நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி தலைவர் பதவியை பறித்து கொண்டனர் : மஹிந்த !

president-mahinda-rajapaksa-newsfirst-626x380
யானையின் வாலை பிடித்து சொர்க்க லோகத்திற்கு செல்ல எவருக்கும் மக்கள் ஆணை வழங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வாலைப் பிடித்த கமராள அதனை கைவிட்டால், வாலுடன் கீழே விழ நேரிடும். அவர் சென்றால் பரவாயில்லை. யானையின் உடலை பிடித்து கொண்டு செல்லும் பயணம் அந்தளவுக்கு இனியதாக இருக்காது எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

நீர்கொழும்பில் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதியின் தலைமையில், அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சில தீர்மானங்களை எடுப்பதற்காக நீர்கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள ஹொட்டல் ஒன்றில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 

இங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 96 பேருக்கு யானையுடன் பயணம் செல்ல மக்கள் அனுமதி வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நானே ஒப்படைத்ததாக கூறுகின்றனர். உண்மையில் அப்படி நடக்கவில்லை.  

ஜனாதிபதி தேர்தலின் பின்னர், நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி தன்னிடம் இருந்து தலைவர் பதவியை பறித்து கொண்டனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

இந்த சந்திப்பில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவது. அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வகிப்பவர்கள் மக்களுக்கு செவிமடுத்து பதவிகளை துறக்க வேண்டும். 

கட்சியை பிளவுப்பட்டு போனதற்கான பொறுப்பை கட்சியின் தலைமை ஏற்கவேண்டும். புதிய கட்சிக்கு தலைமையேற்குமாறு மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுப்பது ஆகிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.