“முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விழிப்புணர்ச்சிக்காகவும், கல்வி உயர்ச்சிக்காகவும் பல்வேறு அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டு வாழ்ந்த மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்குப் பின்னர், நமது சமூகத்தில் அவருக்கு நிகரான ஒரு இளந்தலைவராக றிசாத் பதியுதீனை நான் காண்கின்றேன்” இவ்வாறு மன்னார், காக்கையங்குளம், அல்/மதீனா வித்தியாலயத்தில் இடம்பெற்ற, புதிய கட்டிடத் திறப்பு விழாவில் அதிதிகளில் ஒருவராகப் பங்கேற்ற, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த, முன்னாள் பிரதி அமைச்சர் எஸ்.எஸ்.எம்.அபூபக்கர் தெரிவித்தார்.
“நான் இதனை முகஸ்துதிக்காகக் கூறவில்லை. எவரையும் திருப்திப்படுத்துவதற்காகவும் கூறவில்லை. அந்த அவசியமும் எனக்குக் கிடையாது. மர்ஹூம் அஷ்ரப் சில சமயங்களில் விடுகின்ற சிறு தவறுகளைக் கூட நான் விமர்சித்ததுண்டு.” என்றும் முன்னாள் பிரதி அமைச்சர் கூறினார்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற இந்த விழாவில், கெளரவ அதிதிகளாக மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், மடு வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயிண்டன் ஆகியோரும் உரையாற்றினர். பாடசாலை அதிபர் பிலால் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் பிரதி அமைச்சர் அபூபக்கர் மேலும் கூறியதாவது,
இந்த விழாவில் நான் உண்மைகளை உண்மைகளாகச் சொல்ல வேண்டும். மனதில் ஒன்றும், வெளியில் ஒன்றும் பேசுபவன் நான் அல்லன். கடந்த காலங்களில் இந்தப் பிரதேச மக்களுக்கும், குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்துக்கும் தூய்மையான அரசியல் செய்தவன் நான். இன்று முஸ்லிம் சமுதாயத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களையும், அரசியல்வாதிளையும் நாம் காண்கின்றோம். ஆனால், அனைவரையும் விட ஒரு வித்தியாசமான தலைவராக, நான் அமைச்சர் றிசாத்தை காண்கின்றேன். அவர் துடிப்புள்ளவர். துணிவுள்ளவர். சமுதாயத்துக்காக எந்த சந்தர்ப்பத்திலும் பயமில்லாமல் குரல் கொடுப்பவர். அவர் ஓர் ஆச்சரியமான சகோதரராக இருக்கின்றார். இவ்வாறு ஆற்றல் உள்ள, திறமையுள்ள அமைச்சர் றிசாத் இலங்கயில் வாழும் 20 இலட்ச முஸ்லிம்களின் தேசியத் தலைவராக தற்போது உருவாகி வருகின்றார்.
இறைவனும் அவருக்குப் பக்கபலமாக இருக்கின்றான் என்பதையே எனது இதயம் உணர்கின்றது. முஸ்லிம்கள் அவரின் கரங்களை பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. முஸ்லிம்களின் ஏக தலைவராக அவர் பரிணமிக்கும் பட்சத்தில், சிறுபான்மைத் தமிழர்களுக்கும் அது ஒரு பலமாக இருக்கும். அத்துடன் இந்நாட்டில் வாழும் பெரும்பான்மைச் சகோதரர்களுடன், சிறுபான்மை இனங்கள் புரிந்துணர்வுடன் வாழ்வதற்கு இது வழிவகுக்குமென நான் திடமாக நம்புகின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.