தமிழர்களும் முஸ்லிம்களும் பகைத்துக்கொண்டு ஒருபோதுமே வாழமுடியாது : அமைச்சர் றிசாத் !

 -சுஐப் எம் காசிம்-

 

  தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்வதன் மூலமே இனி வரும் காலங்களிலும் நமது ஆயுள் எஞ்சியுள்ள காலங்களிலும் நிம்மதியாக வாழமுடியுமென்று அமைச்சர் ரிசாட்பதியுதீன் தெரிவித்தார் மன்னார் முருங்கனில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையம் அங்குரார்பபண நிகழ்வில் அவர் சிறப்பதிதியாக பங்கேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறான கருத்தை அவர் தெரிவித்தார்.

7M8A0254_Fotor

 

  இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அபோஸ்தலர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை பிரதம விருந்தினராகவும் சிறப்பு அதிதிகளாக குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், நானாட்டான் பிரதேச செயலாளர் எம் பரமதாசன் ஆகியோரும் பங்கேற்றனர். மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மேலும் கூறியதாவது, தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் வாழ்ந்தமைக்கு யுத்தமும் பிரதான காரணம்.

 

  ஓர் இனம் மற்றைய இனத்தை சந்தேகக் கண் கொண்டு பார்த்ததன் விளைவு விரிவடைந்து அவர்களை எதிரிகளாக கருதும் நிலை ஏற்பட்டது. நாற்பத்தெண்டாம் ஆண்டு நமக்குக்கிடைக்கப்பெற்ற சுதந்திரத்தைத் தொடர்ந்து இனங்களுக்கிடையே விரிசல் தொடங்கியதை நாம் மறந்து விட முடியாது. ஏதோ காரணங்களுக்காக ஓர் இனம் துன்பப்பட்டால், வேதனைப்பட்டால், அழுதால் அநாதையானால் மற்றைய இனம் மகிழ்ச்சியடையும் ஒரு கேவலமான நிலை நம்மிடையே வளர்ந்துள்ளது. தனிப்பட்ட இருவரின் சண்டையை இனங்களுக்கிடையிலான, மதங்களுக்கிடையிலான சண்டைகளாக மாற்றி உயிர்களை காவு கொடுக்கும் பரிதாப நிலையை இன்று நாம் காண்கின்றோம். கடந்த முப்பது வருடங்களாக நாம் பட்ட துன்பங்கள் போதும். இழந்ததும் போதும். இழப்பதற்கு நம்மிடம் இனி ஒன்றும் இல்லை.

 

 பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு கல்வி புகட்ட முடியாத பரிதாப நிலையில் இருக்கின்றனர். விதவைத்தாய்மார்கள் வாழ்வதற்கு ஆதாரமின்றி காலத்தைக்கடத்துகின்றனர். போராட்டத்தில் பங்கு பற்றி புனர்வாழ்வு பெற்ற பன்னிரண்டாயிரம் போராளிகள் தாம் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் கதிகலங்கி நிற்கின்றனர். அவர்களது இளமைக்காலம் அநியாயமாக கழிந்துவிட்டது. கல்வி கற்கும் காலம் கடந்து விட்டது. ஊனமுற்றவர்கள் நமது சமூகத்தில் ஏராளம். இந்த நிலையில் இவர்களை தேடிச்சென்று உதவி செய்யும் பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு நிறைய இருக்கின்றது. அதிகாரமும் அரசியல் அந்தஸ்தும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. எப்போதும் கிடைப்பதுமில்லை. எனவே பதவியிலிருக்கும் போது தான் நாம் பணியாற்ற முடியும். இனவாதத்தையும் மதவாதத்தையும் விதைத்துக்கொண்டு அதற்கு எண்ணெய் ஊற்றிக்கொண்டு இருப்போமேயானால் நமது சமூகம் இன்னும் பின்னோக்கியே செல்லும். யுத்தத்தின் வடுவால் பாதிக்கப்பட்ட மக்களை ஆற்றுப்படுத்தும் பொறுப்பு நமக்கு இருக்கின்றது.

 

 மதத்தால் , கட்சியால் நாம் வேறுபட்டிருந்த போதும் இந்த மண்ணின் சொந்தக்காரர்கள் என்ற வகையில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டு நமது மக்களுக்கு உழைக்க வேண்டும். மக்கள் வாழ்விலே உயர்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்த வேண்டும். எனது வாழ்விலே நான் பல்வேறு சவால்களை சந்தித்திருக்கின்றேன். அந்த அனுபவத்தின் அடிப்படையில் நான் இவ்வாறான கோரிக்கையொன்றினை முன்வைக்கின்றேன். மன்னார் மாவட்டம் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒன்று. இங்குள்ள அரசியல்வாதிகளுக்கிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்த போதும் அபிவிருத்தி என்று வரும்போது நாம் ஒன்றுப்பட்டிருந்தால் நாம் எப்போதோ முன்னேறியிருக்கலாம்.

 

  மன்னார் நகரை நாம் ஓர் அழகுபுரியாக மாற்றியிருக்க முடியும். மன்னார் மாவட்டத்தில் வெளியார் வந்து நமது வளங்களை சூறையாடிச் செல்கின்றனர். எந்தவிதமான அனுமதியின்றி கிரவல் மண்ணை அகழ்ந்து செல்கின்றனர். இந்திய மீணவர்கள் தொடர்ந்தும் எமது கடல் எல்லைக்குள் புகுந்து அட்டகாசம் புரிகின்றனர். வெளியாரின் இந்த தலையீட்டுக்கு நாம் இனியும் இடமளிக்கப்போவதில்லை. இது தொடர்பில் அபிவிருத்திக்கூட்டத்தில் ஒரு தீர்கக்கமான முடிவை மேற்கொண்டுள்ளோம். எங்களைப் பொறுத்த வரையில் சட்டம் எல்லாருக்கும் சமமே. எங்களைப்போன்ற அரசியல்வாதிகளின் பெயரைச்சொல்லி சிலர் தவறான முறைகளில் வளங்களை அபகரிக்கின்றனர். இதற்கு என்றும் நாம் அனுமதிக்கப்போவதில்லை. வெளி மாவட்டத்தில் உள்ளோர் எம்மை அச்சுறுத்தி ஆதிக்கம் செலுத்தி எமது சொத்துக்களை சூறையாடுவதை பொறத்துக்கொண்டிருக்க முடியாது.

 

 இந்த மாவட்டத்தைச் சேர்ந்தோர் அரசியலில் உயர் அந்தஸ்தில் இருக்கின்றனர். நாடளுமன்றத்தின் சபாநாயகரின் ஆசனத்தில் அமரக்கூடிய ஒருவர் நம் மத்தியில் இருக்கின்றார். ஏழைக்குடும்பத்தில் பிறந்து கிராமத்தில் படித்து, வளர்ந்து இன்று நமது மாவட்ட மக்களுக்கு பெருமை சேர்க்கும் செல்வம் அடைக்கலநாதன் இன்று மக்கள் பிரதிநிதிகளை வழிநடத்தும் ஆசனத்தில் அமர்ந்திருப்பதைக்கண்டு நான் மனம் பூரிப்படைவதுண்டு. அதே போன்று சிறந்த சட்டத்தரணியான துடிப்புள்ள இளைஞர் டெனீஸ்வரன் நமது மன்னார் மக்களுக்கு கிடைத்த அரிய சொத்து. இவ்வாறு அமைச்சர் கூறினார்.