மனித சமுதாயத்தில் தோன்றி மறைந்த எல்லோரும் மக்களால் நினைவு கூறப்படுவதில்லை. ஆனால் நமது பிள்ளைகளின் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து தியாக உணர்வோடும், அர்ப்பணிப்போடும் செயல்பட்டுவரும் கல்வியாளர்களை இந்த உலகம் சதாவும் நினைவு கூறிக்கொண்டே இருப்பதுடன் காலமெல்லாம் மக்களால் போற்றப்படுவார்கள் என அட்டாளைச்சேனை இக்றஃ வித்தியாலய அதிபராக கடந்த 13 வருடங்களாக கடமை புரிந்து ஓய்வு பெற்றுச் செல்லும் திருமதி அஷ்ஹர் அதிபரின் பிரியாவிடை நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்;றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்….
சமூகத்தில் எல்லோராலும் எப்போதும் மரியாதைக்குரியவர்களாக கல்வியாளர்கள் திகழ்கின்றனர். குறிப்பாக பாடசாலைகளின் அதிபர் பதவி என்பது மிக முக்கியமான பதவியாகும். அதிபர்கள் பாடசாலைகளில் ஆளுமையுடன் செயற்பட்டு நல்ல எண்ணங்களை எண்ணி நமது பிள்ளைகளின் கல்விச் செயற்பாட்டுக்கு தலைமை தாங்கி செயல்படுவதனால்தான்; பாடசாலைகள் கல்விச் செயற்பாடுகளையும் பெற்று நமக்கு பெருமைகளை ஈட்டித்தருகின்றன. ஆரம்ப காலத்தில் அக் – இக்றஃ வித்தியாலயம் வளத்தட்டுப்பாட்டுடன் செயற்பட்டது.
முன்னாள் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் மத்திய அரசாங்க அமைச்சராகவும், நான் கிழக்கு மாகாண அமைச்சராகவும் பதவி வகித்த காலத்தில் எங்களால் முடிந்தளவு அரசியல் அதிகாரங்களை பாவித்து கிழக்கு மாகாணத்தில் முடிந்தளவு மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்தோம். எங்களுக்கு கிடைத்த அரசியல் அதிகாரத்தின் ஊடாக குறிப்பாக கல்வித்துறைக்கு பெரும் பணி புரிந்தோம். அக்கரைப்பற்று வலயத்தில் பல கோடி நிதியில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலைக் கட்டிடங்களை திறப்பு விழாக்கள் நடாத்தப்படாமலே இயங்கி வருகின்றது.
அல் இக்றஃ வித்தியாலயத்தின் கல்வி வளர்ச்சியில் அதிபர் திருமதி அஸ்ஹர் அவர்களின் அர்ப்பணிப்பான சேவையின் காரணமாக இக்கல்லூரி நமது கல்வி வலயத்தில் நற் பெயருடனும், பெருமைகளுடன் செயற்பட்டு பல சாதனைகளை புரிந்துள்ளமை பாராட்டப்பட வேண்டியதாகும். அதிபர் திருமதி அஷ்ஹர் அவர்களின் ஆளுமை திறனும், தலைமைத்துவ பண்புகளால்தான் இக்கல்லூரி குறுகிய காலத்தில் பல சாதனைகளைப் பெற்று நமது பிரதேச ஆரம்ப கல்வித்துறைக்கு பெரும் பணி புரிந்து வருகின்றன. மாணவர்களிடையே அறிவுத் திறனையும், பண்பாட்டு விழுமியங்களையும், நல்ல பண்பாடுகளையும் வளர்த்துள்ளது குறித்து நாம் மகிழ்ச்சி அடையக்கூடியதாக அமைந்துள்ளது.
நமது சமூகத்தில் சிறந்த கல்வி செயற்பாடுகளினால் நமது பிள்ளைகளின் கல்வித்துறைக்கு தலைமை தாங்கி பாடசாலைகளின் முகாமைத்துவம் சிறப்பாக செயற்படுவதற்கு அர்ப்பணிப்போடு செயற்பட்டு வரும் கல்வியாளர்களின் பிள்ளைகளை இறைவன் சாதனையாளர்களாகவும் பெரும் பதவிகளை வகிக்கக் கூடியவர்களாகவும் ஆக்கியுள்ளான் என்பதனை நாம் நமது வாழ்க்கையில் யதார்த்த பூர்வமாக அறிந்து கொண்டிருக்கின்றோம்.
நமது மக்களுக்காக நடைபெறும் நல்ல திட்டங்களிலும், கல்வித் துறை அபிவிருத்திகளிலும் எங்களால் முடிந்தளவு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம்.
கிழக்க மாகாணக் கல்விப் பணிப்பாளர் கலந்து கொண்டிருக்கும் இந்நிகழ்வில் அக்கரைப்பற்று கல்வி வலயம் தொடர்பான சில கருத்துக்களை முன்வைக்கவுள்ளேன். அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகளின் நிர்வாகத்தில் அரசியல்வாதிகள் தலையிடுவதனால் பல பாடசாலைகளின் நிர்வாகம் சீர்குலைந்துள்ளதுடன் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலமை தொடருமானால் அக்கரைப்பற்று வலய கல்வி வளர்ச்சியில் பாரிய பிரச்சினைகளை எதிர்காலத்தில் அக்கரைப்பற்று கல்வி வலய சமூகம் சந்திக்க வேண்டிய ஓர் நிலமை ஏற்படும். எனவே, இது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
இக்றஃ வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக நியமிக்கப்படவுள்ள யாசின் அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் சில காலங்கள் அதிபராக கடமை புரிந்தவர். புதிய அதிபருக்கு இக்ஹஃ வித்;தியாலயத்தில் பல சவால்கள் உள்ளன. சிறந்த முகாமைத்துவத்துடனும், அர்ப்பணிப்போடும் செயல்பட்டு இக்கல்லூரியின் கல்வி தரத்தினையும், சிறந்த பெயரினையும் முன்னாள் அதிபர் பெற்றுத் தந்துள்ளார். ஏழை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படாத வகையில் இக்கல்லூரியின் நிர்வாகத்தினை செயற்படுத்துவதில் பாரிய பொறுப்புக்களை சுமந்து உள்ளீர்கள். இதனை ஒரு சவாலாக ஏற்று செயல்பட வேண்டும். இல்லையெனில் அதிபர் திருமதி அஸ்ஹரின் சிறந்த பணியினை நமது சமூகம் ஒப்பிட்டுப் பேசிக் கொண்டிருக்கும். அட்டாளைச்சேனைப் பிரதேச ஆரம்ப கல்வியில் சிறந்து விளங்கும் இக்கல்லூரியின் வளர்ச்சியில் என்றும் ஒத்துழைப்பு வழங்குவேன் எனக் குறிப்பிட்டார்.