தீர்க்க முடியாமல் நீண்டகாலமாக இருந்துவருகின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வினை, நல்லாட்சி அரசாங்கத்தினால் சிறுபான்மை மக்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படுவதன் மூலம் தீர்த்துவைப்பதற்கான முன்னெடுப்புக்கள் காணப்படுகின்றது.
ஆங்கிலேயர்கள் இந்நாட்டுக்கு சுதந்திரம் வழங்கியபோது அனைத்து அதிகாரங்களையும் சிங்கள பெரும்பான்மை ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்ததனால், இங்கு வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சமூகங்கள் உரிமைகள் இழந்தவர்களாகவும், பெரும்பான்மை ஆட்சியாளர்கள் சிறுபான்மயினர்களை அடக்கி ஆழ முட்பட்டதாலுமே இனப்பிரச்சினை உருவானது.
இந்நாட்டில் தமிழர்கள் மட்டுமல்லாது முஸ்லிம்களும் உரிமை இழந்த அடிமைச் சமூகமாகவே காணப்பட்டனர். அன்று முஸ்லிம் மக்களுக்கு முற்போக்கான அரசியல் தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால், வடகிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழர்களுடன் சார்ந்தும், வடகிழக்குக்கு வெளியே வாழ்ந்த முஸ்லிம்கள் சிங்கள அரசியல் கட்சிகளுடன் சார்ந்திருந்ததுடன், அன்றைய முஸ்லிம் தலைவர்கள் சலுகைகளுக்கு சோரம்போனவர்களாகவும் காணப்பட்டனர். இதனால் முஸ்லிம்களின் தனித்துவமும், அரசியல் அபிலாசைகளும் அன்று வெளிப்படுத்தப்படவில்லை.
தமிழ் மக்கள் தங்களது உரிமைகளை வேண்டி சாத்வீக போராட்டங்களை ஆரம்பகாலங்களில் மேற்கொண்டபொழுது அது இரும்புக்கரம்கொண்டு அடக்கப்பட்டதனால், வேறு வழியின்றி தனி நாடாக பிரிந்து செல்வதே ஒரே வளி என்ற கொள்கையில் ஆயுதப்போராட்டம் மூலம் தங்களது உரிமையினை அடைந்து கொள்ள முயற்சித்தனர்.
தமிழர்கள் சாத்வீகரீதியில் உரிமை போராட்டம் நடத்தியபோது தமிழர்களை ஏமாற்றும் நோக்கில், இந்நாட்டினை மாறி மாறி ஆட்சி செய்துவந்த ஐ.தே.கட்சியும், ஸ்ரீ.ல.சு.கட்சியும் தமிழர் தரப்பினருடன் பலவகையான ஒப்பந்தங்களை மேற்கொண்டனர்.
ஸ்ரீ.ல.சு. கட்சியினர் ஆட்சியில் தமிழ் தலைவர்களுடன் அதிகாரப் பரவலாக்கலுக்கான ஒப்பந்தத்தினை மேற்கொண்டால், அதனை தடுக்கும் நோக்கில் ஐ.தே.கட்சியினர் குழப்பியடிப்பதும், அதேபோல ஐ.தே.கட்சியினரின் அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களை ஸ்ரீ.ல.சு கட்சியினர் குழப்பியடிப்பதுவுமே தொடர்கதையாக இருந்தது.
சுருக்கமாக கூறினால் ஆளும் கட்சியில் இருப்பவர்கள் இராஜதந்திர நகர்வுக்காக, சர்வதேசத்தினை ஏமாற்றும் நோக்கில் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் வழங்க முற்படுவதுபோல பாசாங்கு செய்வதும், பின்பு எதிர்க்கட்சியினை தூண்டிவிட்டு குழப்பியடிப்பதும் இந்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற ஓர் அரசியல் ஏமாற்றாகும்.
இதுபோலவே ஆயுத போராட்டம் நடைபெற்றபோது ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் புதிதாக ஆட்சிக்கு வருபவர்கள், போராளிகளுடன் சமாதான ஒப்பந்தத்தினை மேற்கொள்வதாக காட்டிக்கொண்டு, சமாதான காலங்களில் இதயசுத்தியுடன் அதிகார பரவலாக்கல்களை வழங்குவதனை விடுத்து, காலத்தை இழுத்தடித்துக்கொண்டு போராட்ட இயக்கங்களை பிளவுபடுத்த முயற்சித்ததே வரலாறாகும்.
அந்தவகையில் 2002 இல் இன்று இருக்கின்ற இதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனோடு சமாதான ஒப்பந்தமொன்றினை மேற்கொண்டார். அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட எந்தவொரு விடயத்தினையும் நடைமுறைப்படுத்த ரணில் விக்ரமசிங்க அவர்கள் முயற்சிக்கவில்லை. மாறாக தன்னுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்ட புலிகள் இயக்கத்தினரை பிளவு படுத்தி பலமிளக்கச்செய்யும் தந்திரோபாயத்தினையே கையாண்டார்.
ரணில் விக்ரமசிங்கவின் இந்த அரசியல் நகர்வுகள் நிறைவேறும் வரையில் சமாதான காலம் நீண்டுகொண்டே சென்றது. இறுதியில் புலிகள் இயக்கத்திலிருந்து கிழக்கு தளபதி கருணா பிரிந்ததன்பின்பே ரணில் விக்ரமசிங்கவின் சூழ்ச்சியினை புலிகள் இயக்கத்தினர் உணர்ந்துகொண்டனர்.
சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாக இருந்தபோது திரு நீலன் திருச்செல்வம் அவர்களும், ஆட்சியின் பங்காளியாக இருந்த ஸ்ரீ.ல.மு.கா. தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களும் சிறுபான்மையினருக்கான அதிகாரங்களுடன் கூடிய தீர்வுப்பொதியினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.
விடுதலைப் புலிகளிகளினாலேயே நிராகரிக்கப்பட்டதும், குறைந்த அதிகாரங்களுடயதுமான அந்த தீர்வுபொதிக்கு, இதே ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐ.தே. கட்சியினர் பாரிய எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாது, அப்பொதியின் நகல் பிரதியினை பாராளுமன்றத்துக்குள் தீயிட்டு எரித்தனர்.
ஜே.ஆர்.ஜெயவர்தனா அவர்களும், மஹிந்த ராஜபக்ஸ அவர்களும் தங்களது ஆட்சிகாலத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்ற பலத்துடன் ஆட்சி செய்தும், குறைந்தளவு அதிகாரத்தையேனும் சிறுபான்மை சமூகங்களுக்கு வழங்க முற்படவில்லை. மாறாக தங்களுக்கு தேவையான அதிகாரத்தினை இன்னும் கூட்டிக்கொள்வதற்காகவே அதனை பிரயோகித்தனர்.
தொடரும்………………..
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது