டெஸ்ட்டில் நம்பர் ஓன் இடத்தை பிடித்தது ஆஸ்திரேலியா!

 

7847df78-a289-4ba9-80fd-b245c93a6e3f_S_secvpf

ஆஸ்திரேலியா– நியூசிலாந்து அணிகள் மோதிய 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்தது.

நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 370 ரன்னும், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 505 ரன்னும் எடுத்தன. 135 ரன்கள் பின் தங்கிய நிலையில் நியூசிலாந்து 2–வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணி 335 ரன் எடுத்து ‘ஆல்அவுட்’ ஆனது.

இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 201 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4–வது நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்புக்கு 71 ரன் எடுத்து இருந்தது.

இன்று 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 54 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜோபர்ன்ஸ் 65 ரன்னும், கேப்டன் சுமித் 53 ரன்னும் எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 2–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. வெல்லிங்டனில் நடந்த முதல் டெஸ்டில் அந்த அணி இன்னிங்ஸ் மற்றும் 52 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

ஒருநாள் தொடரை நியூசிலாந்து 2–1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இந்த டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியா தரவரிசையில் ‘நம்பர் ஓன்’ இடத்தை பிடித்தது.

நியூசிலாந்து அணியின் கேப்டன் மெக்குல்லம் இந்த டெஸ்டோடு சர்வதேச போட்டியில் இருந்து விடை பெற்றார். சொந்த மண்ணில் நடந்த போட்டியோடு அவர் ஓய்வு பெற்றார். தனது கடைசி டெஸ்டில் அவர் 54 பந்தில் சதம் அடித்து ரிச்சர்ட்ஸ், மிஸ்பா சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்தார்.

34 வயதான மெக்குல்லம் 101 டெஸ்டில் 6453 ரன்னும், 260 ஒருநாள் போட்டியில் 6083 ரன்னும் எடுத்தார். சிறந்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்களில் ஒருவராக அவர் ஜொலித்தார். 20 ஓவர் உலக கோப்பையில் அவரது அதிரடி ஆட்டத்தை ரசிகர்கள் பார்க்க இயலாமல் போவது மிகுந்த ஏமாற்றமே.

ஐ.பி.எல். போட்டியில் அவர் விளையாடுவார். புதிய அணியான குஜராத் அணியில் விளையாடுகிறார்.