முஸ்லிம்களின், தனி முஸ்லிம் மாகாணக் கோரிக்கை என்பது தனிநாடு என்கின்ற அளவுக்கு பெருப்பித்துக் காண்பிக்கப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில், சமூக அரசியலில் கற்றுக்குட்டிகள் விடுகின்ற அறிக்கைகளும் அவர்கள் செய்கின்ற அரசியலும் அபத்தமாக தெரிகின்றன. கற்றுக்குட்டிகள் என்போர், இன்னும் கற்றுத்தேறாத, ஆழ அகலங்களை அறிந்திராத, பயில்நிலை நபர்கள் என்று அகராதியின் அடிப்படையில் வரையறை செய்ய முடியும். அப்படிப் பார்த்தால் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்குள் உண்மையான கற்றுக் குட்டிகளும் இருக்கின்றார்கள், எல்லாவற்றையும் நன்கு கற்றறிந்து வைத்துக் கொண்டு தம்மை கற்றுக்குட்டிகள் போல வெளியே காட்டிக் கொள்கின்றவர்களும் இருக்கின்றார்கள். எவ்வாறிருப்பினும், இக் கட்டுரையில் நானாக யாரையும் கற்றுக்குட்டி என்றோ, கற்றறிந்தோர் என்றோ வரையறை செய்யப் போவதில்லை. மாறாக, வாசகர்களாகிய பொதுமக்களின் பார்வைக்கே அதனை விட்டுவிடுகின்றேன்.
நாட்டில் புதியதொரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பூர்வாங்க வேலைகள் மும்முரமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ் அரசியலமைப்பே இன்றிருக்கின்ற தலைமுறையையும் இனிவரும் தலைமுறையையும் ஆளுவதற்கான அடிப்படை முன்மொழிவுகளை கொண்டிருக்கப் போகின்றது. குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதா இல்லையா என்ற விடயம், தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம், சமஷ்டி முறை, தேர்தல் முறைமை மறுசீரமைப்பு மற்றும் முஸ்லிம் மாகாணம் அல்லது முஸ்லிம் அலகு உள்ளடங்கலாக தற்போதிருக்கின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கான சட்ட ஏற்பாடுகளை உத்தேச அரசியலமைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதில் முக்கியமானது தமிழர்களின் நெடுங்கால பிரச்சினைக்கான தீர்வுத்திட்டமாகும். முதலாவது சிறுபான்மை இனமான தமிழர்களுக்கு தீர்வுத்திட்டம் ஒன்று உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பதில் ஒரு சிறு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆயினும் இரண்டாவது சிறுபான்மை இனமான முஸ்லிம்களும் சமகாலத்தில் திருப்திப்படுத்தப்பட வேண்டும். அந்த வகையிலேயே, முஸ்லிம்களின் தனி மாகாண கோரிக்கை கவனிப்பை பெறுகின்றது. நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாண கோரிக்கை என்பது 35 வருடங்கள் தொன்மையானது. அரசியலமைப்பினூடாக தமிழர்களுக்கான தீர்வுப் பொதி தயாராகிக் கொண்டிருக்கின்ற இன்றைய காலத்தில் அது மீள வலியுறுத்தப்படுகின்றது. இதை முஸ்லிம் சமூகத்திற்குள் ஒவ்வொருவரும் வேறு கோணத்தில் பார்க்கின்றனர்.
வலியுறுத்துதலும் விமர்சனமும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையால் இன்றுவரைக்கும் தேசியப்பட்டியல் எம்.பி. மறுக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன்அலி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத் போன்ற ஒரு சிலரே அண்மைய நாட்களில் தனி முஸ்லிம் மாகாணக் கோரிக்கை பற்றிய கருத்துக்களை முன்வைத்திருக்கின்றனர். அமைச்சுப் பதவிகளை சுகித்துக் கொண்டும் தம்மை தேசிய தலைமைகள் என்று சொல்லிக்கொண்டும் அரசியல் செய்கின்ற மு.கா. தலைவரோ, மக்கள் காங்கிரஸ் தலைவரோ இதுபற்றி மூச்சுக்காட்டவில்லை. இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுமாக இருந்தால், அதற்குள் நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் அல்லது குறைந்த பட்சம் முஸ்லிம் அலகு ஒன்றைத் தர வேண்டுமென்ற கோரிக்கையை சிலர் விமர்சிக்கவும் தலைப்பட்டுள்ளனர்.
இதில் முதலாமவர் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அஷ்ரஃபின் புதல்வர் அமான் அஷ்ரஃப். கட்சியின் தவிசாளர் சேகுதாவூத், தனி மாகாண கோரிக்கையை விடுத்ததை ஆட்சேபித்து அவர் கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறான ஒரு (தனிநாட்டு) கோரிக்கை எனது தந்தை முன்வைக்கவில்லை. பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் முஸ்லிம் மாகாணம் ஒன்றையே அவர் கோரினார் என்று அமான் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களுக்கு தனிநாடு வழங்கப்படுமாக இருந்தால் அதேபோன்ற ஒரு நாடு தமக்கும் வழங்கப்பட வேண்டும் என ஆரம்பத்தில் அஷ்ரஃப் சொன்னாலும் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
மறைந்த தலைவரின் புதல்வர் என்பதைத் தவிர வேறெந்த அரசியல் அடையாளத்தையும் அமான் வளர்த்துக் கொண்டதாக தெரியவில்லை. தந்தையின் மறைவுக்குப் பின்னர் ஊடகங்களுக்கோ சமூகத்திற்கோ முதன்முதலாக இப்போதுதான் அவர் எதையாவது சொல்லியும் இருக்கின்றார். தனது தந்தையின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக குரல் கொடுக்காத அவர், தனது தந்தையின் பாதையிலன்றி வேறு வழியில் மு.கா. பயணிப்பதை கண்டுகொள்ளாத அவர், தலைவரின் மரணத்திற்குப் பின்னர் இந்த சமூகத்திற்கு ஏற்பட்ட அவலங்களின் போது வாயையே திறக்காத அஷ்ரஃபின் மகன் இப்போது மட்டும் வாயைத் திறந்திருப்பது ஆச்சரியமளிக்கின்றது. பிற்காலத்தில் அஷ்ரஃப் ஐக்கிய இலங்கை என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருந்தார் என்றும் அதனாலேயே நுஆ. கட்சியையும் ஆரம்பித்தார் என்றும் இவர் போன்றவர்கள் கூறுவார்களாயின், மு.கா. என்பது பிரிவினைவாத கட்சியா என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும்.
அஷ்ரஃப் மரணித்து 15 வருடங்களுக்குப் பின்னர் அமானுக்கு இந்த அரசியல் அக்கறை ஏற்பட்டிருப்பதற்கு காரணம் என்னவென்று தேடிப் பார்த்த போது சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அதாவது, பஷீர் சேகுதாவூதின் உரை சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளது. இச் செய்திகளில் தனி முஸ்லிம் மாகாணம் (separate Muslim province) என்பது தனி நாடு (separate state) என வெளியாகி இருக்கின்றது. இதனைப் பார்த்த அமான் விளக்கமில்லா குழப்பத்திற்கு ஆளாகியே கடிதமொன்றை எழுதியிருக்கின்றார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று கூறுகின்றது. எவ்வாறிருப்பினும், இச் செய்தி வெளியாகிய உடனேயே மு.கா. உயர் மட்டத்தினரை ஊடக உயரதிகாரிகள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் தொடர்பு கொண்டு இது தொடர்பான தமது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுள்ளன. இச் செய்தி மொழி பெயர்ப்பில் தவறு ஏற்பட்டிருப்பதாக காரணம் ஒன்று கூறப்படுகின்ற போதிலும், அதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகமும் இருக்கவே செய்கின்றது.
தனி முஸ்லிம் மாகாணம் என்ற கோரிக்கை நெடுங்காலமாக பேசப்பட்டு வருகின்றது. முஸ்லிம் காங்கிரஸோ, அரசாங்கமோ அல்லது தமிழர்களோ, இலங்கை முஸ்லிம்கள் தனிநாடு கோருவதாக சித்திரிக்கவில்லை. அவர்களுக்கு விஷயம் விளங்குகின்றது. ஆனால், வேறு மொழி பத்திரிகையில் வெளியான செய்தி உண்மையா இல்லையா என்பதை, ஒரு தமிழ் ஊடகத்தைப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளாமல் அல்லது சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டறியாமல் பஷீருக்கு கடிதம் எழுதப்பட்டிருக்குமாயின், அது பக்குவமடையா தன்மைக்கு மிக நெருக்கமானதாகும். இதை வைத்துக் கொண்டே சிங்கள ஊடகங்களும் இனவாதிகளும் அஷ்ரஃப் தனி மாகாணமே கேட்கவில்லை என்று கூறுவதற்கு தலைப்பட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
குழம்பும் புத்திசாலிகள்
இது இவ்வாறிருக்க, இன்னுமொரு பெயரளவு கட்சி ஒன்றின் தலைவர் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அஷ்ரஃப் இனவாதத்தை தூண்டி அரசியல் செய்தது போல ஹசன் அலியும் செய்ய முற்படுகின்றார் என்பது அவரது ஆதங்கமாக இருக்கின்றது. அஷ்ரஃபின் கோஷம் இக்காலத்திற்கு ஒவ்வாது என்று தெரிவித்துள்ள அவர், அவரை விட சிந்தனைவாதிகள், அறிவாளிகள், திறமையானவர்கள் நமது சமூகத்தில் இருக்கின்றனர். அவர்களை இனங்காண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் சிங்கள இனவாதிகள் அழித்தொழிப்புச் செய்தபோது, பள்ளிவாசல்கள் பயந்து நடுங்கிய போது அதற்கெதிராக கிளர்ந்தெழாத சில புத்திஜீவிகள் (?) மறைந்த தலைவரை இனவாத சிந்தனையுடையவர் என்று சொல்வது வினோதமாக உள்ளது. உண்மையில், அஷ்ரஃப் வானத்தில் இருந்து இறக்கப்பட்டவரோ, 100 வீதம் சரியான ஆளுமையோ அல்ல. அவரிலும் சில தவறுகளைக் காணலாம். ஆனால், இன்று வரைக்குமான உரிமை, அபிவிருத்தி அரசியலில் அவர் போல யாரும் ஜொலிக்கவில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. அதேபோல், அஷ்ரஃபை விட அறிவானவர்கள் இந்த சமூகத்தில் இருக்கின்றார்கள் என்பதும் உண்மையே. அவ்வாறானவர்கள் விட்ட தவறுதான் இன்று இச்சமூகத்தை வக்கற்ற சமூகமாக ஆக்கியிருக்கின்றது. முஸ்லிம் சமூகத்திற்குள் இருக்கின்ற புத்திஜீவிகளும், படித்தோரும், வைத்தியர்கள், சட்டத்தரணிகள் போன்ற தரப்பினரும் தமது சமூகக் கடமையை நிறைவேற்றாத காரணத்தினாலேயே முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இந்த கேடுகெட்ட நிலைக்கு சமூகத்தை ஆளாக்கியிருக்கின்றார்கள் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
இந்த சமூகத்தில் இருக்கின்ற அஷ்ரஃபை விட சிறந்தவர்கள் யாரையும் யாரும் தேடிப்பிடிக்க வேண்டியதில்லை. ஒரு சமூக சிந்தனையாளன் அழைப்பு வரும் வரைக்கும் காத்திருக்க மாட்டான். அவனுக்குள்ளிருக்கின்ற உணர்வு அவனை உந்தித் தள்ளும். ஆனால், அவ்வாறான உந்துதல்களை நமது சமூகத்தில் காண முடியவில்லை. அறிவாளிகள், புத்திஜீவிகள், படித்தோரில் பலர் சமூகத்திற்கு பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது நமக்கேன் பொல்லாப்பு என்று ஒதுங்கி இருப்பவர்களாகவும் ஏட்டுச் சுரக்காய்களாகவுமே இருக்கின்றார்கள். யார் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதுதான் நிதர்சனம்.
எது எவ்வாறிருப்பினும் வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு அதில் தமிழர்களுக்கான தீர்வு வழங்கப்படப் போகின்றது. அவர்களுக்கு பெரும் நிலப்பகுதி கொடுக்கப்படுமாயின் முஸ்லிம்களுக்கும் ஒரு ஆட்புல எல்லை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. இதில் சர்வதேசமும் அரசாங்கமும் மாத்திரமன்றி தமிழர்களும் மிகத் தெளிவாக இருக்கின்றனர். நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் உருவானால், தமிழர்களினுடைய ஆட்புலமும் நிலத்தொடர்பற்றதாகவே இருக்கும். இதை ஏற்றுக் கொள்வதிலேயே தயக்கங்கள் இருக்கலாம். மற்றபடி, முஸ்லிம்களின் அபிலாஷைகளும் நிவர்த்திக்கப்பட வேண்டுமென்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதய சுத்தியுடன் இருக்கின்றது.
ஆனால், மேற்சொன்னவாறு முஸ்லிம்களே தமக்கிடையில் கருத்து மோதல்களுக்கும் விளக்கமில்லா குழப்பங்களுக்கும் ஆளாகியிருக்கின்றனர். இன ஐக்கியத்தையும் உரிமைக் கோரிக்கையையும் சிலர் போட்டுக் குழப்பிக் கொள்கின்றனர். தனி முஸ்லிம் மாகாண நிர்வாகத்தை தனித்தியங்கும் ஒரு நாடாக திரிபுபடுத்திக் காட்டுவதற்கான முயற்சிகளுக்கு இவர்களது கருத்துக்கள் தூபமிடுகின்றன. முதலில் இக்கோரிக்கையை கீழ்மட்டம் தொடங்கி படித்த, மேல்மட்டம் வரை எல்லா முஸ்லிம்களும் ஐயமற விளங்கிக் கொள்ளுதல் அவசியமாகும்.
முன்கதை சுருக்கம்
நிலத்தொடர்பற்ற மாகாண அலகு பற்றி மறைந்த மு.கா. தலைவர் அஷ்ரஃப் 1980களின் நடுப்பகுதியில் இருந்து மேடைகளில் பேசிவந்தார். முஸ்லிம் சமூக சிந்தனையாளனும் அரசியல் அறிவாளியுமான எம்.ஐ.எம்.முஹிதீன் இதனது அவசியத்தை அக்காலத்தில் கருத்தியல் ரீதியாக வலியுறுத்தி இருந்தார். அரசியல் களத்தில் நேரடியாக களமாடிக் கொண்டிருந்த அஷ்ரஃப், 1988 இல் வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்ட பின்னர் இதனை மிகக் கடுமையாக வலியுறுத்தினார். இருப்பினும், அவரது மரணம், முஸ்லிம் கட்சிகளின் பிளவு, மு.கா.வின் போக்கு, வடகிழக்கு மாகாணம் 2007 இல் மீள இரு மாகாணங்களாக பிரிக்கப்பட்டமை போன்ற காரணங்களினால் இக் கோரிக்கை வலிமை இழந்து போனது எனலாம். புலிகள் தோற்கடிக்கப்பட்டமையும் கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் பதவி வகிக்கின்றமையும், தனி முஸ்லிம் மாகாணம் என்ற தாகத்தை சற்றே தணித்திருந்தன.
எனவே, கடைசிக் காலத்தில் அஷ்ரஃப் கோரிநின்ற முஸ்லிம் தனிஅலகைக் கூட அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, கரையோர மாவட்டம் என்ற கோரிக்கையை ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் மு.கா. பேசுபொருளாக தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இப்போது மீண்டும் இவ்விரு மாகாணங்களும் இணைக்கப்படப் போகின்றன. இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் வழங்கப்படுவது திண்ணமாகத் தெரிகின்றது. எனவேதான், தனி முஸ்லிம் மாகாண கோரிக்கை மீள உயிர்ப்படைந்திருக்கின்றது எனலாம். இது தொடர்பாக பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால், இரு பிரதான முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் தனி மாகாண அலகு பற்றி இந்த நிமிடம் வரைக்கும் வாய் திறக்கவே இல்லை. ரவூப் ஹக்கீமுக்கு தனி மாகாணத்தை கோருவதில் பெரிதாக உடன்பாடு இல்லை. கண்டியில் தனக்கு வாக்களிக்கின்ற மக்கள் தன்னை ஒரு பிரிவினைவாதியாக நோக்குவார்கள் என்பது அவரது உள்மன பயம் என்கின்றனர் அவரது கட்சிக்காரர்கள். அதேபோல் ரிஷாத் பதியுதீனுக்கு கிழக்கில் ஒரு முஸ்லிம் மாகாணத்தை பெற்றுக் கொடுப்பதால் பெரிய நன்மைகள் எதுவும் இல்லை. கிழக்கில் வாழ்கின்ற மக்களுக்கு தனி மாகாணத்தை பெற்றுக் கொடுத்துவிட்டால், அவர்களது பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிட்டால் நமது பிழைப்பு என்னவாகும் என்ற பயம் பொதுவாக எல்லோருக்கும் இருக்கின்றது. எனவே இது குறித்து கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் பொதுமக்களுமே சிந்தித்து, அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டியுள்ளது.
சிந்திக்க வேண்டியது
முஸ்லிம் மக்கள் பின்வரும் விடயங்களை சிந்திக்குமாறு வேண்டுகின்றேன். அதாவது, தற்போதிருக்கின்ற கிழக்கு மாகாணம் என்பது இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்த இனப்பரம்பலைக் கொண்ட ஒரு ஆட்புல எல்லை அல்ல. தற்போது கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக பதவி வகித்தாலும் இது உண்மையில் முஸ்லிம்களின் மாகாணமும் அல்ல, முதலமைச்சர் பதவி முஸ்லிம்களுக்கு நிரந்தரமானதல்ல. ஆனாலும், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாமல் இருந்தால் தனி மாகாணம் பற்றி யோசிப்பதை சற்று தாமதப்படுத்த முடியும். அவை இணைக்கப்படுகின்றபோது சிந்திக்காமல் இருப்பது நல்லதல்ல.
உண்மையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஏன் இணைக்க வேண்டும் என்ற கேள்வி 99 வீதமான முஸ்லிம் மக்களுக்கு இருக்கின்றது. இவ்விரு மாகாணங்களும் இணைக்கப்பட்டால் தமிழர்களுக்கான தீர்வுத்திட்டத்தில் உள்ளடக்கப்படும் நிலப்பகுதியின் விசாலம் அதிகமாக இருக்கும். இதுபோன்ற பல நன்மைகள் நமது சகோதர இனத்திற்கு கிடைக்கும். அவ்வாறே வடக்கை முதன்மையாகக் கொண்ட ஒரு ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நன்மையோ திருப்தியோ கிடைக்குமென்றால் அது நல்லதே. ஆனால் அதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. இன்றிருக்கின்ற சம்பந்தன் போல ஒரு நல்ல தலைமையையும் முஸ்லிம்களை அரவணைக்கின்ற தமிழ் அரசியல்வாதிகளை, எதிர்காலத்தில் இணைந்த வடகிழக்கு கொண்டிருக்குமா என்பது யாருக்கும் தெரியாது. அவ்வாறு கொண்டிருக்காவிடின், தமிழ் -–முஸ்லிம் முரண்பாடு உருவாக இடமுண்டு.
நாம் என்றென்றைக்கும் நேசிக்கும் சகோதர தமிழர்களுக்கு நிச்சயமாக நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும். அது அவர்களது இழப்புக்கள் எல்லாவற்றையும் ஈடுசெய்வதாக இருக்க வேண்டும். அவர்கள் சிந்திய கண்ணீருக்கும் வியர்வைக்கும் பிரதியுபகாரமாக அமைய வேண்டும். இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. இதில் முரண்படுகின்றவர்கள் மனிதனாக வாழ்வதற்கு லாயக்கற்றவர்களாகவே கருதப்பட வேண்டும். ஆனால், இங்கிருக்கின்ற பிரச்சினை என்னவென்றால், வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து அதில் ஒரு பகுதியை உள்ளடக்கிய தீர்வுத்திட்டம் ஒன்று தமிழர்களுக்கு வழங்கப்படுமாக இருந்தால், சமகாலத்தில் முஸ்லிம்களின் ஆட்புலமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர்களது அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதன் மூலம் இத் தீர்வு, அறுதியும் இறுதியுமான தீர்வாக அமைக்க வேண்டும். இந்த அடிப்படையிலேயே தனி முஸ்லிம் மாகாணக் கோரிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது. தவிர, தமிழர்களுக்கு கொடுக்கின்றார்கள் என்றால் எமக்கும் தரவேண்டும் என்ற பொறாமையின் வெளிப்பாடோ வீம்புத் தனமான கோரிக்கையோ அல்ல.
அந்த வகையில், முஸ்லிம் மாகாண அலகு தொடர்பாக அழுத்தங்களை கொடுப்போரின் கருத்தின்படி, இரண்டு கருத்திட்டங்கள் இருக்கின்றன. முதலாவது, இணைந்த வடகிழக்கு மாகாணத்தில் நிலத் தொடர்பற்ற முஸ்லிம் தனி மகாணமாகும். இது பொத்துவில் தொடக்கம் திருகோணமலை வரையும் அதேபோன்று மன்னாரிலும் உள்ள முஸ்லிம்களை முற்றுமுழுதாக கொண்ட உள்ளூராட்சி சபைகளை உள்ளடக்கியதாகவும் இருக்கும். மன்னார், முசலியில் வாழ்கின்ற முஸ்லிம்கள் சுயமாக விரும்பினால் மாத்திரமே இதில் இணைந்து கொள்ளலாம். இரண்டாவது, தனி முஸ்லிம் அலகு ஆகும். மன்னார் மக்கள் முஸ்லிம் மாகாணத்திற்குள் இணைய விருப்பமில்லாத சந்தர்ப்பத்தில் உருவாகும் ஆட்புல எல்லையானது முஸ்லிம் தனி அலகாக இருக்கும். இதில் எந்த வடிவ தீர்வு கிடைத்தாலும் அது நிலத் தொடர்பற்ற ஆட்சிப் பரப்பாகவே இருக்கும். அதாவது, இந்தியாவின் பாண்டிச்சேரி நிர்வாக மாதிரியை ஒத்ததாக இது அமையும்.
ஒரு மாகாணம் பற்றிய வரையறைகள் இதைவிடவும் ஆழ அகலமானதாகும். அது பற்றிய கோரிக்கை முன்வைக்க முன்னதாக மக்களை தெளிவுபடுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. அரசாங்கம் தருகின்றதோ இல்லையோ, தமிழர்கள் விடுகின்றார்களோ இல்லையோ, ஆனால் இணைந்த வடகிழக்கில் உருவாகும் தமிழ் மாகாணத்திற்குள் எக்காலத்திலும் வாழ்வது பிரச்சினையில்லையா அல்லது முஸ்லிம் மாகாணம் அவசியமா என்ற முடிவுக்கு வர வேண்டும். தமிழ் மாநிலத்தில் தமிழ் சகோதரர்களுடன் எவ்வித பிணக்குமின்றி, முரண்பாடுகள் ஏற்படாமல் வாழ முடியும்.
இவ்விடயத்தை தமிழர்கள் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. என்னடா நமக்கு வழங்கும் தீர்வுப் பொதியில் முஸ்லிம்கள் பங்குகேட்கின்றார்களே என்று எண்ணவும் கூடாது. இது ஒட்டுமொத்த கிழக்கு முஸ்லிம்களினதும் வினயமான வேண்டுகோளாகும். இந்த நாட்டில் தமிழர்களின் இனப் பிரச்சினையே முதன்முதலாக தீர்த்து வைக்கப்பட வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் இல்லை. ஆனபோதும், இனப் பிரச்சினை தீர்வு என்பது பிரச்சினைகளை கொண்டுள்ள எல்லா இனங்களுக்குமான தீர்வாகவே அமைய வேண்டும். இல்லாவிடின் இன்றில்லாவிட்டால் என்றாவது ஒருநாள், பிட்டும் தேங்காய்ப் பூவும் போல் இரண்டறக் கலந்து வாழ்கின்ற சமூகங்கள் நிர்வாக, அதிகார, ஆட்புல, உரிமைசார் வேற்றுமைகளை சந்திக்க நேரிடும். இது பிரளயமாக வெடிக்கும் அபாயத்தை தவிர்க்க வேண்டுமாயின் முஸ்லிம்களது நியாயமான கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கப்பட வேண்டியது வரலாற்றின் நியதியாகும்.
தற்போதிருக்கும் மேல் மாகாணம் போன்று, இணைந்த வடகிழக்கில் உருவாகும் உத்தேச தமிழ் மாகாணம் போன்றே, முஸ்லிம் மாகாணமோ தனியலகோ அமையும். இவையிரண்டும் தனிநாடுகளாக செயற்படாது. வேறு வேறு ஜனாதிபதிகள் ஆளப் போவதில்லை. பிரிவினைவாதம் மற்றும் இன ஐக்கியம் பற்றி அதிபுத்திசாலிகள் கவலைப்பட ஒன்றுமில்லை. ஏனெனில், தமிழ், முஸ்லிம் பிராந்திய எல்லைகளுக்கு இடையில் மதில் கட்டப்பட மாட்டாது, மூவின மக்களுக்கு இடையிலும் இருக்கின்ற ஐக்கியம் பாதிக்கப்படவும் இடமில்லை.
முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் கிடைக்கின்றதோ இல்லையோ. ஆனால், கிழக்கில் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும், படித்தவர்களும், அதிலுள்ள நியாயங்களை விளங்கிக் கொண்டு காத்திரமான கருத்துக்களை வெளியிட வேண்டும். இல்லை பரவாயில்லை இது போதுமென நினைத்து காலத்தை கடத்திவிட்டு, பிறகொருக்கால் தமிழர்களுடன் சண்டை பிடிக்கக் கூடாது.
எல்லாம் கைமீறிப் போன பிற்பாடு, படுக்கையை நனைத்த பராயமடையாச் சிறுவன் விடிந்த பிறகு வீட்டாருக்கு விளக்கமளிப்பது போல வியாக்கியானங்கள் கூற ஆட்கள் தேவையில்லை.
எ.எல்.நிப்ராஸ்
(வீரகேசரி 27/02/16)