ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்
அரசியல் அமைப்பு சட்ட மாற்றம். பாகம் -05 – 1970ம் ஆண்டு பொதுத்தேர்தல்
பொதுத் தேர்தல் 1970ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலை முன்னிட்டு சிறீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி மற்று கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன தேர்தல் ஒப்பந்தம் செய்து கூட்டாக தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டார்கள்.
அத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் “நீங்கள் தெரிவு செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் அரசியல் நிர்ணய சபையாகவும் செயற்பட்டு புதிய யாப்பை வரைவதற்கான ஆணைய தருமாறு கோருகிறோம்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேர்தலில் சுதந்திரக்கட்சிக்கு 91 ஆசனங்களும் சமசமாஜ கட்சிக்கு 19 ஆசனங்களும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 ஆசனங்களுமாக 151 மக்கள் பிரதி நிதிகளை கொண்ட சபையில் இம்மூன்று கட்சிகளையும் சேர்ந்த ஐக்கிய முன்னணி (United Front) 116 ஆசனங்களையும் பெற்று 2/3 பங்கிற்கு மேற்பட்ட பலத்தினை பெற்றது. ஐ.தே.கட்சி 17 ஆசனங்களையும், இலங்கைத்தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும், தமிழ் காங்கிரஸ் மூன்று ஆசனங்களையும் சுயேட்சை குழு இரண்டு ஆசனங்களையும் பெற்றிருந்தன.
வாக்குகளின் கணக்குகளை பொறுத்தவரை அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 4,949,616 அகும். இதில் 2/3 பெரும்பன்மைக்கு மேல் (116) ஆனங்களை பெற்ற ஐக்கிய தேசிய முன்னணி மொத்தமாக பெற்ற வாக்குகள் 2,415,302ஆகும். இது மொத்தவாக்கின் 48.7 விகிதமாகும். தொகுதி முறைத் தேர்தலில் 50 விகிதத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்று 76.8 விகிதத்திற்கு மேல் ஆசனங்கள் பெறப்பட்ட நிகழ்வை இதேர்தல் காட்டுகின்றது. இது எவ்வளவு நீதி அற்றதும் ஜனநாயக விரோதமானதும் என்பது கவனிக்கப்பட வேண்டும். அதே நேரம் வெறும் 17 ஆசனங்களை மட்டும் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி 1,876,956 வாக்குகளை பெற்றிருந்தது. இது மொத்த வாக்குகளில் 37.91 விகிதமாகும்; என்பதும் குறிப்பிடத்தக்கது.அதே நேரம் 91 ஆசனங்களை பெற்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சி தனியாக பெற்ற வாக்குகள் 1,839,979. இது 36.86 விகிதமாகும். அதாவது 91 ஆசனங்களைப் பெற்ற சுதந்திரக் கட்சியை விட 17 ஆசங்களை பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி கூடுதலான வாக்குகளைப் பெற்றிருந்தது. இதுதான் தொகுதி முறைத்தேர்தல். இத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரதமராக தெரிவு செய்யப்பட்ட சிறீமாவோ பண்டாரநாயக்கா, இலங்கை மக்களின் அரசியல் நிர்ணய சபையை ( constituent assembly of the people of sri lanka) அமைப்பதற்காக 1970ம் ஆண்டு ஜூலை மாதம் 19ம் திகதி கொழும்பு நவரங்ககல மண்டபத்தில் சகல பிரதிநிதிகள் சபை (பாராளுமன்ற) அங்கத்தவர்களுக்கும் ஒரு கூட்டத்திற்காக அழைப்பு விடுத்தார்.
அக்கூட்டத்தில் அரசியல் நிர்ணய சபை அமைப்பதற்கான தீர்மானம் (Resolution) முன்வைக்கப்பட்டது.அத்தீர்மானத்தின் சுருக்கம் 1970ம் ஆண்டு மேமதம் 27ம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் மக்கள் பிரதி நிதித்துவ சபை (பாராளுமன்றம்) அங்கத்தவர்களாகிய நாங்கள் இலங்கையை இறைமையுள்ள சுதந்திர குடியரசாக பிரகடனப் படுத்துவதற்கான அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக எங்களை நாங்களே “இலங்கை மக்களின் அரசியல் நிர்ணய சபையாக இத்தால் பிரகடணப்படுத்த தீர்மானிக்கின்றோம்” என்பதாகும். (நீண்ட அப்பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள் மாத்திரமே இங்கு தரப்பட்டுள்ளன;என்பதை கவனத்தில் கொள்க) இந்த சபை ஸ்டாலின் திலகரத்ன பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் தலைமையிலும் அவர் பிரசன்னமாகாத போது இப்றாஹிம் ஆதம் அப்துல் காதர் ( பா. உ) தலைமையிலும் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தந்தை செல்வநாயகம்………..
இந்த அரசியல் நிர்ணய சபை அமைப்பிற்கெதிராக தந்தை செல்வநாயகம் ஒரு அறிக்கையினை வெளியிட்டார். அதில் கடந்த தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட ஆணயை ஒரு குறிப்பிட்ட விடயத்திற்கு மக்கள் வழங்கிய ஆணையாக (Plebiscite on an issue) கொள்ள முடியாது. ஏனெனில் அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்காக மட்டும் மக்களிடம் வாக்கு கோரப்படவில்லை. எனவே அரசியல் நிர்ணய சபை அமைத்து புதிய யாப்பை வரைந்து அங்கீகரிக்க மக்கள் ஆணை தந்திருக்கின்றார்கள் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு சட்ட விரோதமானதும் அரசியல் அமைப்பிற்கு முரணானதுமாகும்; என்று தெரிவித்திருந்தார்.
1970ம் ஆண்டு ஜூலை மாதம் 19ம் திகதி நவரங்ககல மண்டத்தில் அரசியல் நிர்ணய சபை பிரகடன தீர்மானத்திற்காக கூட்டப்பட்ட கூட்டத்திற்கு 1700 பர்வையாளர்களும் (invitees)அழைக்கப்பட்டிருந்தார்கள்.இக்கூட்டத்திற்கு தலைவராக திரு ஸ்ட்டாலின் திலகரட்ன அவர்களை பிரதமர் முன்மொழிந்த பொழுது எதிர்க்கட்சித் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அதனை வழிமொழிந்தார் என்பதும் குறிபிடத்தக்கது.
அக்கூட்டத்தில் பிரதமர் பேசும் பொழுது அக்கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை இலங்கை மக்களின் பெயராலேயே அழைத்திருந்ததாகவும் அக்கூட்டத்தை குறித்த மண்டபத்தில் கூட்டியமைக்கான காரணம் இது பிரதி நிதிகள் சபை (பாராளுமன்ற) கூட்டமல்ல. மாறாக பிரதிந்திகள் சபையின் அங்கத்தவர்களின்(பாராளுமன்ற அங்கத்தவ்ர்களின்) கூட்டம்( Not a meeting of the House of Representatives but a meeting of the members of the House of Representative) என்பதை வெளிப்படுத்துவதற்காகும்; என்றார்.அதே நேரம் நாங்கள் இந்த நிலைப்பட்டை எடுத்தமைக்கான காரணம், இந்த அரசியல் நிர்ணய சபையோ அல்லது அதனால் வரையப்படுகின்ற புதிய யாப்போ அதற்கான அதிகாரத்தை பிரித்தானிய முடியாட்சியில் இருந்தோ அல்லது அவர்கள் எங்களுக்கு வழங்கிய அரசியல் அமைப்பு சட்டத்திலிருந்தோ பெறவில்லை. மாறாக இலங்கை மக்களிடமிருந்து பெறுகின்றது என்பதனை வலியுறுத்துவதற்காகும்; என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பிரதமர் மேலும் கூறுகையில் “கடந்த ஆட்சியில் தெரிவுக் குழு அமைப்பதற்கான பிரேரணையினை நிராகரித்து அதில் நாம் பங்கு பற்ற மறுத்தோம். இப்பொழுது தெளிவாகியிருக்கின்றது. அன்று நாம் மக்களின் எண்ணங்களையும் அவர்களின் உணர்வுகளையுமே பிரதிபலித்தோம் என்பது. உலக மகா யுத்தத்தின் பின்னர் சுதந்திரமடைந்த நாடுகள் செய்தது போல் இலங்கை மக்களும் அரசியல் நிர்ணய சபையை அமைத்து தங்களுக்கு தாங்களே அரசியல் அமைப்பு சட்டத்தினை வழங்குவதற்கு முடிவு செய்திருக்கின்றாரகள்; என்றும் தெரிவித்தார்.
இங்கு கவனிக்க வேண்டியது என்ன வென்றால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் நிர்ணய சபையினை அமைப்பது சம்ப்ந்தமாக ஒரு சில வரிகளைச் சேர்த்து விட்டு 50 சதவிகித வாக்குகளைக் கூட பெறாமல் தொகுதி முறை தேர்தலின் விந்தையினால் 2/3 பங்கு ஆசனங்களை பெற்றதனால், “நாட்டு மக்களின் விருப்பம் அரசியல் நிர்ணய சபையினூடாக புதிய அரசியல் யாப்பை வரைவதுதான்” என கொடுக்கப்படுகின்ற வியாக்கியானமாகும்.
குறித்த பிரேரணை தொடர்பாக அன்றைய எதிர்க்கட்சித்தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன பேசுகையில் ” 50 விகிதத்திற்கும் குறைவான மக்களே உங்களுக்கு வாக்களித்திருக்கின்றார்கள் எனவே புதிய யாப்பை வரைவதற்கோ இருக்கின்ற யாப்பை மாற்றுவதற்கோ மக்கள் உங்களுக்கு ஆணையை வழங்கியிருக்கின்றார்கள் என்று கூற முடியாது. மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியிருகின்ற அதிகாரம், இருக்கின்ற பாராளுமன்ற சட்டதிட்ட வரையரைக்குள் செயற்படுத்துவதற்கே. ஏனெனில் சில சரத்துக்களை மாற்றவே முடியாது (சரத்து 29(2) ) என்ற வரையரைக்குள் செயற்படுகின்ற இந்த பாராளுமன்றத்திற்கே தேர்தல் நடைபெற்றது” எனக் கூறினார்.
இவ்வாறு கூறிவிட்டு பின்வருமாறும் கூறினார். “இந்த பாராளுமன்றம் தனது அதிகாரத்தின் “மூலமான” அடிப்படை சட்டத்தையே (அரசியல் அமைப்புச் சட்டம்) மாற்ற சக்தியில்லாமல் இருக்கின்றது. அவ்வாறான பாராளுமன்றத்தில் வெற்றியடைந்தவர்களும் (ஆளும் கட்சி) தோல்வி அடைந்தவர்களும் (எதிர்க் கட்சி) ஒரு பொது நோக்கத்திற்காக, ஒரு புதிய அடிப்படை சட்டத்தை (அரசியல் அமைப்பு சட்டம்) ஒரு சட்டப் புரட்சி (legal) revolution )மூலம் உருவாக்க உடன்படுவார்களானால் அவ்வாறு செய்ய முடியாது என்பதற்கு சட்டம் எங்கும் கிடையாது. நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு உருவாக்குகின்ற சட்டம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுமானால் அது இத்தலைமுறையின் நம்பிக்கை, விருப்பம் மற்றும் அபிலாசைகளின் முழுமையான வெளிப்பாடாகும் “என்று தெரிவித்தார்.
திரு ஜயவர்தனவின் பேச்சில் அவதானிக்கப்பட வேண்டியது என்ன வென்றால்?
01) 50 விகித வாக்குகள் கூட ஆளும் கட்சிக்கு கிடைக்கவில்லை. எனவே மக்கள் புதிய யாப்பிற்கு ஆணை வழங்கியதாக கூறமுடியாது.
02) பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற அரசியலமைப்புச் சட்டவரையரைக்குள் தான் செயற்பட வேண்டும்.
03) தனக்கு அதிகாரம் வழங்குகின்ற அரசியல் யாப்பை தன்னாலேயே மாற்ற முடியாத ஒரு பாராளுமன்றத்திற்குதான் தேர்தல் நடை பெற்றது.
04) ஆனால் வெற்றி பெற்றவர்களும் தோல்வி அடைந்தவர்களும் உடன்பட்டால் பாராளுமன்றம் அரசியல் அமைப்பு சட்டத்தை முழுமையாக மாற்ற சக்தியற்று இருக்கின்ற நிலையில் ஒரு சட்ட புரட்சியின் மூலம் அதனை செய்யலாம்.
05) அவ்வாறு சட்ட புரட்சி செய்தால், ” அவ்வாறு செய்ய முடியாது”, என்று எந்த சட்டத்திலும் இல்லை.
06) புதிய யாப்பை மக்கள் ஏற்றுக்கொண்டால் அதுவே இத்தலைமுறையின் எதிர்பார்ப்பாகவும் அபிலாசையாகவும் மாறும். ஆகிய ஆறு முக்கிய விடயங்களை குறிப்பிட்டிருந்தார் .
இவற்றில் மிகவும் முக்கியமானது ஐந்தாவது விடயமாகும்.”புரட்சி செய்ய முடியாது என்று எந்த சட்டத்திலும் இல்லை ” என்று வாதிடுவதன் மூலம் சட்ட விரோதமாக இருந்தாலும் அதனை செய்யுங்கள் என்கின்றார். உலக நடைமுறை, சட்டத்திற்கு முரணாக செய்கின்ற விடயங்கள் சட்ட விரோதமானது என்பதாகும். சட்ட விரோதமானவற்ற செய்யுங்கள் என்று எந்த சட்டத்திலும் கூறுவதில்லை. சட்டவிரோதமாக செய்கின்ற விடயங்கள் புரட்சியாக இருக்கலாம். புரட்சி செய்யக் கூடாது என்று எந்த சட்டத்திலும் கூறப்படுவதில்லை. ஏனெனில் அது சட்டபூர்வமாக இருந்தால் அதற்கு “புரட்சி ” என்று பெயர் வராது.
ஒரு நாட்டில் மக்கள் அல்லது குழுவினர் புரட்சி செய்கின்றார்கள் என்றால் அப்புரட்சி வெற்றி பெற்றால் அது சட்ட பூர்வம். அது தோல்வியடைந்தால் சட்ட விரோதம், சீனப்புரட்சி, ரஷ்ய புரட்சி,கியூபா புரட்சி போன்றவை வெற்றிபெற்றன. அவை சட்டபூர்வமாகின. இன்னும் பல நாடுகளில் அவ்வாறான புரட்சிகள் தோல்வியடைந்து சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கின்றார்கள். அது முடிவைப் பொறுத்திருக்கின்றது. அதனால்தான் திரு ஜயவர்த்தன அவர்கள் “மக்கள் ஏற்றுக்கொண்டால்” என்ற வார்த்தைகளை பாவித்திருந்தார்.
அரசியல் நிர்ணய சபை அரசியல் அமைப்பிற்கு முரணாக இருந்தும் அதற்கு ஜே.ஆர் அவர்கள் உடன்பட்டதற்கான காரணம் நாட்டை குடியரசாக பிரகடனப்படுத்துவதில் ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சிகளுக்கு உடன்பாடு இருந்தது என்பதனாலாகும்.
தமிழ் கட்சிகளுக்கும் நாட்டை குடியரசாக பிரகடனப்படுத்துவதில் ஆட்சேபனை இருக்கவில்லை. ஆனால் புதிய யாப்பின் உள்ளடக்கத்தில் பல பிரச்சனைகள் இருந்தன. உதாரணமாக சகல சட்டங்களும் சிங்களத்தில் இருக்க வேண்டும். அவற்றின் மொழி பெயர்ப்பு தமிழில் இருக்க வேண்டும் என்று பிரேரிக்கப்பட்ட போது , தந்தை செல்வநாயகம் சகல சட்டங்களும் சிங்களத்திலும், தமிழிலும் இருக்க வேண்டும் என முன்வைத்த திருத்தம் நிராகரிக்கப்பட்டது.
இந்த வரலாறு ஏன் இங்கு முன் வைக்கப்படுகின்றது என்றால்? தேர்தல் திருத்ததினூடாக 50 விகிதத்திற்கு குறைவான வாக்குகள் பெற்று 50 விகிதத்திற்கு அதிகமன ஆசனங்களை பெறுகின்ற ஓர் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டால் தனி சிங்கள மக்களின் வாக்குகளை மட்டும் பெற்று இந்த நட்டு சிறுபான்மைகளின் தலைவிதியை மாற்ற முடியும்; என்பதனை மனதில் கொண்டு சிறுபன்மைகள் இந்த விடயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துவதற்காக. ஏனெனில் தேர்தல் சீர்திருந்த விடயத்தில் சிறுபன்மைகளுக்கு மத்தியில் பரவலாக காணப்படுகின்ற எண்ணப்பாடு தங்களுடைய பிரதேசத்திற்கு ஒரு ஆசனத்தினை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்வது என்பதுதான்.
ஆனால் அதனை உறுதிப்படுத்த முயற்சிக்கின்ற அதேவேளை நாங்கள் இரண்டு விடயத்தில் தெளிவாக இருக வேண்டும்.ஒன்று எங்களுடைய தேசிய விகிதாசாரத்திற்கேற்ப ஆசனங்களை பெற்றுக்கொள்வதை உறுதி செய்வது.இரண்டாவது 50 விகிதத்திற்கு குறைவான வாக்குகளை பெற்று 50 விகிதத்திற்கு அதிகமான ஆசனங்களை பெறுகின்ற ஜனநாயக விரோத தேர்தல் முறையை ஏற்படுத்தமல் தடுப்பது ஆகும்.
ஆறாம் பாகம் தொடரும்……..