சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் முற்றுகையில் சிக்கியுள்ள நகரத்தினை சேர்ந்த பொதுமக்களிற்கு ஐக்கியநாடுகள் முதல்தடவையாக விமானங்கள் மூலம் மனிதாபிமான உதவிகளை போடுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
உலக உணவு திட்டத்தின் மூலம் வீசப்பட்ட மனிதாபிமான பொருட்கள் நிலத்தில் விழுந்து சேதமடைந்து உள்ளதாகவும், இலக்கு தவறியுள்ளதாகவும் அந்த அமைப்பின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். மனிதாபிமான பொருட்களை வீசும் நடவடிக்கைகள் தொழில்நுட்ப நெருக்கடிகளை எதிர்கொண்டன. நாங்கள் மீண்டும் முயற்சிகளை மேற்கொள்வோம், மிகவும் உயரத்திலிருந்து வீசுவது என்பது சவாலான விடயம் என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
டெய்ர் அல்சூர் என்ற நகரத்தின் அரசகட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது 21 தொன் உணவுப்பொதிகளை விமானங்கள் வீசியதாக ஐ.நாவின் நிவாரண விவகாரங்களிற்கான தலைவர் ஸ்டீபன் ஓ பிரையன் பாதுகாப்பு சபைக்கு தெரிவித்துள்ளார்.குறிப்பிட்ட நகரத்தில் 200,000 பொது மக்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.