கள் “அன்று கட்சியில் சாதாரண  அங்கத்தவர்களாக கூட இருக்கவிலை.

இன்றைய போராட்டம் வெளித்தோற்றத்தில் ஒரு  தேசியப்பட்டியல் பிரச்சினை போன்று தோற்றினாலும் இன்றைய போராட்டத்திற்கு பின்னாலும் இஃலாசான எண்ணம் இருக்கின்றது.. எந்த இஃலாசன எண்ணத்துடன் முஸ்லிம் காங்கிரசில் இருந்து வெளியேறி ஒரு போராட்டத்தை ஆரம்பித்தோமோ அந்தப்போராட்டத்தில் சத்தியமும் இஃலாசும் உண்மையாக இல்லை; மாறாக அப்போராட்டத்தில் கபட நோக்கங்களும் இலக்கு இல்லாத பாதையும்தான் இருக்கின்றது; என்பது தெளிவாகின்ற போது மீண்டும் ஒரு சத்தியப் போராட்டத்தினை அங்கிருந்து தொடங்க வேண்டி ஏற்படுகின்றது. அப்போராட்டத்தின் வெளிப்படையான ஆரம்ப புள்ளி ஒரு தேசியப்பட்டியல் பிரச்சனை போல் தோற்றலாம். அதற்காக அப்போராட்டமே தேசியப்பட்டியல் என்று எடை போடுவது தவறாகும்.

குறிப்பு -5ம் பாகத்தினை வாசிக்க விரும்புவர்கள் கீழுள்ள  லிங்கினை கிளிக் செய்வதன் மூலம் பார்வை இடலாம்.

 

லங்கா ஃபுரன் நியூச்: https://lankafrontnews.com/?p=25181

 

குறிப்பு– 4ம் பாகத்தினை வாசிக்க விரும்புவர்கள் கீழுள்ள  லிங்கினை கிளிக் செய்வதன் மூலம் பார்வை இடலாம்.

 

லங்கா ஃபுரன் நியூச்: https://lankafrontnews.com/?p=24879- 

 

குறிப்பு– 3ம் பாகத்தினை வாசிக்க விரும்புவர்கள் கீழுள்ள  லிங்கினை கிளிக் செய்வதன் மூலம் பார்வை இடலாம்.

 

லங்கா ஃபுரன் நியூச்:- https://lankafrontnews.com/?p=24610

 

குறிப்பு-02 பாகத்தினை வாசிக்க விரும்புவர்கள் கீழுள்ள  லிங்கினை கிளிக் செய்வதன் மூலம் பார்வை இடலாம்.

லங்காஃபுறன் நியூஸ்:- www.lankafrontnews.com/?p=24406

 

 

குறிப்பு-01 பாகத்தினை வாசிக்க விரும்புவர்கள் கீழுள்ள லிங்கினை கிளிக் செய்வதன் மூலம் பார்வை இடலாம்.

லங்காஃபுறன் நியூஸ்:- www.lankafrontnews.com/?p=24152