முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஒப்படைத்தமை கட்சி அல்லது நாட்டின் மீதுள்ள அன்பினால் அல்ல என, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தான் கட்சி மற்றும் நாட்டை நேசிப்பதாக ராஜபக்ஷ தினம் தினம் கூறுவது பொய்யே அன்றி உண்மை அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்ததும் உடனடியாக, கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், இலஞ்சம், மோசடி போன்றன தொடர்பில் வலுவான குரல் எழுப்பப்பட்டதோடு, அது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதியினது ஆதரவாளர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்ததாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது, ஷிராந்தி ராஜபக்ஷ முன்னாள் முதற் பெண்மனி எனவும், நாமல் ராஜபக்ஷ அவரது புதல்வர் என்பதோடு பாராளுமன்ற உறுப்பினர் எனவும், வந்தது போனவற்றுக்கு எல்லாம் அவர்களை கைதுசெய்ய முடியாது எனவும், எனினும் நடைபெறும் விசாரணைகளுக்கு தான் இடையூறு விளைவிக்க மாட்டேன் எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, விசாரணை தொடர்ந்தும் இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்ததாக திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், அந்த நேரத்தில் சிரிலிய கணக்கு விடயம் மற்றும் ஷிராந்தி மற்றும் நாமல் தொடர்புபட்டிருப்பதாக கூறப்பட்ட பிரச்சினைகளில் இருந்து அவர்களைக் காக்கவே மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் பொறுப்பை கைவிட்டுச் சென்றதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.